தொடர்ந்து பாலியல் வன்கொடுமை கொலைகள் நாளை நம் தங்கையாக கூடும்..!

0 340

நம் சமூகத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தாலும் இன்னும் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் இது பாதுகாப்பான சமூகம் என்று நம்மால் உறுதியாக கூற முடியவில்லை. சமீபத்தில் சேலம் மாவட்டத்தில் ஒரு காமுகன் தன் பாலியல் இச்சைக்கு உடன்படாததால் இராஜலட்சுமி என்ற 13 வயது மாணவியை படுகொலை செய்ததை நம்மால் எளிதில் மறக்க முடியாது.

தற்போது பாலியல் வன்கொடுமையினால் 12-ம் வகுப்பு மாணவி உயிரிழந்தது மீண்டும் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் கோட்டப்பட்டியை அடுத்த சிட்லிங் மலை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அண்ணாமலை – மலர் தம்பதியர். இந்த தம்பதியரின் மகள் சௌமியா பாப்பிரெட்டிபட்டியில் தங்கி அங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

தீபாவளி விடுமுறையில் தன் வீட்டிற்கு வந்திருந்த சௌமியா கடந்த 5-ம் தேதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இயற்கை உபாதையின் காரணமாக வீட்டின் அருகில் உள்ள மறைவான இடத்திற்கு சென்றுள்ளார் சௌமியா. அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் மற்றும் ரமேஷ் ஆகிய 2 இளைஞர்கள் மாணவியை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். பின் சௌமியாவை பலவந்தமாக ஆற்றோடைப் பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அந்நேரத்தில் அப்பகுதியில் ஆள் நடமாட்டம் தெரிந்ததால் இருவரும் மாணவியை அங்கேயே விட்டு விட்டு தப்பித்து சென்றுள்ளனர். மயங்கி கிடந்த மாணவியை அந்த கிராம மக்கள் மீட்டு வீட்டில் சேர்த்துள்ளனர். வெளியே சென்றிருந்த பெற்றோர் வீட்டிற்கு திரும்பிய பிறகு அவர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார் சௌமியா.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அதே பகுதியை சேர்ந்த காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்கள் தலைமறைவாகி விட்டதால் அவர்களைத் தேடி வருவதாக காவல் துறையினர் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தால் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட சௌமியா தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை மாணவி உயிரிழந்தார். மருத்துவமனையில் உயிருக்கு போராடி வந்த சௌமியா அந்த 2 குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறி உயிரிழந்துள்ளார்.

மாணவியின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரி சௌமியாவின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்த காவல் துறையினர் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

சௌமியாவின் பெற்றோர் கூலி வேலை செய்து தங்கள் மகளை படிக்க வைத்து வந்தனர். சௌமியாவின் ஒரே கனவு நன்றாக படித்து, பின் நல்ல வேலைக்கு சென்று தன் பெற்றோரின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்பது தான்.

வாழ்க்கையில் போராடி தன் கனவுகளை அடைவதற்கு முன்னோக்கி சென்ற ஒரு மாணவியை தங்கள் காம இச்சைக்கு பலி கொடுத்துள்ள காமுகன்களை இந்த சட்டம் என்ன செய்ய போகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையினால் சிதைக்கபடுவது பெண்களின் கனவுகள் மட்டுமல்ல, படித்து வாழ்க்கையில் முன்னேற நினைக்கும் பல பெண்கள் இந்த சமூகத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் கூடவே சிதைக்கப்படுகிறது. எப்போது தீரும் இந்த அவலம்?
மேலும் தகவல்(Awesome machi)

என் சாதி பெண் பாதிக்கப்படும் போது ஏன் பதிவிட வில்லை..? என் சாதிக்காரன் கற்பழித்ததால் பதிவிடுகிறாயா..? என்ற கீழ்தரமான விமர்சனத்தை வைக்காமல் இருக்க பாருங்கள்..!

முடிந்தவரை நாங்கள் பாதிக்கப்பட்டவரின் பக்கமே இருக்கிறோம் இதில் சாதி மத பாகுபாடு எங்களுக்கு இல்லை…!

You might also like

Leave A Reply

Your email address will not be published.