ஒரு பறவைக்கு தண்ணி கிடைக்கிறது அவ்ளோ கஷ்டமா என நீங்கள் நினைக்கலாம்..! பறவைகளை தேடி இறுதி பயணம்..!

0 578

பேசத் தெரியாதவனையோ, எழுதத் தெரியாதவனையோ கூப்பிட்டு “ஏண்டாப்பா, உங்கூர்ல வெயில் எப்படி?” என்று கேட்டு விட்டால் போதும்… பொரிந்து தள்ளிவிடுவார்கள்.


எப்பேர்ப்பட்டவனையும் என்ன சேதி எனக் கேட்கும் வெப்பகாலம் இது.

அதைத் தாக்காட்ட, எல்லோரும் என்ன சாப்பிடலாம், எப்படி பராமரிக்கலாம்,என்ன உடுத்தலாம், எங்கு தங்கலாம்,எப்போ போலாம், எப்போ வரலாம், என்பது முதற் கொண்டு எல்லாம் யோசிக்கிறோம்.. செய்கிறோம்…

ஆனால் பாருங்கள் , இந்த சின்னஞ்சிறு பறவைகளுக்கும், விலங்குகளுக்கும்,பூச்சிகளுக்கும் அவ்ளோ சாய்ஸ்சஸ் இல்லை..வீடு உண்டு, ஆனால் கூரை இல்லை.

பாடித் திரிய வழியுண்டு, ஆனால் பசிக்கு உணவில்லை, பல நாட்கள் வெயிலில் நா நனைக்க நாலு சொட்டு தண்ணிக்கே நாய் படாதபாடு பட வேண்டி இருக்கும்.

அந்த வாயில்லா ஜீவன்களின் தாகம் போக்க, ஒரு சிறு தொட்டியில் தினமும் நீர் நிரப்பி வையுங்கள்.

இந்த கோடையில் உங்கள் குட்டிஸ்க்ளுக்கு ஒரு குஷியான வேலையை செய்யத்தாருங்கள்.!

ஒரு பறவைக்கு தண்ணி கிடைக்கிறது அவ்ளோ கஷ்டமா என நீங்கள் நினைக்கலாம்.ஆமாம், சில வருடங்களாகவே அதன் நிலை இதுதான்..

முன்பெல்லாம் அருகருகே நீர்த்தேங்கும் நிலைகள் இருக்கும்.தோட்டமோ காடோ வரப்போ வாய்க்காலோ ஏதாவது தண்ணி பாய்ந்து கொண்டிருக்கும்..அதில் தாகம் தீர குடித்து, குளித்து வெப்பம் தணித்துக்கொள்ளும்.

இன்று அவை பெரும்பகுதிக்கும் கட்டிடங்களாக மாறிப்போக, வாழ்விடம் அழிந்து, உணவிடம் அழிந்து, பல வழக்கொழிந்தும் போயின. எஞ்சி இருக்கும் பறவைகளுக்கு, மனசாட்சிக் கொண்டு முடிந்த அளவிற்கு அதற்கான உணவும், உறையுளையும் ஏற்படுத்தித் தர நாம் கடமைப்பட்டுள்ளோம்.

அதன் முதல் கட்டமாக தண்ணீர்த் தொட்டிகளை வைக்கலாம்..

1.வைத்தால் உடனே வந்து விடுமா.?

இல்லை, அப்பகுதியில் பறவைகளே இல்லாது இருப்பின் சற்று தாமதமாகலாம்.. ஆனால் நிச்சயம் வரும்.ஏனெனில் நீர் எங்கிருக்கு எனத்தேடாத பறவையில்லை.அவ்விடம் நீர் இருக்கிறது என ஏதேனும் ஒரு பறவையாவது கண்டு கொண்டால், அது போதும்..அது வரைக்கும் பொறுமை காக்கவும்.ஒன்று போய் பல பறவைகளையும் இட்டு வரும்.

2.என்னென்ன பறவைகள்\விலங்குகள் வரக்கூடும்?

அது உங்கள் இடத்தைப் பொறுத்தது. காகம்,மைனா, சிட்டுக்குருவி,மணிப்புறா,
மாடப்புறா, மரங்கொத்தி, மயில், குயில், கழுகு, அணில், குரங்கு, லாங்கூர் குரங்கு,தவிட்டுக்குருவி, தட்டாம்ப்பூச்சி, ஓணான், தேஞ்சிட்டு,தையல்சிட்டு, ராபின், நீளவால் காகம், ஸ்டார்லிங் பறவைகள்..இப்படி ஒரு பெரிய கூட்டமே என்னோட தண்ணித் தொட்டிக்கு வந்திருக்கு..கீழ புகைப்படங்கள் இருக்கு பாருங்க..உங்க வீட்டுக்கு யார் வாரங்கன்னு பாத்துட்டு சொல்லுங்க.

3. தண்ணீரை எதில வைக்கலாம்?

எதில வேணாலும் வைக்கலாம். எவர் சில்வர் பாத்திரங்கள்,வாய் அகன்ற பிளாஸ்டிக் டப்பாக்கள், மண்சட்டிகள், மண்தொட்டிகள், சிமெண்ட் தொட்டிகள், கல் தொட்டிகள் ..இப்படி உங்க ரசனைக்கும், இருப்புக்கும் ஏற்றவாறு வைக்கலாம்.

4. எங்கு வைக்கலாம்?

வீட்டைச்சுற்றி ,பறவைகள் பயமில்லாமல் அணுகக் கூடிய இடங்களில் வைக்கலாம்.எத்தனை எண்ணிக்கையில் வேண்டுமானாலும் வைக்கலாம்.

5.நீர்த்தொட்டிக்கு ஏதேன்னும் பராமரிப்புகள் உள்ளனவா?

ஆம்..குருவிகள் வந்து நீர் அருந்த பழகிய பின்னர், அதில்குடிக்கவும், குளித்து கும்மாளமிடவும், தவறுதலாக எச்சமிடவும் செய்யும். ஆதலால் நீர் மாசுபடும், அதன் மூலம் பறவைகளுக்கு நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

அதனால் தினம் ஒரு முறை ,பழைய நீரை ஊற்றி விட்டு, ஒரு அலசு அலசிவிட்டு, சுத்தமான தண்ணிக்கொண்டு நிரப்பவும்..டேப் தண்ணியே போதுமானது. தொட்டி பாசம் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளவும்.
நீர் பற்றவில்லை என்றால் காலை மாலை இருவேளை நிரப்பலாம்.


தங்கு தடையில்லாமல் பறவைகள் அங்கு வர,தவறாமல் அங்கு தண்ணீர் கிடைக்கிறது என்பதை நீங்கள் ஊர்ஜிதப் படுத்தவேண்டும்.

6.வேறு என்ன விசேஷங்கள்?

இணையோடு, கூட்டத்தோடு உங்கள் வீடு தேடி வரும் பறவைகள் தரும் ஆனந்தம் ஒப்பற்றது..அதை நீங்கள் கண்டு தான் உணரமுடியும்…நான் சொல்ல முடியாது.
உங்கள் வீட்டு வாண்டுகளுக்கு ஒரு பிடித்தமான வேலையாய் இது இருக்கும்.
வீட்டில் இருந்தபடியே பலவண்ணப் பறவைகளையும் birdwatching பண்ணலாம்.
இயல்பாகவே பிற உயிர்களிடத்தில் ஒரு நேசம், அக்கறை, புரிந்துணர்வு ஏற்படுவதை உணரலாம்.


எப்பேர்ப்பட்ட வேதனைகளையும், மனயிறுக்கங்களையும் தன் சின்னச் சின்ன செய்கைகளால், சப்த்தங்களால் மாற்றிவிடக் கூடியவை அவை.
நல்ல பொழுதுபோக்காகவும் இருக்கும் வீட்டில் இருப்பவர்களுக்கு. எதோ ஒரு இமாலய சாதனையை செய்தவிட்ட பெருமையை மனம் உணரும், திருப்தியில் லயிக்கும்.

இன்னும் என்னென்ன என்பதை நானே சொல்வதை விட,நீங்கள் செய்து பார்த்துவிட்டு என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

நீங்கள் செய்வதோடு இல்லாமல் மற்றவர்களுக்கும் இதை தெரியப்படுத்துங்கள். ஊக்கப்படுத்துங்கள். Please do share and care!!
முடிந்தவர்கள் கூடவே ஒரு கை தானியத்தையும் அங்கே சிதற விடலாம்.
யாரெல்லாம் வைத்திருக்கிறீர்களோ, கமெண்ட்ஸ்ல் புகைப்படங்களோடு என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். என்னை டேக் செய்து உங்கள் அனுபவங்களை பதிவும் செய்யலாம்..…

பதிவுகள் மற்றும் படங்கள் Radha Natarajan அவர்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.