’பசி’ என்பது ’ஒருவேளை’ அல்லது ’ஒரு நாள்’ உணவை தவிர்ப்பதா..?

0 214

பசி’ என்பது ’ஒருவேளை’ அல்லது ’ஒரு நாள்’ உணவை தவிர்ப்பதாலோ, எடுக்க இயலாமல் போவதாலோ தெரிந்துவிடக் கூடிய உணர்வல்ல… அடுத்தவேளை உணவு இருக்குமா என்பது தெரியாது, அடுத்தநாள் உணவு கிடைக்குமா எனத் தெரியாது, அதற்கு அடுத்தடுத்த நாட்களில் உணவு கிடைக்க வாய்ப்பிருக்காது, இனி எந்த நாள், எந்த பொழுதில் உணவு கிடைக்குமெனத் தெரியாத நிலையில் வரும் பசி தான் அதன் உண்மையான தீர்க்கத்தை உணர்த்தும். பசியை தீர்க்கும் உள்ளுணர்வு ஆட்கொண்டுவிடும் தருணத்தில் உலகம் வேறாய் தெரியும்.

வேறெந்த சமூகத்தைவிடவும் தற்சார்பாய் வாழ்ந்துவருபவர்கள் பழங்குடிகள். குறிஞ்சியும், முல்லையும் அள்ளக் குறையாத செல்வத்தை கொடுத்து பசியாற்றுபவை. அந்த திணையில் அனைத்தும் அனைவருக்கும் சொந்தமாய் விளைந்து நிற்கும். மனிதனும், விலங்குகளும், பறவைகளும், பூச்சி, புழுக்களுமாய் உணவை பகிர்ந்து உண்ணும், நீரை பகிர்ந்து எடுத்துக் கொள்ளும். இந்நிலத்தில் வாழ்ந்த சமூகம் இன்று பசிக்காய் திருடுகிறது என்று சொல்லி அடித்துக் கொல்லப்படுகிறது எனில், இந்த உலகத்தை நாம் எங்கு கொண்டு சேர்த்திருக்கிறொம் என்பதை சிந்திக்கவேண்டுமென்கிற தருணம்.

நாம் பழங்குடிகளின் வாழ்வை, தற்சார்பை அழித்திருக்கிறோம். அவர்களை நிர்மூலமாக்கிக்கொண்டிருக்கும் பொருளாதாரத்தை எந்த எதிர்ப்புமின்றி ஆதரித்து நிற்கிறோம். இந்த சந்தை வணிகத்தின் அங்கமாக மாறி நிற்கிறோம். உணவு என்பது சொத்தாக, வணிகப்பண்டமாக மாற்றப்பட்ட சூழலில் மனிதம் செத்துப் போய்விடுகிறது. அன்பின் அடையாளமாய் பரிமாறப்பட்ட உணவு, இன்று வணிகப்பொருளாகி இருக்கிறது.

உணவு பகிரப்படாத உலகில் அன்பிற்கு இடமில்லை என்பதை ’மது’வின் கொலை அம்பலப்படுத்தியிருக்கிறது. தற்சார்பை இழக்கும் சமூகம் எவ்வாறு பிறரால் அடித்துக் கொல்லப்படும் என்பதை இச்சம்பவம் நமக்கு உணர்த்தியிருக்கிறது. முழுதும் வணிகமயமான சிந்தனை எப்படி நம்மை மிருகமாக மாற்றும் என்பதை ’மது’வை கொன்றவர்கள் நமக்கு சொல்லியிருக்கிறார்கள். மதுவைப் போன்ற எண்ணற்றவர்கள் நம் சந்தைப் பொருளாதாரத்தினால் கொலை செய்யப்படுகிறார்கள். தினந்தோறும் நம்மால் புறக்கணிக்கப்படுகிறார்கள். ஒரு புறம் விவ்சாயியும், மறுபுறம் கடலோடிகளும், இன்னொறு தளத்தில் பழங்குடிகளும் இந்தியாவின் புதிய பொருளாதார கொள்கையின் கீழ் வேட்டையாடப்படுவதையே நாம் கண்டிருக்கிறோம்.

பணத்திற்காகவும், வணிகத்திற்காகவும், சந்தைக்காகவும் மட்டுமே, உணவு தானிய உற்பத்தி என்றான பின்பு மனிதனை மனிதன் அடித்துக் கொல்வான், மனிதன் பசியால் செத்து வீழ்வதை கண்டு சக மனிதன் எவ்வித எதிர்வினையும் இல்லாமல்நகர்ந்து செல்வான். இதைத் தான் நாம் இன்று செய்து கொண்டிருக்கிறோம்.

நம் சாலைகளில், ப்ளாட்பாரங்களில், கூவம் ஆற்றங்கரைகளில் ’மது’க்களை நாம் சந்திக்கிறோம். இவர்களுடன் பேச நமக்கு நேரமிருப்பதில்லை, நேரமிருந்தாலும் மனமிருப்பதில்லை. சகமனிதர்களிடம் நாம் பேசுவதை நிறுத்தி வெகுநாட்களாகிவிட்டது. சக மனிதர்களை கவனித்து வெகு வருடங்களாகிவிட்டது. சகமனிதனின் முகத்தில் ஓடும் துயரரேகைகளை கண்டு தோளில் கைபோட்டு பேசிய வழக்கத்தை கைவிட்டு இரண்டு தலைமுறைகளாகிவிட்டது.

சாலையில் 40 கிலோ பாரம் தூக்கி சுமந்து செல்பவர், ஒரு கியரில்- 30 விநாடிகளில் 100 கிமி வேகத்தை எட்டும் காருக்காக, நின்று வழிவிட வேண்டிய சமூகத்தை நாம் உருவாக்கி இருக்கிறோம்.
குப்பை பொறுக்குவதற்காய் மக்கள் இருக்கிறார்கள் எனும் நினைப்பில், குடித்து விட்டெறியும் பெட் பாட்டில்களால் நிரப்பப்பட்ட தெருவும், கூவமும் நம்முடையது. குப்பை பொறுக்குபவருக்கும், மலம் அள்ளுபவருக்கும், பாரம் தூக்கி சுமப்பவருக்கும் நம் சாதிபடிநிலையில் கொடுத்த இடத்தை இன்றும் மறக்காத ’நம் உள்ளுணர்வு’ இவர்களை மூலைக்கு தள்ளுகிறது என்கிற உணர்வுகூட இல்லாமல் வாழ்ந்து சாகிறோம். சந்தைப் பொருளாதாரம் சாதியையும் சாகடிக்கவில்லை, அன்பினையும் வாழவிடவில்லை.

நாம் எவ்வாறானவர்களாக இருக்கிறோம் என்பதை ’மது’வைக் கொன்றவர்கள் நமக்கு கண்ணாடி போல காட்டி இருக்கிறார்கள். இதைப் படித்துவிட்டும் ரயிலில் , பேரூந்தில் பயணிக்கும் நாம் வழக்கம் போல சகமனிதரிடம் பேசும் பழக்கம் தொலைத்தவர்களாய் கடந்து சென்று கொண்டிருப்போம். இரைச்சல் மிகுந்த நம் பேரூந்துகளும், ரயில்களும் தற்போது அமைதியாய் ஓடுவது நம் மனதில் செத்துக் கொண்டிருக்கும் மனிதத்தின் ஓலத்தை சத்தமாய் சொல்கிறது. பதிவு போட நாளைக்கொரு செய்தி வரும்வரை இந்த செய்தி காத்து நிற்கும்.

உலகவர்த்தகக் கழகத்தில் (WTO) இந்திய அரசு போட்டிருக்கும் ஒப்பந்தந்ததிற்கு உணவிற்காக அடித்து சாகடிக்கப்படும் ’மது’க்களாக நம்மை மாற்றும் வலிமை நிறையவே உண்டு.

நம்மை அடித்துக் கொல்ல இருக்கும் ரிலையன்ஸ்- வால்மார்டுகளோடு கொஞ்சிக் குலாவும் இந்தியப் பேரரசு இன்று நம்மோடு செல்ஃபி எடுத்துக் கொண்டிருக்கிறது.

நீயும், நானுமே ‘மது’.

You might also like

Leave A Reply

Your email address will not be published.