ஸ்டெர்லைட் வரமா..? சாபமா..? இது தான் ஸ்டெர்லைட்டின் உலகப்பின்னணி..!

0 342

ஆலைகள் அவசியம் தான். ஆனால், சுற்றுச்சூழலையும் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் ஆலையால், சுற்றிலும் வசிக்கும் மக்களின் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது என்றால் எப்படி இருக்கும்?

அத்தகைய பதற்றத்தில் இருக்கிறார்கள், தூத்துக்குடி மக்கள். அவர்களின் நிம்மதியை கெடுத்த ஆலை.. ஸ்டெர்லைட்!

உண்மையிலேயே மக்களின் அச்சம் நியாயமானது தானா? மக்களின் எதிர்ப்புக்கு காரணம் இருக்கிறதா? அரசியல்வாதிகளின் நிலைப்பாடு என்ன? என்பது போன்ற பல விசயங்களை அலசுவோம்.

ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை தூத்துக்குடிக்கு வந்ததே தனிக்கதை. இந்த ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வால். லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும், வேதாந்தா ரிசோர்ஸஸ் என்ற நிறுவனத்தின் தலைவர். இந்த நிறுவனத்துக்கு ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல இடங்களில் தாமிரத்தாதுவை வெட்டி எடுக்கும் சுரங்கங்கள் இருக்கின்றன.
இந்தியாவில் வேதாந்தா- ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை தொடங்க திட்டமிட்ட அனில் அகர்வால், அதற்கான இடத்தை குஜராத்தில் தேடினார். ஆனால், அந்த மாநில அரசு அனுமதி தர மறுத்து விட்டது. அடுத்து அவரது பார்வை கோவா மாநிலத்தின் பக்கம் திரும்பியது. ஆனால் அங்கும் அவரது முயற்சி பலிக்கவில்லை. அடுத்து 1994ல் மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் 700 கோடி மதிப்பில் ஸ்டெர்லைட் ஆலையை தொடங்க திட்டமிட்டார். மாநில அரசின் அனுமதியுடன் தொடங்கிய திட்டம் முழுமை பெறுவதற்குள் சோதனையை சந்தித்தது. அதாவது, 200 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் முடிவடைந்த நிலையில் மக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

இதனால் பயந்து போன அப்போதைய மகாராஷ்டிர முதல்வரான சரத்பவார், ‘இந்த ஆலை பற்றி மாநில சுற்றுச்சூழல் வல்லுனர்கள் குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்’ என சமாளிக்க பார்த்தார். ஆனால் தங்கள் கொள்கையில் இருந்து பின் வாங்க மறுத்த அந்த மாநில மக்கள், ‘ஆலையை அகற்ற வேண்டும்’ என்கிற ஒற்றை கோரிக்கையிலேயே விடாப்பிடியாக இருந்தனர். தொடர்ந்து நடந்த போராட்டங்களால் நிலை குலைந்த மகாராஷ்டிர அரசு, ஆலை பணிகளை நிறுத்த உத்தரவிட்டது.

இதனால் அங்கிருந்து கிளம்பிய ஸ்டெர்லைட் நிறுவனம் கர்நாடகா, கேரளாவில் இடம் தேடி அலைந்தது. அந்த மாநில அரசுகள் ஆலைக்கு அனுமதி கொடுக்க திட்டவட்டமாக மறுத்து விட்டன. போபால் விஷ வாயு கசிவு சம்பவத்துக்கு பிறகு பல மாநிலங்களிலும்ஆபத்து மிகுந்த ஆலைகளை அமைக்க எதிர்ப்பு வலுத்ததால், மாநில அரசுகள் பின்வாங்கின.  இதனால் சோர்ந்து போயிருந்த அனில் அகர்வாலுக்கு பச்சை கம்பள வரவேற்பு கொடுத்தது, தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க அரசாங்கம்.

துறைமுக நகரான தூத்துக்குடியில் ஆலையை அமைக்க அனுமதி தர முதல்வர் ஜெயலலிதா சம்மதித்தார். அகர்வாலுக்கு அடித்த இந்த அதிர்ஷ்டத்தை என்ன சொல்வது? காரணம், தூத்துக்குடியில் ஆலையை அமைத்தால் ஆஸ்திரேலியாவில் வேதாந்தா நிறுவனம் வெட்டி எடுக்கும் தாமிர தாதுக்களை அப்படியே கப்பல் மூலம் கொண்டு வந்துவிட முடியும். இந்த ஆலையில் தாமிரத்தை உருக்கி தகடுகளாக மாற்றும் போது ‘பை ப்ராடக்ட்’ என்கிற முறையில் உடன் கிடைக்க கூடிய, தங்கம், சல்ப்யூரிக் அமிலம், பாஸ்ஃபோரிக் அமிலம் ஆகியவற்றையும் நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியும்.

அனில் அகர்வால் கணக்கு இப்படி இருக்கையில், தூத்துக்குடியில் ஆலைக்கு எதிர்ப்பு கிளம்பும் என்பதை அவர் நினைத்து கூட பார்க்கவில்லை. பொது மக்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகளும் களம் இறங்கி போராட்டத்தில் குதித்தன. ‘மராட்டிய மண்ணில் இருந்து அடித்து விரட்டப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர நச்சுத் தொழிற்சாலை எங்களுக்கு தேவை இல்லை. இதை இந்த மண்ணில் காலூன்ற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்’ என்று அரசியல் கட்சியினர் வேகம் காட்டினார்கள்.

இந்த கட்சிகளை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது அனில் அகர்வாலுக்கு தெரிந்து இருந்தது. வீர வசனம் பேசிய தலைவர்கள் அவரை சந்தித்த பிறகு மவுனம் காக்க தொடங்கினார்கள். ஆலைக்கு எதிராக தினமும் புதிய பெயர்களில் அமைப்புகள் முளைத்தன. உண்ணாவிரதம்,. ஆர்ப்பாட்டம் என ஸ்டெர்லைட்டை மிரட்டியவர்களை அழைத்து பேசியது, ஆலை நிர்வாகம். இதில் ‘கவரப்பட்ட’ சில கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் போராட்ட பந்தலை பிரித்துக் கொண்டு வீடுகளில் போய் முடங்கினார்கள்.

சில அமைப்புகளும் கட்சிகளும் மட்டுமே மக்களுக்காக கடைசி வரை போராட்ட களத்தில் நின்றன. சுமார் இரண்டு வருடமாக சாதி, மதம், தொழில் வேறுபாடுகளை மறந்து எழுச்சியுடன் போராடிய மக்கள், 1996 சட்டமன்ற தேர்தலை துருப்பு சீட்டாக பயன்படுத்த திட்டமிட்டனர். மகளிர் அமைப்புகளும் உத்வேகத்துடன் இதில் ஈடுபட்டனர். மக்களின் இந்த முடிவு அரசியல் கட்சிகளை அதிர வைத்தது.

ஸ்டெர்லைட்டை முன்வைத்து தேர்தலை சந்திப்பது ஆபத்தானது என்பதை அரசியல் கட்சியினர் புரிந்து வைத்து இருந்தனர். ஆலை நிர்வாகமும் அரசியல் சூழலில் அப்படி ஒரு நிலைமை ஏற்படுவதை விரும்பவில்லை. இந்த நிலையில், யாருமே எதிர்பாராத வகையில் தென் மாவட்டத்தில் சாதிக்கலவரம் மூண்டது. எங்கு பார்த்தாலும் வெட்டு குத்து என வெடித்த கலவரம் குக்கிராமங்களை கூட விட்டு வைக்கவில்லை. அப்பாவி மக்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன.

விவசாய நிலங்களில் விளைந்து கிடந்த பயிர்கள் தீ வைத்து கொளுத்தபப்ட்டன. மக்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டதில் உயிர் பலிகள் ஏற்பட்டன. எங்கும் பதற்றம் நிலவியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அஞ்சினார்கள். இந்த மோதல் ஸ்டெர்லைட் போராட்டத்தை திசை திருப்பியது. அதுவரையிலும் போராட்ட களத்தில் அண்ணன் தம்பியாக நின்றவர்கள், சாதி மோதலுக்கு பின்னர் முகம் பார்த்து பேசிக் கொள்ளவே தயங்கினார்கள்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டங்களுக்கு மக்கள் கூட்டம் குறைவாகவே வந்தது. அதே சமயம் சாதிக்கூட்டங்கள் பலத்த ஆரவாரத்துடன் நடந்தன. ஸ்டெர்லைட் போராட்டம் நடந்த மைதானங்களில் சாதிக் கூட்டங்கள் ஆரவாரமாக நடந்தன. மக்களும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து செல்ல தொடங்கினார்கள். இதனால் ஸ்டெர்லைட் எதிர்ப்பு முனை மழுங்கி போய் கிடந்தது.

இந்த சமயத்தில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்ட தமிழ் மாந்தன் தலைமையிலான ‘ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம்’ சட்ட ரீதியிலான போராட்டத்தையும் கையில் எடுத்தது. இந்த இயக்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அத்துடன் ம.தி.மு.க.வும் ஸ்டெர்லைட் எதிர்ப்பை தொடர்ந்து கடைப்பிடித்தது.

இந்த சமயத்தில், பள்ளிகள், கல்லூரிகள், சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி மற்றும் நகராட்சி மன்ற தலைவர்கள், மத போதகர்கள், அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டம் என்கிற பெயரில் லட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டது. கத்தோலிக்க மையங்கள், கல்வி நிறுவனங்கள், முதியோர் இல்லங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மையங்கள் என பல்வேறு அமைப்புகளுக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் பண உதவி செய்தது. மீனவ மக்களுக்கு மீனவ வாழ்வாதார திட்டம் என்கிற பெயரில் பணம் தண்ணீராக செலவு செய்யப்பட்டது.

இவை எல்லாம் விதி முறை மீறலை சரி செய்ததா? ஸ்டெர்லைட் நிறுவனம் மன்னார் வளைகுடா பகுதியில் ஆலையை அமைத்தது சரிதானா..

You might also like

Leave A Reply

Your email address will not be published.