கழிவறை துர்நாற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த அரசுப் பள்ளி ஆசிரியரின் சூப்பர் ஐடியா!

0 287

இலவசம் என்றால், வசதியானவர்களுமே பெற்றுக்கொள்வது மனித இயல்பு. ஆனால், அரசு ஒரு விஷயத்தைக் கட்டணமின்றியும், அதனுடன் பல உதவிப் பொருள்களைச் சேர்த்து அளித்தும் பலரும் தவிர்ப்பது ஆச்சர்யமானது இல்லையா?

அரசுப் பள்ளிகளைத்தான் சொல்கிறேன். மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்கள், புத்தகப் பை, காலணி உட்படப் பலவற்றை விலையில்லாமல் கொடுத்து, அரசுப் பள்ளிக்கு படிக்க அழைக்கிறது தமிழக அரசு. ஆனால், கடன் வாங்கியாவது தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளியில் சேர்க்கும் மோகம் பெற்றோர்களிடம் இருக்கிறது.

இந்த மனநிலையை மாற்றுவதற்கு, தங்கள் பள்ளியைச் சிறப்பானதாக மாற்றும் முயற்சிகளில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பலரும் ஈடுபடுகின்றனர். அவர்களில் ஒருவர்தான், சேரனூர் நடுநிலைப் பள்ளியின் முருகேசன். தான் பணிபுரியும் பள்ளியில் மேற்கொள்ளும் மாற்றங்களைப் பகிர்கிறார்.

“செஞ்சி டு விழுப்புரம் வழியில் அப்பம்பட்டிலிருந்து பிரிந்துசெல்லும் சாலையில் 4 கிலோமீட்டர் வந்தால், எங்களின் சேரனூர் பள்ளிக்கு வந்துவிடலாம்.

இதை ஏன் இவ்வளவு விரிவாகச் சொல்கிறேன் என்றால், அவ்வளவு உள்பகுதியில் இருக்கும் பள்ளி இது. இந்த ஊரின் மொத்த மக்கள்தொகையே 1000 பேர்தான் இருப்பார்கள். எளிமையான பொருளாதார வருமானம் கொண்டவர்களே.

முதல் தலைமுறையாக கல்விக்கூடத்துக்கு வரும் குழந்தைகளும் இருக்கின்றனர். இந்த ஆண்டில், 5 வயது பூர்த்தியான குழந்தைகள் மொத்தமே 11 பேர் இருந்தனர். அவர்களில் 10 பேரை எங்கள் பள்ளியில் சேர்த்திருக்கிறோம்.

தனியார் பள்ளி இருந்தாலும், அரசுப் பள்ளியின் மீது நம்பிக்கை வைத்து, சேர்த்தற்குப் பாராட்டைத் தெரிவித்தோம். அவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் விதத்தில், சிறப்பான கற்பித்தலையும் தருவோம்.

எங்கள் பள்ளி மாணவர்கள் ஓவியம், பேச்சுப் போட்டி போன்றவற்றில் மாவட்ட அளவிலான பரிசுகளைப் பெற்றுவருகின்றனர். கணினி வழியே கற்பதில் மாணவர்கள் கூடுதல் ஆர்வம் காட்டுகின்றனர்” எனப் பள்ளியின் பெருமைகளை பட்டியலிட்டுத் தொடர்ந்தார்.

“மரங்களின் நிழலோடு அமைதியான சூழலில் பள்ளி அமைந்திருக்கிறது. ஆனால், கழிவறையைப் பராமரிப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்தன. அதனால், மாணவர்களில் சிலர் கழிவறையைப் பயன்படுத்தாமல் திறந்தவெளியில் சிறுநீர் கழித்துவந்தனர்.

பலமுறை சொல்லியும் இந்தப் பழக்கத்தை மாற்றமுடியவில்லை. துர்நாற்றம் வீசுவதையும் தவிர்க்க முடியவில்லை. இது மாணவர்களின் ஆரோக்கியத்தைக் கெடுக்குமே என வருந்திகொண்டிருந்தபோதுதான், யூடியூப்பில் ஒரு வீடியோவைப் பார்த்தேன். வாட்டர் கேன்களால் கழிவறை உருவாக்கியிருந்தார்கள்.

அது எனக்கு ஆச்சர்யத்தை அளித்தது. நமது பள்ளியிலும் அதைச் செயல்படுத்தலாமே என்ற யோசனையையும் தந்தது. உடைந்த வாட்டர் கேன்களைக் குறைந்த விலைக்கு வாங்கினேன். அதற்குத் தேவையான பிளாஸ்டிக் குழாய்களையும். அவற்றைப் பொருத்துவதற்கான செலவுகளைப் பகிர்ந்துகொள்ள என் நண்பர்கள் சிலர் முன்வந்தார்கள்.

சக ஆசிரியர்களும் மகிழ்ச்சியோடு உதவினர். அதனால், விரைவாக இந்தப் பணியைச் செய்துமுடித்தோம். இதில் ஒரு சிறப்பான அம்சம் என்னவெனில், இந்தக் கழிவறையைப் பராமரிப்பது மிகவும் எளிது.

நாங்கள் எடுக்கும் முயற்சிகளைப் பார்த்த மாணவர்களும் அதற்கு தகுந்த மதிப்பளிக்க வேண்டும் என நினைத்தனர். இப்போது, ஒரு மாணவர்கூட திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பதில்லை. கழிவறையைப் பயன்படுத்துகின்றனர்.

அதனால், சிறுநீர் துர்நாற்றம் சுத்தமாக நின்றுவிட்டது. மாணவர்களின் ஆரோக்கியமும் காக்கப்பட்டுள்ளது. இப்படி ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயங்களையும் கவனித்து அதற்கான தீர்வுகளை எட்ட வேண்டும் என்பதே எங்களின் எண்ணம்” என்கிறார்.

பணம் இல்லாததால் கல்வி கிடைக்கவில்லை என்று ஒருவர் சொல்லாத நிலையைத் தக்கவைத்திருப்பவை அரசுப் பள்ளிதாம். அதைச் சிறப்பாகக் கொண்டுசெல்லும் இவர் போன்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தாராளமாகப் பகிர்ந்துகொள்வோம்.

வாழ்த்துக்கள் சாா்.

தமிழ் மண்ணே வணக்கம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.