பீட்டா பின்வாசலில் காலூன்ற முயற்சி ஏமாறாதே தமிழா..! நமது மண்ணின் சிங்கம் காங்கேயமே நமது பெருமை..!

0 686

இன்று நம்மில் பலர் வட இந்திய மாடுகளான கிர், காங்ரேஜ், சாஹிவால், தார்ப்பாக்கர் போன்ற இனங்கள் மேல் மோகம் கொண்டு அவைகளை வாங்கி வளர்க்க ஆசை படுகின்றோம். இந்த தருணத்தை சில வியாபாரிகள் தவறாக பயன்படுத்தி தரமற்ற மற்றும் கலப்பினங்களை அதிக விலைக்கு விற்று பணத்தை ஈட்டுகின்றனர். எனது சொந்த மற்றும் எனது நெருங்கிய பல நண்பர்களின் வட இந்திய மாடுகள் வளர்ப்பின் அனுபவ ரீதியான பகிர்வு..!

காங்ரோஜ்.

இனச்சேர்க்கை செய்வதில் பிரச்சனை

ஒன்று இரண்டு வடமாநில மாடு வாங்கி வளர்க்க வேண்டும் என ஆசை இருப்பவர்கள் கட்டாயம் அந்த எண்ணத்தை கைவிடுங்கள். ஏனென்றால் முதல் பிரச்சனை இனச்சேர்க்கை செய்வதில் உருவாகிறது. பெரும்பாலும் நாட்டு மாடுகள் செயற்கை கருத்தலித்தலால் சினை பிடிப்பதில்லை. இதனால் மாடு சினை பிடிப்பது தள்ளிப்போய் கன்று ஈனும் இடைவெளி 1.5 – 2 ஆண்டுகள் ஆகிறது. அப்படியென்றால் நான் மூன்று மாடுகளுக்கு ஒரு காளை மாடு வைத்துக்கொள்கிறேன் எனலாம். காளை மாடுகளை அதிமாக இனச்சேர்க்கைக்கு பயன்படுத்த வேண்டும் மற்றும் அடுத்த பருவத்திற்கு அதே காளையை பயன்டுத்தாமல் வேறு காளையை தான் பயன்படுத்த வேண்டும்.

பெரும்பாலும் வட இந்திய மாடுகள் சுதந்திரமாக உலாவுவதையும் கூட்டமாக இருப்பதையும் விரும்புகிறது. நாம் கட்டிவைத்து வளர்ப்பதால் அவை மனதளவில் பலவீனமாக காணப்படுகிறது. இதனால் சரியாக தீவனம் எடுப்பதில்லை, குறைவாக பால் தருதல், சினை பிடிப்பது தள்ளி போதல், சாதுவாக இல்லாது போதல் மற்றும் பால் கறவைக்கு விடுவதில் சிரமம் என பல இன்னல் ஏற்படுகிறது.

வடநாட்டு மாடுகள் ஈனும் கன்றுகள் கிடாரியாக இருந்தால் பராவாயில்லை காளையாக இருக்கும் போது அவைகளை நாம் வளர்க்க முற்படுவதில்லை அதை வெட்டுக்கே குறைந்த விலைக்கு விற்க வேண்டியுள்ளது. அது போல கிர், காங்ரேஜ் மற்றும் தார்பார்க்கர் இனங்களிலும் பல உள்ளூர் இனங்களில் கலந்து சில மாடுகள் கலப்பாக காணப்படுகிறது.

குறைவான பால் உற்பத்தி

பல வடஇந்திய மாடுகள் உண்ணும் உணவு அதிகமாகவும் அது தரும் பால் அளவு குறைவாகவும் காணப்படுகிறது. எனவே மேய்ச்சல் நிலமோ / பசுந்தீவனம் உற்பத்தி செய்யும் அளவில் சொந்த நிலம் வேண்டும். கட்டாயமாக அசோலாவையும் & ஹைட்ரோ போனிக்கையும் நம்பி மாடுகளை தயவு வாங்கி வளர்க்க முற்படாதீர்கள்.

எனக்கு தெரிந்து வட இந்திய மாடுகள் 10 எண்ணிக்கைக்குள் வைத்துக்கொண்டு தீவனம் வெளியில் வாங்காமல் தங்கள் நிலத்திலேயே தயார் செய்தும், அதிகமாக வேலையாட்களை வைத்துக்கொள்ளாமல் சொந்தமாக / நேரடியாக பால் வியாபாரத்தில் ஈடுபடுவர்களே லாபம் சம்பாதிக்கின்றனர்…

தார்பாக்கர்

பலர் பேர் பெரிய அளவில் செய்ய முற்பட்டு பால் விற்பனை அளவை உயர்த்த எண்ணி மாடுகளின் எண்ணிக்கையை உயர்த்தி கிடைக்கும் சொற்ப லாபத்தையும் இழந்து நஷ்டமடைகிறார்கள். தயவு செய்து வடஇந்திய நாட்டு மாடுகளை வாங்கும் முன் அதன் சாதகமான பால் அளவை மட்டும் பார்த்து வாங்காதீர்கள், அதன் பாதங்களை அலசி ஆராய்ந்து வாங்குங்கள்..

அது போல வட இந்திய மாடுகள் அனைத்தும் சீராக பால் தருவதில்லை. அதாவது வேளைக்கு பால் அளவு கூடியோ குறைந்தோ காணப்படுகிறது. உதாரணத்திற்கு 10 லிட்டர் பால் கறக்கும் கிர் மாடு கன்று ஈன்று 2-3 மாதங்களே அதே அளவு கறக்கும். பின்பு 4-7 லிட்டர் 4-6மாதங்களுக்கு தரும். பின்பு திடீரென 1-2 லிட்டருக்கு குறைந்துவிடும்.

கடந்த 2-3 மூன்று மாதங்களாக வடக்கில் இருந்து வரும் மாட்டு வண்டிகள் மடக்கப்பட்டு மாடுகளை பறிமுதல் செய்கிறார்கள். மாதம் நான்கு முதல் ஐந்து வண்டிகளுக்கு மேல் மாட்டிக்கொள்கிறது. ஆதலால் தற்போது வடக்கில் சென்று மாடு வாங்கும் எண்ணத்தை கைவிட்டுவிடுவது சிறப்பு.

தார்பாக்கர் tharparkar cow
தார்பாக்கர்
நமது தமிழக நாட்டு இனங்களை வாங்கி வளர்க்க முற்படுவது சிறந்தது

பெரும்பாலும் நமது தமிழக இனங்கள் வருடத்திற்கு ஒரு கன்று ஈனுகிறது. பொலிக்காளைகள் நமது பகுதியிலேயே கிடைக்கிறது.

தமிழக இனங்களில் திருவண்ணாமலை பகுதியில் துரிஞ்சல் இனமாடுகள் விலை குறைவாகவும் 5-7 லிட்டர் வரை பால் தருகிறது மற்றும் நல்ல மேய்ச்சல் எடுக்கிறது. இவை பெரும்பாலும் அடர்தீவனத்தை விரும்புவதில்லை. அது போல கொங்க மாடுகள் கோவைக்கு மேற்கே காணப்படுகிறது இவையும் மேய்ச்சல் மட்டுமே மேய்ந்து 5-6 லிட்டர் பாலை நாள் ஒன்றுக்கு தருகிறது. புலிகுள மாடுகள், கம்பீரத்திற்கு பெயர் போன காங்கேய இனமாடுகள் சராசரியாக 4 லிட்டர் பால் நாள் ஒன்றுக்கு தருகிறது. இவை தவிர உம்பளசேரி, ஆலம்பாடி, செம்மறை, பர்கூர், மணப்பாறை, வடக்கரை & தென்கரை மாடுகள் என உள்ளூர் பல இனங்கள் காணப்படுகிறது.

என்னுடைய அனுபவத்தை பொருத்தவரை வடஇந்தியா மாடுகளை வாங்கி வளர்ப்பது ஒரு மோகமே. இதை பயன்படுத்தி பல வியாபாரிகள் நம்மை ஏமாற்றுகின்றனர்.

கிர்
வடஇந்திய மாடுகளை தமிழகத்தில் வாங்கும் போது எவ்வெவ்வாறு ஏமாற்றப்படுகிறோம் ?

விலையில் அதாவது 40-70% லாபம் வைத்தே பலர் வட இந்திய மாடுகளை விற்கின்றனர். இதில் சொற்ப வியாபாரிகளே விதிவிலக்கு. கட்டாயமாக அவர்கள் கூறும் விலையில் 40% கீழ் விலை கேளுங்கள் மற்றும் இந்த விலைக்கு வாங்கலாமா என தெரிந்த குழுவில் பகிருங்கள். கட்டாயமாக சினையை, மாட்டின் தரத்தை, பால் கறவையை உறுதி செய்த பின்னரே பணத்தை பரிமாற்றம் செய்யவும்.

பால் அளவு பலர் ஏமாற்றப்படுவது இதில் தான் கட்டாயமாக நீங்களே குறைந்தது இரண்டு/மூன்று நேரம் கறந்து பார்த்து வாங்கிச்செல்லவும். அறிமுகம் இல்லாத / அனுபவம் நபர்களிடம் மாடுகளை நம்பி வாங்கி ஏமாறாதீர்கள்.

பலர் வடக்கே நாங்க மாடு வாங்கச்செல்கிறோம் முன்பணம் தாருங்கள் என அறிமுக இல்லாத நபர்களிடம் பணத்தை தந்து ஏமாறாதீர்கள். மற்றும் எந்தவொரு தெரியாத வியாபாரியிடம் பணத்தை தந்து ஏமாறாதீர்கள்.

வடக்கே சென்று மாடு வாங்கி வரும் போது கட்டாயமாக மாடுகளுக்கென்று இருக்கும் வாகனங்களை பயன்படுத்தவும். விதிமுறைகளை மீறி அதிகமான மாடுகளை ஏற்றி வராதீர்கள். கட்டாயம் 100% அனைத்து தரப்பு அனுமதிகளை முறையாக பெற்ற பின்னரே மாடுகளை வண்டியில் ஏற்றவும். வண்டிக்கு 30% தொகைக்கு மேல் முன் பணம் தரவேண்டாம். கட்டாயமாக மாடுகள் பார்க்கும் கைதேர்ந்த நபர் ஒருவரை வண்டியில் மாடுகளை பார்த்துக்கொள்ள அமர்த்திகொள்ளுங்கள். மாடுகளுக்கு 10 நாட்களுக்கு தேவையான தீவனம், முதலுதவி மருந்துக்களை வண்டியில் வாங்கி ஏற்றிக்கொள்ளுங்கள். கட்டாயமாக வண்டி தினமும் இரவில் மட்டுமே பயணம் மேற்கொள்ள வேண்டும்.

அது பல வியாபாரிகள் முழு வெள்ளையாக இருக்கும் மாட்டை தார்பாக்கர் என்றும், காது பெரிதாக உள்ள மாட்டை கிர் என்றும், கொம்பு பெரிதாக உள்ள மாட்டை காங்ரேஜ் எனவும், உயரம் குறைவாக மற்றும் சிறிய கொம்புடன் உள்ள மாட்டை சாஹிவால் என்றும் பொய் உரைத்து விற்பனை செய்கின்றனர். ஆதலால் வட இந்திய மாடுகள் வாங்கும்முன் முன்னெச்சிரிக்கையோடு இருப்பது அவசியமாகிறது.

இந்த கருத்துக்கள் அனைத்தும் எனது உண்மையான மற்றும் எனது நெருங்கிய நண்பர்களிடையே நான் கண்ட / பார்த்த அனுபவ பகிர்வே. நியாமான முறையில் நாட்டு மாடுகளை வியாபாரம் செய்யும் வியாபாரிகளும் உள்ளனர்.

தொகுப்பு :

கு.மகேஷ்குமார் (திருப்பூர்),

+91 85085 33005

இயற்கை விவசாயி, வெட்டுக்கு செல்லும் காங்கேய இன மாடுகளை கடந்த நான்காண்டுகளாக காடையூர் கொங்கு கோசாலை குழுவினருடன் இணைந்து காங்கேய மாடுகளை மீட்டு விவசாயிக்கு அதே விலையில் வளர்ப்புக்கு தந்து வருகிறார்கள். கொங்க கோசாலை குழுவினரின் முயற்சியில் இனிதே துவக்கம் கண்டு சிறப்பாக செயலாற்றி வரும் பிரத்யேகமான காங்கேய இன மாட்டுச் சந்தை “பழையகோட்டை மாட்டுத்தாவணி” ஆகும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.