அந்த 1590 சடலங்கள்..! கருணை கொலை இல்லம்..!

0 170

சடலத்துடன் முதியவர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய செயிண்ட் ஜோசப் கருணை இல்லத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஆதரவற்ற முதியவர்களை அரசு காப்பகத்துக்கு மாற்ற சமூக நல பாதுகாப்பு அலுவலர் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 1590 முதியவர்கள் சடலமான பின்னணி.காஞ்சிபுரம்  மாவட்ட செங்கல்பட்டு அடுத்த பாலேஸ்வரத்தில் கடந்த 7 வருடமாக செயிண்ட் ஜோசப் என்ற கருணை இல்லத்தை கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த தாமஸ் என்ற பாதிரியார் நடத்தி வருகிறார்.

முறையான அனுமதியின்றி செயல்பட்டுவந்த செயிண்ட் ஜோசப் கருணை இல்லத்துக்கு சொந்தமான காய்கறிமூட்டைகள் ஏற்றப்பட்ட போலி ஆம்புலன்சில் சடலத்துடன் 2 முதியவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தப்பி ஓடிய ஓட்டுனரை காவல்துறையினர் தேடிவரும் நிலையில், கடத்தப்பட்ட மூதாட்டி அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.

இதற்கிடையே வருவாய்துறை, சமூக நலத்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை உள்ளிட்ட 6 துறைகளை சேர்ந்த மாவட்ட நிர்வாக அதிகாரிகள் இந்த சட்டவிரோத ஆசிரமத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த முதியவர்கள் பலர் தாங்கள் இங்கே சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் ,தங்களை மீட்டுச்செல்லும் படியும் அதிகாரிகளிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.

சாலையோரம் படுத்து உறங்கிய ஆதரவற்ற முதியவர்களையும், பிச்சைக்காரர்களையும் கட்டாயப்படுத்தி கருணை இல்லத்துக்கு அழைத்து சென்று அடைத்து வைத்திருப்பதாகவும் சரியாக உணவு வழங்காமல், பட்டினிப்போட்டு மன நிலை பாதிக்கும் நிலைக்கு தள்ளி கருணை கொலை செய்வதாகவும் குற்றஞ்சாட்டினர்.

முதியவர்களின் சடலங்களை சுகாதாரத்துறையின் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள லாக்கர் போன்ற வடிவமைப்பு கொண்ட சிமெண்ட் கல்லறைகளில் வைத்து மூடி விடுவதாகவும் அந்த சடலத்தின் எலும்புகள் விழுவதற்கென்று 25 அடி ஆழத்தில் குழிகள் அமைக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. 1500க்கும் மேற்பட்ட முதியவர்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்தாலும் அது தொடர்பான முறையான ஆவணங்கள் இல்லை என்று கூறப்படுகின்றது.

அங்கு நடந்த ஆய்வில் வயோதிகர்களை சிறை கைதி போல அடைத்து வைத்திருந்து, அவர்களை பராமரிப்பதாக காட்டி வெளிநாடுகளில் இருந்து லட்சகணக்கில் பணம் வசூலிப்பது தெரியவந்ததாகவும், சேவை என்று சொன்னாலும் வெளி நாட்டில் இருந்து வரும் நிதியையே பிரதானமாக கொண்டு இந்த கருணை இல்லத்தை பாதிரியார் தாமஸ் நடத்தி வருவதாகவும் ஆய்வு நடத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தங்கள் துறை சார்ந்த அறிக்கைகளை ஒவ்வொரு துறை அலுவர்களும் மாவட்ட ஆட்சி தலைவருக்கு வழங்கி உள்ளனர். இதில் சமூக நல அலுவலர் சங்கீதா என்பவர் அளித்துள்ள அறிக்கையில், இந்த கருணை இல்லத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள முதியவர்களை மீட்டு அரசு காப்பகத்துக்கு மாற்ற வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார்.

இதுவரை இந்த ஆசிரமத்தில் 1590 சடலங்களை அடக்கம் செய்துள்ளதாக தெரிவித்த பாதிரியார் தாமஸ், சட்டவிரோத செயல்கள் ஏதும் நடக்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்

அந்த கருணை இல்லம் குறித்து அதிகாரிகள் அளித்துள்ள ஆய்வறிக்கையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொன்னையா, என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்போகிறார் ? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.