நாளையும் நீயும் நானும் கொலைசெய்யப்படலாம்..!

0 220

ஒரு கனவை கொலை செய்த பாவிகள்..!
——————————————————–

செய்தியை கேள்விப்பட்டதிலிருந்து நெஞ்சம் பதறுகிறது..

காக்கி உடை அணிந்துவிட்டால் மனித தன்மை அற்றுஇவ்வளவு மோசமாக மனம் மரத்துப்போகுமா..

திருச்சியில் போக்குவரத்து காவல்துறையின் அயோக்கியத்தனத்தால் கர்ப்பிணி பெண்ணும் அவரது வயிற்றில் இருந்த மூன்று மாத சிசுவும் கொல்லப்பட்ட செய்தியை பார்த்ததும் எழுதும் இந்த பதிவை அத்தனை அசிங்கமான கெட்ட வார்த்தைகளால் தான் நான் எழுதியிருக்க வேண்டும்..

திருச்சியில் கணேஷ் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து காவலர்கள் வசூல் வேட்டையில் ஈடு பட்டிருந்தபோது( கண்காணிப்பு பணியில் என்றும் அதை சொல்லலாமாம்..) அந்த வழியாக தன் மூன்றுமாத கர்ப்பிணி மனைவி உஷாவுடன் வந்த ராஜா என்பவர் நிற்காமல் சென்றிருக்கிறார்.

உடனே காவல்துறையின் கடமை பொங்கி எழுந்துவிட்டது. காமராஜ் என்று காக்கி உடை அணிந்த பொறுக்கியும் மற்றொரு காவலருடன் இன்னொரு பைக்கில் விரட்டி சென்று தம்பதிகள் சென்ற பைக்கை எட்டி உதைத்திருக்கிறார்.

இதில் பைக்கோடு கீழே விழுந்த உஷா மீது வாகனம் ஏறி இறங்கியதில் அவரும்.. வயிறு கிழிந்து வெளியே வந்த சிசுவும் பலியானார்கள். அப்படியும் விடாமல் கணவனையும் அடித்திருக்கிறார்கள் என்றால் இவனுங்களையெல்லாம் என்னவென்று சொல்வது..

இதை செய்தியாக கேள்விப்படும்போதே நெஞ்சம் பதறுகிறது. இப்படி ஒரு கொடூரத்தை செய்தவனுக்கு பெயர் காமராஜ் என்று மக்களை காக்கும் காவலராக இருக்கிறவன் என்று சொன்னால் அது எவ்வளவு கேவலமானது.

மனுசனாடா நீ.. உனக்கு காமராஜ் என்று பெயர் வைத்து பெருந்தலைவரையும் உன் பெற்றோர் அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள்.

அந்த பகுதி மக்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். காவல்துறை அதிகாரிக்கு செருப்பு வீச்செல்லாம் நடந்திருக்கிறது. தமிழக காவல்துறையில் பணியில் இருக்கும் ஒவ்வொரு காவலர்களும் வெட்கி தலை குனிய வேண்டிய கொடூரமான அவமானகரமான நிகழ்வு இது..

எல்லா பிரச்சினைக்கும் ஹெல்மெட் மட்டுமே தீர்வு என்பதே அடி முட்டாள் தனம். சாலை சரியாக இருக்காது.. ரோட்டை அலசிக்கொண்டு செல்லும் பைக் மனநோயாளிகள்.. குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் குடிகாரர்கள் உட்பட சாலை விபத்துக்கு எவ்வளவோ காரணங்கள் இருக்கின்றன.

ஆனால் நம் ஸ்கார்ட்லாந்து யார்டு காவல்துறைக்கும், பல லட்சங்கள் சம்பளம் வாங்கிக்கொண்டு ஏசி கார்களில் சொகுசாக போகும் அதிகார மையத்தில் இருப்பவர்களுக்கும்.. ஹெல்மெட்டை கட்டாயப்படுத்திவிட்டால் போதும்.. எல்லா பிரச்சினையும் முடிந்துவிடும்.

இந்த கட்டாய ஹெல்மெட் என்பதே போக்குவரத்து போலீசாருக்கான வசூல் வேட்டைக்கானது. அடிப்படையில் ஒருவருக்கு அவரது உயிர் மீது இல்லாத அக்கறை ஹெல்மெட்டை கட்டாயமாக்குபவர்களுக்கு இருந்துவிடுமா என்ன.

ஹெல்மெட் போட்டு கழுத்து வலிப்பதால் சற்று கழட்டி வைத்தால் கூட போதும்.. உடனே அதெல்லாம் தெரியாது.. ஹெல்மெட் போடல.. என்று போலீசார் வசூலில் ஈடுபடுகிறார்கள். இதுபோன்ற செயல்களில் எங்கேயாவது பொதுமக்களின் மீது அக்கறை இருக்கிறதா..

சொல்லப்போனால் ஹெல்மெட் போடுவதாலும் கூட விபத்துகள் நடக்கின்றன. கடிவாளம் போட்ட குதிரைபோல் இடது வலதில் வரும் எதையும் கவனிக்காமல் ஹார்ன் அடித்தாலும் கேட்காமல் வாகனம் ஓட்டும் பலரை கவனித்திருக்கிறேன்.

லைசென்சை மறந்துவிட்டு வந்துவிடுவது.. ஹெல்மெட் போடாமல் வந்துவிடுவது என்று சாதாரண விசயங்களை பெரிதாக்கிவிட்டு பெரிய குற்றவாளிகளை டீலில் விடுவதுதான் காவல்துறையின் வீரம்.

குடி குடியை கெடுக்கும் என்று தெரிந்தும் கட்டாயமாக நிறுத்த வேண்டிய டாஸ்மாக் சாராய வியாபாரத்தை தடுக்காமல், பிரச்சாரம் செய்து விழிப்புணர்வு உண்டு பண்ண வேண்டிய ஹெல்மெட் போன்ற விசயங்களை கட்டாயப்படுத்துவது என்பது எவ்வளவு முட்டாள்தனமானது.

இந்த விசயத்தில் கீழ் மட்ட காவலர்கள் மட்டும் பொறுப்பு அல்ல.. மேலே இருக்கும் அதிகாரிகளுக்கும் இந்த கொலை குற்றத்தில் பங்கு உண்டு. ஒவ்வொரு மாதமும் இவ்வளவு வசூல் என்று டார்கெட் பிக்ஸ் பண்ணி உத்தரவிட்டால் கீழ் நிலையில் இருக்கும் காவலர்கள் இப்படி கொலைவெறியோடுதான் வேட்டைக்கு கிளம்புவார்கள்.

இப்போது கர்ப்பிணி பெண் உஷா, காவலரின் அடாவடியால் கொல்லப்பட்ட விசயத்தில், அப்படி விரட்டி வந்து ஹெல்மெட் போடாதவர்களை பிடிக்க வேண்டும் என்ற ஏதேனும் அவசியம் இருக்கிறதா.. அவர்களின் வாகன் எண்ணை குறித்து வைத்து நோட்டீஸ் அனுப்பி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் ஓடும் வாகனத்தை மிதித்து அவர்களை கீழே தள்ளிவிடும் உரிமை எவன் கொடுத்தது இவர்களுக்கு..

காக்கி உடை அணிந்துவிட்டால் மனித தன்மை போய்விடுமா.. உங்க வீட்டில் மனைவி பிள்ளைகள் கிடையாதா..

அப்படி வசூல் பண்ணி கொண்டுப்போகும் நூறு ரூபாய் பணம் உங்களைப்பார்த்து காறி துப்பாது மானங்கெட்டவர்களே..

கரு உருவான தகவல் அறிந்த கணத்தில் அந்த தம்பதிகள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள்..

வீட்டை விட்டு கிளம்பிய போது, வயிற்றில் இருந்த அந்த சிசு உட்பட மூவரும் எவ்வளவு மகிழ்ச்சியாக கிளம்பிருப்பார்கள்..

அந்த கணவன் மனைவியை பரிசோதனைக்காக மருத்துவரிடம் காட்ட கூட அழைத்து சென்றிருக்கலாம்..

நூறு ரூபாய் லஞ்சத்திற்காக ஒரு குடும்பத்தின் கனவை கொலை செய்துவிட்டீர்களே பாவிகளே..

தாயின் வயிறு கிழிந்து சாலையில் விழுந்து மரணித்த அந்த மூன்று மாத சிசுவின் கைகளில் உங்களுக்கான லஞ்சப்பணம் இருந்ததை பார்த்தீர்களா..

பொறுக்கி எடுத்துக்கொள்ளுங்கள் மானங்கெட்டவர்களே..

த்தூ..

நன்றி : கார்ட்டூனிஸ்ட் பாலா
லைன்ஸ் மீடியா

You might also like

Leave A Reply

Your email address will not be published.