தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சில கேள்விகள்..!

0 328

கலவரக்காரர்கள் கட்டுக்கடங்காமல் வன்முறையில் ஈடுபட்டதால் தான் துப்பாக்கிச்சூடு நடத்தியதாய் காரணம் கற்பிக்கப்படுகிறது அரசுத் தரப்பில். அதை சரி என்றே வைத்துக் கொள்கிறோம்.

ஆனாலும் மனதில் எழும் ஒரு சில கேள்விகள் இந்த துப்பாக்கிச்சூட்டில் வேறு உள் நோக்கம் இருக்குமோ என்றே சிந்திக்க தூண்டுகிறது.

ஏனெனில், போலீசார் துப்பாக்கிச்சூடு தொடங்கிய போது வானத்தை நோக்கி ஒரு முறை கூட சுடவில்லை எனத்தகவல். ஸ்னைப்பர் வீரர்கள் மப்டி உடையில் இருந்து உள்ளனர். அவர்கள் போராட்டக்களத்திற்கு வெகு தூரத்தில் இருந்து துப்பாக்கிச்சூடு தொடங்கி உள்ளனர்… இதற்கு ஆதாரங்களாய் பல காணொளிகள் வெளிவந்துள்ளன.

இலக்கு தவறக்கூடாது என்பதற்காகவே ஸ்னைப்பர் வீரர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். ஸ்னைப்பர் வீரர்கள் 7.2 mm துப்பாக்கி பயன்படுத்தியுள்ளனர். ஆப்டிகல் சைட் 1300 மீட்டர். ஓப்பன் சைட் 1200 மீட்டர். 1300 மீட்டரில்(1.3 கிலோ மீட்டர்) ஒரு முடி அளவு கூட குறி தவறாமல் சுடலாம்.

ஒரு சாதாரண மக்கள் போராட்டத்தைக் கட்டுப்படுத்த எதற்காக ஸ்னைப்பர்கள் பயன்படுத்தப்பட வேண்டும்?

இலக்கு தவறாமல் மிகச்சரியாக சுடக்கூடிய துப்பாக்கியை வைத்து கால்களில் சுடாமல் மார்பிலும் வாயிலும் சுட்டதன் நோக்கம் என்ன?

துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி அளித்த அதிகாரி யார்?

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டம் 22ம் தேதி மிக பலமாய் வலுக்கும் என முன்கூட்டியே காவல்துறையினருக்கு தெரிந்திருந்தும், முன் தினமே போராட்ட ஒருங்கிணைப்பாளர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யாதது ஏன்?

முதல் முறை துப்பாக்கி சூடு நடந்த பொழுதே மக்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விட்டு ஓடி விட்டனர்.
அதற்கு பின்னர் அங்கே இருந்த போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்தது யார்?

துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட ஸ்னைப்பர் வீரர்கள் எந்த அணியை சேர்ந்தவர்கள்?
தமிழக படை பிரிவா, துணை ராணுவ படை பிரிவா, தொழில் பாதுகாப்பு படைபிரிவா
இந்திய ராணுவ படை பிரிவா?

இதற்கு முன் இந்திய ஒன்றியத்தில் இது போன்ற கலவரத்தில் ஸ்னைப்பர் வீரர்கள் கொண்டு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளதா?

பொதுமக்கள் மனங்களில் இத்தனை கேள்விகள், பதில்கள் உள்ளனவா தமிழக அரசாங்கத்திடம்?

ஆகவே, இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அச்சுறுத்தல்… Apparently it is Tyranny of government against lay people! பொதுமக்களின் போராட்டக்குணத்தை வேரறுக்கும் செயல். அரசின் அராஜகங்களுக்கு எதிரான மக்களின் எதிர்ப்புக்குரலை ஆரம்பக்கட்டத்திலேயே அவர்களின் தொண்டையை இறுக்கிப்பிடித்து வெளிவாராமல் செய்து, அவர்களின் நியாயமான உரிமைக்கோரல்களை, போராட்ட எண்ணங்களை ஒட்டுமொத்தமாய் ஒடுக்கி வலுவிழக்கச்செய்து, அடக்குமுறைக்கு ஆளாக்கி ஏற்படுத்தப்படும் இனப்படுகொலையின் தொடக்கமாக இருக்கவே வாய்ப்பு. இது தமிழினப்படுகொலை! ஒட்டு மொத்தமாய் ஒரு மாபெரும் புரட்சி வெடிக்காமல் இனி விடிவு இல்லை!

மக்களின் களப்போராட்டத்தை குறித்த தகவல்கள் உடனுக்குடன் வெளிவராமல் இருப்பதற்காய் அவசரகால நடவடிக்கையான இணைய சேவைகள் நிறுத்தம் தற்போது போராட்டக்களத்திலும் அதைச்சுற்றியுள்ள மாவட்டங்களிலும்… சமூக வலைத்தளங்களில் வாயிலாக மக்கள் சிந்தனையை தூண்ட திறன் கொண்டவர்களாகிய நாம் ஒட்டுக்கட்டையாய் அரசின் அராஜகத்துக்கு எதிராய் நிற்காமல், கூகுளில் ஸ்டெர்லைட் டைம்லைனை ஆராய்ந்து, திமுக, ஆதிமுக, மதிமுக என குடுமிப்புடி சண்டை இட்டுக்கொண்டிருப்போமாக. வாழ்க ஜனநாயகம்!

#BanSterlite

You might also like

Leave A Reply

Your email address will not be published.