நம் பாரம்பரிய விதை அழிக்கப்பட்டதன் காரணம்..! நாம் வளர்த்த பிள்ளைகள் என்று தெரியுமா.?

1 461

Seed diversity அதாவது விதை பன்மயம் .இதுவே நம் விவசாயிகளின் உயிர்நாடி.

இதன் முக்கியத்துவத்தை நாம் புறிந்து கொண்டோமோ இல்லையோ, பன்னாட்டு நிறுவனங்களும், நம் விதை பன்மயத்தை காப்பாற்ற வேண்டிய அரசும் இதை நன்றாகவே புரிந்து கொண்டது என்று தான் கூறவேண்டும்.அதனால் தான் அரசு (அரசியல்வாதிகள் ) தன்னுடைய ஆணைகள் மூலமும், பல வர்த்தக ஒப்பந்தங்கள் மூலமும் விதை பன்மயத்தை ஒடுக்க முயற்சி செய்கின்றனர். பசுமைப் புரட்சி ,நவீன வேளாண்மை என்கின்ற பல பல பெயர்களால் நம் இயற்கையான பயிர் உற்பத்தி முறையிலிருந்து விதை விலக்கப்பட்டது. நம்முடைய விவசாயத்தின் ஒரே முக்கிய அங்கமாக இருந்த நம் விதை இன்று பெரும் வியாபாரத்திற்கு உட்பட்டது.

காலம் காலமாக நம்முடைய ஒரே ஒரு இடுபொருளாக இருந்த விதை; இன்று மரபணு மாற்றப்பட்ட விதையோடு, ரசாயனம், பூச்சிக்கொல்லி மருந்து, விதையின் இயந்திரங்கள் என்ற ஒரு தொகுப்பாகவே விற்கப்படுகிறது. தனது வலைப் பின்னலுக்குள் தானே மாட்டிக் கொண்ட எட்டுக்கால் பூச்சி போல், நாமும் ஒன்றைக் கொண்டு மற்றொன்றை விளக்க முடியாத வலைப் பின்னலுக்குள் தள்ளப்பட்டோம்.

புதிது புதிதாக மரபு மாற்றப்பட்ட விதைகளை பயன்படுத்துவதனால் நம் உற்பத்தி அதிகரிக்கும் என்கிற ஆசையைத் தூண்டி மீண்டும் மீண்டும் நமது சொந்த விதையை பயன்படுத்தாத சூழ்நிலையை நமக்கு உருவாக்கியது தான் இன்றைய நவீன வேளாண்மை. இந்த நவீன வேளாண்மை தான்… ஒவ்வொரு வருடமும் வெளி சந்தைகளில் விற்கப்படும் புது புது விதைகளை வாங்குவதன் மூலம் நமது உற்பத்தியை பன்மடங்கு அதிகரிக்கலாம் என்று ஆசைக் காட்டியது. ஒவ்வொரு ஆண்டும் அவ்வாறு புதிய விதைகள் வாங்குவதால் நம் உற்பத்தி அதிகரிக்கிறதோ?இல்லையோ? மரபு மாற்றப்பட்ட விதைகளின் விலை மட்டும் அதிகரிக்கிறது .அதனைக் கொண்டு அவர்கள் அடையும் இலாபமும் அதிகரிக்கிறது, இந்த ஆண்டில் மட்டும் இந்தியாவின் மொத்த விதை வியாபாரம் 25000 கோடி. விதை வியாபாரத்தில் உலகளவில் இந்தியா 6வது இடத்தில் இருக்கிறது

நாம் இன்னும் ஒரு வேளாண்மை நாடாக பிழைத்திருப்பது ஆச்சரியமான ஒரு செய்தி தான், அதனாலோ என்னவோ பெரும் விதை சந்தை இங்கு இருக்கிறது. ஆனால் நம் விவசாயிகள், கடைசிவரை உற்பத்தியில் எந்த ஒரு முன்னேற்றமும் அடைந்ததாக தெரியவில்லை.! இதனை எடுத்துக் கூறவேண்டிய நமது வேளாண்மைத் துறையோ விதை மாற்று விகிதத்தையே மேம்பாட்டின் அளவு கோலாக என்னுகின்ற அவல நிலையில் உள்ளது.

நமது இந்திய காப்புரிமை சட்டத்தின் கீழ் நமது இயற்கையான பயிர்களுக்கும் விதைகளுக்கும் காப்புரிமை அதாவது copyrights வழங்கப்படுவதில்லை. ஆனால் அதே நேரம் மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு காப்புரிமை பெறப்படுகிறது .நமது துரதஷ்டமோ,என்னவோ இது மட்டும் கேள்விகளுக்கு உட்படுத்தப்படுவதே இல்லை. நம் விவசாயத்தின் நெடியாக இருக்கும் இத்தகைய ஆதிக்க நிறுவனங்கள் மட்டும் போதாது என்று அரசியல்வாதிகளும் விதைச் சட்டம் ,விற்பனைச் சட்டம் வர்த்தக ஒப்பந்தங்கள்,காப்புரிமைச் சட்டம் ,இறக்குமதிச் சட்டம், இறக்குமதி ஏழ்மைபடுத்தும் சட்டம் போன்ற பல சட்டத் திட்டங்கள் மூலம் பல மரபணு மாற்றப்பட்ட விதைகளை சந்தைக்குள் சுலபமாகத் திணித்து விட்டார்கள்.

இப்படி மரபணு மாற்றப்பட்ட விதையை சந்தைக்குள் திணித்த அதே அரசு 2010ல் பல வில்லங்கமான சட்டத்திட்டங்களை இயற்றியது.அது தான் விதைச் சட்டம் .இதன்படி விவசாயிகள் விதைகளை சேமிக்கவே கூடாது,பரிமாறிக் கொள்ளவும் கூடாது என பல கொடிய கட்டுப்பாடுகள் இதனுள் விதிக்கப்பட்டது. இதனை மீறி செய்தால் அபராதம்,சிறை தண்டனை என்று அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டது.

தரமற்ற விதைகளை விற்கும் நிறுவனங்களைப் பற்றியோ,அதன் செயற்பாடுகள் பற்றியோ,எந்த ஒரு பெரிய சட்ட திட்டங்களும் இயற்றப்படாத சூழ்நிலையில் நமது விவசாயிகளின் உரிமையை ஒடுக்குவதிலேயே நமது நாட்டு அரசு பேரார்வம் கொண்டது.

நாடு தழுவிய போராட்டங்களால் இந்தச் சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது.

ஆனால் இன்னமும் அந்தச் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாமல் இருக்கிறது மத்திய அரசு.முந்தைய காங்கிரஸ் அரசு விதைச்
சட்டத்தை கொண்டு வந்தபோது கடுமையாக அதனை எதிர்த்து பேசிய பா.ஜ.க அரசு இன்று அதே சட்டத்தில் மேலும் பல கடுமையான கொடுமைகளைத் திணிக்க முயற்சிக்கிறதே ஒழிய மாற்றத்தைக் கொண்டுவர முன்வரவில்லை என்பது தான் உண்மை.

Reasonal comprehensive economic partnership(RCEP) அதாவது பொருளாதார புரிந்துணர்வு கூட்டமைப்பு. இது இந்தியா உட்பட 16 ஆசிய நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தம். இதில் கொடுமையான செய்தி என்னவென்றால் இந்த ஒப்பந்தம் குறித்தும்,இதிலுள்ள அம்சங்கள் குறித்தும் இதுவரை மக்களிடம் எதுவும் பகிர்ந்து கொள்ளப்படவே இல்லை.

இப்படி விதை சேகரிப்பு நம் உள்ளூர் விவசாயிகளிடம் விதை உற்பத்தி போன்ற பாரம்பரிய நடைமுறைகளுக்கும், பாரம்பரிய நமது அறிவு செறிவுக்கும் எதிராக அறிவு சார் சொத்துரிமை என்ற பெயரில் தாக்குதல் நடக்கிறது. இதன் மூலம் விதையை சேமிக்கும் உழவர்களின் உரிமை பறிக்கப்பட்டது. அதிக விலை கொண்ட கார்ப்பரேட் விதைகளை வாங்குவதற்கு நம்மைத் தள்ளுகிறது. இதன் முடிவு நம்முடைய இயற்கை விதை இறையாண்மை கடுமையான வீழ்ச்சிக்குத் தள்ளப்பட்டு விடுகிறது.

இப்படி ஒரு நாட்டின் விதை இறையாண்மையை அழிக்கும் நோக்கம் எதனால் வந்தது என்பதைனை இன்னும் நீங்கள் புரிந்து கொள்ள வில்லையெனில் இந்தக் கடைசி வரிகளைக் கவனிக்கவும்.இன்று நம் நாட்டில் நாம் உண்ணும் உணவில் 75 சதவிகிதம் வெறும் எட்டே எட்டு (8) பயிர்கள் மட்டுமே இருக்கின்றது என்பது தெரியுமா..? அதை தெரிந்துகொண்டால் நான் மேலே கூறிய அனைத்து அரசியலுக்கும் காரணத்தை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

பயிர் பன்மயத்தை (crop diversity) பன்னாட்டு விதை நிறுவனங்கள் தன்னால் முடிந்த வரை அழித்து வருகின்றது.தன்னுடைய மரபணு மாற்றப்பட்ட விதைகளை விற்பனை செய்வதற்காகவே இத்தகைய கொடிய செயல்கள் அவர்களால் அரங்கேற்றப்படுகின்றன. நாம் நம்பி வோட்டு போட்டு வளர்த்தெடுத்த நமது பிள்ளைகள் தான், அரசியல் சாக்கடையில் மூழ்கி நம்மை இத்தகைய சூழலுக்கு தள்ளினார்கள் என்பதை நினைக்கும் போது மனம் வெம்புகிறது.

இத்தகைய கடுமையான சூழ்நிலைகளாலே பாரம்பரிய விதைகளை காப்பாற்ற வேண்டிய அவசியத்திற்குள் நாம் தள்ளப்பட்டோம். பறிபோய் கொண்டிருக்கும் நம்முடைய விதை இறையாண்மையை, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை,நம் பாரம்பரியத்தை,நம்முடைய இயற்கை வளத்தை,நம் விதை வளத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு,இத்தகைய கேடுகளை சுமந்து கொண்டிருக்கும் நம் மக்கள் மத்தியில், நம் இயற்கை விதைகளை பாதுகாப்பதற்காக பல குழுக்கள் ஆங்காங்கு உதயமாகி இருக்கின்றது. அரசியல்வாதிகளை நம்பாமல் நம் மக்களும், இளைஞர்களும் தாமே முன்னெடுத்து நம் எதிர்காலத்தை காப்பாற்ற புறப்பட்டுவிட்டார்கள் என்ற நற்செய்தியுடன் இத்தொகுப்பை முடிக்கின்றேன்.

நன்றி
ழகரம்.

You might also like
1 Comment
  1. Sivashankar.S says

    எனில் நமது பாரம்பரிய விதைகளை பாதுகாப்பது எப்படி? உதவி செய்ய சித்தமாய் உள்ளேன்.இவண் சிவசங்கர்.சி
    +91 94436 96595

Leave A Reply

Your email address will not be published.