திருச்சியில் நடந்த அந்த சம்பவத்தின் மிகப்பெரிய அதிர்வும், அதன் பின்னணியில் தொடர்ந்த இரவின் கனவும் என்னை நிலைகுலைய செய்தது…

0 263

அடர்ந்த நடு இரவு உறக்கம்…

“கல்லூரி விட்டு சாலை வழியே பயணித்துக்கொண்டு இருக்கிறேன். எனக்கு முன் சற்றுத்தொலைவில் அந்த பெண் மிதிவண்டியை ஒட்டிக்கொண்டு செல்கிறார்கள், எனக்கும் அந்த மிதிவண்டி ஓட்டிச்செல்லும் பெண்ணுக்குமிடையே இருசக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் செல்கிறார்கள்.

அந்த இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்களில் பின்னல் அமர்ந்திருந்தவன், முன்னே மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்த பெண்ணின் முதுகில் தீண்டல்களை செய்து, சாலையின் ஓரத்தில் பலமாக தள்ளிவிட்டுவிட்டு வேகமாக செல்கிறான். கீழே விழுந்த பெண் வலியால் துடித்து அலறுகிறாள், அவளின் வயிறு சற்று பெரிதாக இருக்கிறது”

சற்று உளறலுடன் திடுக்கிட்டு விழித்தேன்… வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறியை தாண்டி வியர்த்துக்கொட்டியது…

ஆம், பகல்பொழுதில் நமது சிந்தனை குளத்தில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி ஆழமாய் பாதிக்கின்ற சம்பவங்களே, உறக்கத்தின் போது, மூளையில் உறங்கா செல்களினால் கனவாய் வரும் என்று சிக்மன் பிராய்டு (Sigmund Freud) சொன்னது மிகவும் சரி…

திருச்சியில் நடந்த அந்த சம்பவத்தின் மிகப்பெரிய அதிர்வும், அதன் பின்னணியில் தொடர்ந்த இரவின் கனவும் என்னை நிலைகுலைய செய்தது…

சற்றே நிதானித்து பார்த்தபோது “நிறைமாத கர்ப்பிணியாக என்மனைவி உறங்கி கொண்டிருந்தாள்” எதுவும் சொல்ல இயலாமல் நான்…

மகன் அகமகிழன் இருக்கும் போதும், இரண்டாவது பிள்ளை வேண்டும் என்று எண்ணியதே “பெண் பிள்ளை வேண்டும்” என்ற பேராவலில்தான்…

கர்பிணியாக ஒரு பெண், ஒன்றாம் மாதம் முதல், பிள்ளைபெற்று நான்குகாம் மாதம் வரை அனுபவிக்கின்ற வலியும், வேதனையும் அருகிலிருந்து பார்க்கும் அன்புடைய கணவன்களுக்கே தெரியும்.

கேவலம் 100 ரூபாய்க்காக இது நிகழ்ந்திருக்கிறது என்று நீங்கள் மேம்போக்காக கடந்துவிட முடியாது. அமைப்புமுறையில் மிகப்பெரிய சிக்கல் இருக்கிறது.

தினந்தோறும் பெண்களை சபித்துக்கொண்டும், பாலியல் வன்புணர்வுகளை செய்துகொண்டும், பெண் குழந்தைகளை சீரழித்துக்கொண்டும், உளவியலாகவே பெண்களின் மீது ஆதிக்கத்தை செலுத்தமுடியும் எனும் போக்கை ரசித்துக் கொண்டும், பெண்வழிச்சமூகமே தமிழர் சமூகம் என்று உணர்ந்த போதும் அதை ஏட்டளவில் ரசித்துக்கொண்டும் நகர்கின்ற ஆதிக்கவாதிகளின் நடுவே… “தேசிய மகளீர்தினம்” கொண்டாட எப்படி மனம் வருகிறது ? இது எப்பேர்ப்பட்ட முரண் ?

நிறைமாத கர்ப்பிணியாக மனைவி சுமக்கும் குழந்தை பெண்பிள்ளையாக இருக்கவேண்டும் என்று கனவு இப்போது பெரிய அச்சத்தினையும் தருகிறது.

நான் அன்பில் மிகவும் பலவீனமானவன் என்பதை முதல்முறை உணர்கிறேன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.