அப்படி என்னதான் ஸ்பெஷல் செம்மரம்..?

0 390

கடத்தலுக்குக் காரணம்?

ஆனால், மரச்சாமான்கள் தயாரிக்கப் பயன்பட்டதால்தான் செம்மரம் அழிவுக்கு உள்ளானது என்று கூற முடியாது. சிவப்பு நிறக் கட்டைகளால்தான் செம்மரம் அதிக முக்கியத்துவம் பெற்றது என்ற வாதத்திலும் அதிக வலுவில்லை. ஏனென்றால், இந்த இரண்டு அம்சங்களைக் கொண்ட, விலை குறைவான, உறுதியான பல மரங்கள் கிடைக்கின்றன. எனவே, செம்மரங்களின் பற்றாக்குறைக்கு வேறு என்ன முக்கியக் காரணம்?

செம்மரம் சட்டத்துக்குப் புறம்பாக அதிக அளவில் வெட்டப்படுவதற்கும், கடத்தப்படுவதற்கும் முக்கியக் காரணம் இதன் வைரக்கட்டைகள் தரும் மருத்துவப் பயன்கள்தான் (வேங்கைப் புலியும் மருத்துவக் காரணங்களுக்காகவே இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது). இந்தியாவின் செம்மரக் கட்டைகளைப் பல காலமாகக் கிட்டத்தட்ட மொத்தமாக ஏலத்தில் எடுத்துவரும் நாடு சீனா. மருத்துவப் பயன்களுக்காகவே அந்நாடு இதை வாங்கிவந்துள்ளது.

மருத்துவப் பயன்

ஆயுர்வேத, சித்த மருத்துவ முறைகள் மட்டுமின்றி பழங்குடி மருத்துவத்திலும் இந்த மரக்கட்டையின் சாந்து (செஞ்சாந்து) அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மருத்துவத் தமிழில் செம்மரம், பிசனம், கணி, ரத்தச் சந்தனம், செஞ்சந்தனம், உதிரச் சந்தனம் என்ற பெயர்களில் செம்மரம் அழைக்கப்பட்டுவந்துள்ளது. ஆண் மலட்டுத்தன்மை, மூட்டுவலி, மூலம், வெட்டுக்காயம், வீக்கம், ரத்தபேதி, சீதபேதி, பாம்புக்கடி, தோல் நோய்கள், நீரிழிவு போன்ற பல நோய்களுக்கு இந்திய மருத்துவ முறைகளில் செம்மர வைரக்கட்டையின் சாந்தும் சாறும் பல காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

மருத்துவ அறிவியல் துறை வளர்ச்சியடையத் தொடங்கியவுடன் பாரம்பரிய மருத்துவ முறையில் பயன்படுத்தப்பட்ட செம்மரம் போன்ற தாவரங்கள், மறுதலை மருந்துமூல ஆய்வியல் (Reverse pharmacognosy) என்ற தற்கால அறிவியல் முறைப்படி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அவற்றின் வேதியியல் அடிப்படைகள் தெளிவாக்கப்பட்டுள்ளன. செம்மர வைரக்கட்டைகளில் இருந்து பெறப்படும் முக்கியமான வேதிப்பொருட்கள் சாண்டலால்கள் (இவை சந்தன மரக்கட்டையிலும் அதிகமாகக் காணப்படுகின்றன) மற்றும் டீரோஸ்டில்பீன்கள். இந்த இரண்டுமே அழகு சாதனப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன.

மலட்டுத்தன்மைக்கு

இவற்றில் டீரோஸ்டில்பீன்கள் தோலின் நிறத்தை மாற்றும் பசைகளில் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன. நொதிச்செயல்களை (தைரோசினேஸ் என்ற நொதி) கட்டுப்படுத்துவதன் மூலம், தோலின் நிறம் கருப்பு, பழுப்பாக மாறுவதை இந்த வேதி பொருட்கள் தடுக்கின்றன. கருப்பு, பழுப்புத் தோல்களை வெண்மையாக்குவதையும் இந்தப் பொருட்கள் கட்டுப்படுத்துகின்றன. மேலும், தோலின் மேல் புறஊதாக் கதிர்களின் தாக்கம் ஏற்படாமல் இவை பாதுகாக்கின்றன. இம்மரத்தில் உள்ள 16 சதவீதச் சாண்டலால்களும், பலவித மருத்துவப் பயன்களைக் கொண்டவை. இவற்றை எல்லாம்விட, இம்மரம் தரும் முக்கிய மருத்துவப் பயன் ஆண் மலட்டுத்தன்மை சிகிச்சைக்குப் பயன்படுவதுதான்.

அண்மையில் ஆந்திர அரசால் ஏலம் விடப்பட்ட செம்மர வைரக்கட்டைகளில் மூன்றாம் ரக கட்டை மட்டும் ரூ. 207 கோடிக்கும், முதல் ரகக் கட்டைகள் ஒரு டன் ரூ. 1.75 கோடிக்கும், இரண்டாம் ரகக் கட்டைகள் ஒரு டன் ரூ. 1.5 கோடிக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வளவு விலை கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டதிலிருந்து செம்மரக்கட்டையின் மருத்துவ, அழகியல் அம்சங்கள் மிகவும் மதிப்பு வாய்ந்தவை என்பது தெளிவாகிறது.

எப்படிப் பாதுகாப்பது?

இலக்கியச் சிறப்பு வாய்ந்த செம்மரம் (பழைய வேங்கை) மருத்துவ, அழகியல் சிறப்பும் வாய்ந்ததாக இருப்பதால் நிச்சயமாக அழிவிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். ஏற்கெனவே, ஆந்திரத்திலும் தமிழகத்திலும் செம்மரத் தோட்டங்கள் அமைப்பது நடைமுறைக்கு வந்துள்ளது.

என்றாலும், இயற்கையான – முதிர்ந்த வைரக்கட்டைகள் தொடர்ந்து பயன்தர வேண்டுமென்றால், இயல்பாக அவை வளரும் இடங்களிலும், அவற்றை இயல்பாகச் சூழ்ந்து வளரும் தாவரங்களுக்கு மத்தியிலும் இம்மரத் தோட்டங்கள் அமைய வேண்டும். மரங்கள் நன்கு வளர்ந்தபின், தகுந்த பதிலீடுத் தாவரங்கள் நடப்பட்ட பின் தேர்வு வெட்டுகள் (selective felling) மூலம் அறுவடை செய்யப்பட வேண்டும். அப்போதுதான், எதிர்காலத்தில் செம்மரங்களைப் பாதுகாக்க முடியும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.