கஜாபுயலும் நானும் புயல் போன பாதையில் பயணம்

0 207

‘மனதில் அடித்த புயல்…!!’

என்னோடு பயணித்து வரும் நல்லுள்ளங்களுக்கு வணக்கம்.

ஒரு தாய் தன் குழந்தைக்கு உடல் நிலை சரி இல்லாதது கண்டு ‘ அங்கமெல்லாம் துடிக்குது..அடிவயிறு வலிக்குது..’ என வலி புரியாது அழும் தன் குழந்தையை நோக்கி மனதினுள் பதறுவாள்…அப்படித்தான் என மனதினுள்ளும் இருந்தது.. டெல்டா பகுதிகளை நெருங்கிய நேரத்தில் மனம் ஒருவிதமான பதைபதைப்புக்குள்ளானது..

சாலையோரங்களில் மரங்கள் விழுந்து கிடந்தன.. பெரும்பான்மையான பகுதிகளில் மின்கம்பங்கள் சரிந்து மின்கம்பிகள் அறுந்து இருந்த நிலையில் இருந்தது. நாங்கள் செல்லும்போது மழை தூறல் விழுந்து கொண்டிருந்தது.

மன்னார்குடி வழியே செல்லும் பொழுது சாலையோரங்களில் மக்கள் தெருக்களில் நின்று கரங்களை நீட்டி நிற்பதைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாகவும் குற்ற உணர்வும் தோன்றியது. இருப்பினும் குறிப்பிட்ட பகுதிக்கு வருவதாக வாக்குறுதி கொடுத்திருந்தோம்.. அந்த பகுதி மக்கள் காத்திருப்பார்கள் என்ற காரணத்தால் வண்டியை நிறுத்தாமல் பயணித்தோம். ஏதோ காரணத்துக்காக வண்டி நிறுத்துவதே ஒரு தவிர்க்க முடியாத சூழலாக இருந்தது.. அந்தச் சூழலை விவரிக்க முடியவில்லை.

திருத்துறைப்பூண்டி தாண்டி நாங்கள் செல்ல வேண்டிய வேதாரண்யம் அருகே உள்ள கருப்பன்புலம் கிராமத்தைச் சேர்ந்த ரவி அண்ணா மற்றும் அவர்களது பகுதியை சேர்ந்த தன்னார்வ இளைஞர்கள் எங்களை அழைத்துச் செல்ல வந்தனர்.

பயணிக்கும் வழியெங்கும் கழிப்பறை வசதிகள் எங்கும் இல்லை. தங்கள் காலை கடமைகளை செய்யவே எங்களுடன் வந்த தன்னார்வலர்கள் மிகவும் அவதி விட்டனர். இருப்பினும் எங்கு வாகனத்தை நிறுத்தினாலும் மக்கள் கூடிவிடுவதால் பொறுத்துக்கொண்டு வாகனத்தை நிறுத்தாது பயணித்து கருப்பன்புலம் கிராமத்தை நெருங்கினோம்.

எங்கள் வாகனம் வந்ததும் அங்குள்ள மக்களின் கண்களில் ஏதோவொரு மகிழ்ச்சியின் வெளிப்பாட்டினை உணர்ந்தோம். முதலில் கோவையில் உள்ள தன்னார்வலர்கள் சமைத்து கொடுத்த சப்பாத்தி மற்றும் புளியோதரை உணவுகளை அவர்களோடு பகிர்ந்து கொண்டோம். மிகவும் மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. பின்பு அங்கு இருந்த பொருட்களை இறக்கி வைத்துவிட்டு மூன்று குழுக்களாக பிரிந்து களம் காண ஆயுத்தமானோம். ஒரு குழு கொண்டு வந்த பொருட்களை சரியாக பிரித்து எத்தனை, எந்தெந்த பொருட்களில் எத்தனை கிலோ உள்ளது, அதனை பகிர்ந்து எப்படி வழங்குவது என்று கணக்கிட தொடங்கினர்.

ஒரு குழு ஊரில் உள்ள வீடுகள் எவ்வளவு எப்படி பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் எண்ணிக்கையையும் கணக்கெடுக்கவும் சென்றனர். ஊரில் வீடுகள் எங்கெங்கு விழுந்துள்ளது அந்த வீடுகளின் மேல் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஊர் மக்களை ஒருங்கிணைத்து செய்ய அடுத்த குழுவும் என 3 குழுக்களாக பிரிந்து களத்தில் இறங்கினோம்.

நம் கணக்கு வேறு, அங்கு இருந்த நிலையோ வேறாக இருந்தது. இங்கு நாம் நம் நகரங்களில் நடக்கும் பொழுது தார் சாலைகள் தூய்மையாகவும் ஈரப்பதம் இல்லாமல் இருக்கும்.. நாம் அதில் நன்றாக பயணிக்கிறோம். ஆனால் இங்கோ நாம் கால் வைக்கும் இடமெல்லாம் ஈரம், அதுவும் எப்படி இருக்குமென்றால் .. அது ஒரு சதுப்பு நிலம் போன்ற பகுதி, அந்த மணல் பாங்கான பகுதி மண்ணும், புயலால் விழுந்த மரங்களும் அதன் இலைகள் என.

எல்லாம் அந்த தண்ணீரில் கொட்டி சுமார் ஆறு ஆங்குலம் முதல் இரண்டு அடி உயரத்திற்கு எங்கும் தண்ணீர். இந்த தண்ணீரில் இவையனைத்தும் மட்கி தண்ணீர் துர்நாற்றத்துடன் இருந்தது.

காவேரி தனது பயணத்தை இறுதியாக முடிக்கும் பகுதியான அந்த இடம் கடலுக்கு மிக அருகில் இருக்கும். கடலும் ஆறும் தன் பயணத்தை இணைத்துக் கொள்ளும் பகுதி, செழுமையும் வளமும் நிறைந்த பகுதியாக இருந்தும், மக்கள் செழுமையாக இல்லை .. ஏன் என்று மிகப்பெரிய கேள்வி எல்லோர் மனதிலும் இருந்தது.

முதலில் இருந்து ஒவ்வொரு வீடுகளாக பயணிக்கும் போதும் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளின் தாக்கத்தை உணர முடிந்தது. குழந்தைகளின் சிரிப்பில்லாத முகத்தை பார்க்கவே சகித்துக் கொள்ள முடியவில்லை.

மனதில் தைரியத்தை வரவழைத்தோம். ஒவ்வொரு வீடாகச் சென்று அவர்களுக்கு ஒன்று இரண்டு முதல் 150 டோக்கன்களை வழங்கிவந்தனர். அடுத்து பொருட்களை வரிசை படுத்துவது ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது.

இதற்கிடையில் கிராமத்தில் நாங்கள் நம்பி சென்ற ரவி அண்ணா அவர்கள் வீட்டில் எங்களுக்கு தேவையான உணவு பதார்த்தங்களை தயார் செய்தனர். நாங்கள் அவர்களது வீட்டிற்கு சென்ற உடனே நம் பொருட்களை மழையால் பாதிக்காத வண்ணம் பாதுகாப்பு படுத்தினார்.

தங்குவதற்கு என்று உதடுகளை பிரித்தவுடன் உடைந்த கூரைகளை தயார் செய்ய கிராமத்து இளைஞர்கள் தடபுடலாக வேலைசெய்தனர். ஒருபக்கம் அடுப்புகளை தயார் செய்து அங்குள்ள வீட்டு பெண்கள் சமையல் சமைக்க உடனடியாக பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

உணவு தயாராகிக்கொண்டிருக்கும் வேலையில் நாங்கள் வெளியே சென்ற நேரத்தில் அங்கிருந்த ஒரு சிறுமி பெரிய மனுஷி ஆயிருந்தாள். ஆனால் அவர்கள் வீட்டிற்கு அதை கூறவில்லை.

வீடு சரிந்திருந்ததால் அவள் ஏதோ உறவினர் வீட்டில் தங்கி இருந்தாள். உடனே அவர்களது வீட்டை சரி செய்து அச்சிறுமிக்கு சரியான சூழலை ஏற்படுத்த நாம் கொண்டு சென்ற தார்பாலின் கொண்டு கூரையை சரி செய்ய தேவையான பொருட்களை கொடுக்க, அவர்களோ நீங்களே முதல் முதலில் அவருக்கு சீராக கொடுங்கள் என்றனர். கொஞ்சம் கஷ்டமாக இருந்தது, இருப்பினும் அகமகிழ்ச்சியோடு கொடுத்தோம்.

இதற்கிடையில் சமையல் தயாராக இருந்தது.நாங்கள் கொண்டு வந்த பொருட்களை முழுமையாக கொடுக்கும் முன்பு அவர்கள் எங்களுக்கு எதையும் எதிர்பார்க்காமல் உணவைத் கொடுத்தனர். சமைக்கும் பொழுது என்ன மாதிரி பொருட்களைக்கொண்டு சமைத்தனர் என்று தெரியவில்லை.. அமிர்தம் தான் அது. இது போன்று சுவைத்ததில்லை. சுவையோ மிகவும் பிரமாதமாக இருந்தது. ஒவ்வொரு பருக்கையும் அன்போடு சுவைத்தனர். எதார்த்தமான அன்போடு பரிமாறியதை உயிருள்ளவரை மறக்க முடியாது.

உணவருந்தியவுடன் அந்த ஊர் மக்கள் திரள ஆரம்பித்தனர். பொருட்களைக் கொடுத்து முடித்தோம். இதற்கிடையில் மற்றொரு குழு நாங்கள் சென்ற பகுதிக்கே பொருட்களை கொண்டு வந்து கொடுத்தனர். அதையும் ஒருங்கிணைத்து கொடுக்கும் பணிக்கு தயாராகினர் நம் தன்னார்வலர்கள். சூரியன் மறைந்து இருள் சூழ்ந்தது கிராமம் இருண்டது.

இயற்கையோடு இணைந்து பணி செய்யும் நமக்கு இயற்கையோடு இருந்து பழக தெரியவில்லை என்பதை உணர்ந்த நாளிது. எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. இருளை உண்மை என்றும் வெளிச்சம் வந்து செல்லும் மாயை என்றும் நினைத்திருந்த எனக்கு பெருமையுடன் பழகவும் என்னுடன் வாழவும் அன்று எங்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது.

பவுர்ணமி முடிந்த இரண்டு ஒரு நாள் தான் இருக்கும், வானத்தில் நிலவு முதல் முதலில் தங்கத்தைப் போன்று ஒருவிதமான சிவப்பு நிறத்தில் தோன்றியது. கண்ணிலும் நெருப்பு மூட்டி சிவந்தது போல நான் பார்த்த வானத்தை பிரதிபலித்தது. இனம்புரியா மாற்று சிந்தனையுடன் எங்கள் இரவு உணவுக்கு முன்பு புது அனுபவம்…..

‘என்ன மாற்றம் நிகழ்ந்து…’ _ அடுத்த பயணக்குறிப்பில்….

பதிவு: கண்ணண்

You might also like

Leave A Reply

Your email address will not be published.