இதுபோன்ற மீன் சாப்பிட்டால் ரத்த புற்றுநோயா..? காரணம் என்ன..?

0 537

கடலில் பிடித்த மீன்கள் வாரக்கணக்கில் கெட்டுப்போகாமல் இருக்க, தூத்துக்குடி மற்றும் சென்னையில் ஃபார்மாலின் என்ற ரசாயனம் பயன்படுத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ரத்தபுற்று நோயை உண்டாக்கும் ஃபார்மலின் ரசாயனத்தின் விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு…

பழங்களை பழுக்கவைக்க எத்திலின் ..! ரசாயனத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகள்..! வேதி மருந்துகளால் முப்பதே நாளில் சதைபற்றுள்ளதாக காட்சி தரும் பிராய்லர் கோழி..! என்று ரசாயண கலப்பால் மக்களின் ஆரோக்கியம் கேள்வி குறியாகி உள்ள நிலையில், ஆரோக்கியமான உணவு என்றால் மீன் மட்டுமே என்ற எண்ணத்தில் தற்போது இடியாய் இறங்கி இருக்கிறது மீன்களில் பார்மலின் என்கிற ரசாயணம் தெளிக்கப்படுகின்றது என்ற அதிர்ச்சி தகவல்..!

பார்மல்டிஹைடு என்ற ரசாயண பவுடருடன் தண்ணீர் கலப்பதால் அது பார்மலின் என்று அழைக்கப்படுகின்றது. இறந்தவர்களின் சடலத்தை பதப்படுத்துவதற்காக பயன்படும் வேதிப்பொருள் தான் ஃபார்மலின்..! இதன் மூலம் சடலங்கள் கெட்டுபோகாமல் நீண்ட நாட்கள் தாக்குப்பிடிக்கும்..!

அந்த வகையில் ஃபார்மலின் ரசாயணத்தை தூவி பதப்படுத்தப்பட்ட மீன்களை உணவாக உட்கொண்டால் அலர்ஜி, கண் எரிச்சல், வயிற்றுவலி, தொண்டை எரிச்சல், சிறுநீரக கோளாறு மற்றும் ரத்த புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

முதன்முதலாக கேரள எல்லையில் நடத்தப்பட்ட சோதனையில் தான் தமிழகத்தில் இருந்து பார்மலின் கலந்த இறால் மீன்கள் சப்ளை செய்யப்படுவது வெளிச்சத்துக்கு வந்தது..!

தூத்துக்குடி, சென்னை மற்றும் ஆந்திராவில் இருந்து பதப்படுத்தப்பட்டு அனுப்பப்படும் மீன்கள் வாரக்கணக்கில் கெட்டுபோகாமல், அன்று பிடித்த மீனைப்போலவே இருப்பதற்காக ஃபார்மலின் என்கிற ரசாயணம் மீன்கள்மீது தெளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறி அந்த மீன்களை கேரளாவுக்குள் நுழைய தடை விதித்தது கேரள உணவு பொருள் பாதுகாப்புதுறை..!

அதன் தொடர்ச்சியாக தமிழக உணவு பொருள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தூத்துக்குடியில் உள்ள மீன் உணவு பொருட்கள் ஏற்றுமதி நிறுவனங்களில் ஆய்வுக்கு சென்றனர். எந்த மீனையும் மாதிரி எடுத்து பார்க்காமல், பனிக் கட்டியாய் காட்சி அளித்த மீன் உணவுப் பொருட்களை அதிகாரிகள் பார்வையாலேயே ஆய்வு செய்தனர்

எந்த ஒரு ஆய்வும் மேற்கொள்ளாமல் கண் துடைப்பாக மீன்களில் ரசாயண கலவை இல்லை என்று ஒரு அறிக்கை அளித்தனர் அந்த அதிகாரிகள்.

இத்தனைக்கும் பார்மலின் கலப்பு இருக்கின்றதா என்பதை அரியக்கூடிய ஆய்வை மேற்கொள்ளும் தரம் வாய்ந்த ஆய்வக மருந்துகள் தமிழகத்தில் தூத்துக்குடியில் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது..!

இது ஒருபுறம் இருக்க சென்னையில் விற்கப்படும் மீன்களில் ஃபார்மலின் ரசாயணம் தெளிக்கப்பட்டிருப்பதை ஆங்கில நாளிதழ் ஒன்று ஆதாரத்தோடு ஆய்வு அறிக்கையுடன் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

இதையடுத்து தாமதமாக நடவடிக்கையில் இறங்கிய சென்னை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மீன்கடைகளில் மீன்களை வெட்டி, மாதிரி ஆய்வுக்காக எடுத்துச்சென்றனர். சுமார் 12 மணி நேரம் கழித்து 29 மீன்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்ததில் எந்த மீனிலும் பார்மலின் கலப்பு இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வந்திருப்பதாக அறிவித்தனர்.

உண்மையில் ஒரு மீனில் பார்மலின் தெளிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய 2 கிராம் மீன் இறைச்சியை மாதிரியாக எடுத்து, 4 மில்லிகிராம் வெண்ணிற ஆய்வுக்கரைசலில் போட்டால், கரைசல் மஞ்சள் நிறமாக மாறினால் அது பார்மலின் தெளிக்கப்பட்டது என்று அர்த்தம், அது நிறம் மாறவில்லை என்றால் ஃபார்மலின் தெளிக்கப்படவில்லை என்று அர்த்தம் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

இதற்காக மீன்களை ஆய்வு கூடத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டியதில்லை. மேலும், வீடுகளில் நீங்கள் வாங்கி வந்த மீன் அல்லது இறால் போன்றவை தரமானது தானா என்பதை கண்டறிய அவற்றில் ஒன்றை பூனைக்கு வைத்து பாருங்கள், அது மோப்பம் பிடித்துவிட்டு சாப்பிடாவிட்டால் அதில் ஃபார்மலின் கலந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

மீன் வியாபாரிகளின் முன்னிலையிலேயே மீன்களை வைத்து தாங்கள் எடுத்துச் சென்ற பரிசோதனை மருந்து ஒன்றை எடுத்து மீனின் மீது தேய்த்து எடுத்து பார்த்தால் 3 நிமிடத்தில் ஆய்வு முடிவை தெரிந்து கொள்ளலாம் என்றும், அப்படி இருக்க சென்னையில் சோதனையில் ஈடுபட்டவர்கள் மீன் இறைச்சியை ஆய்வகத்துக்கு எடுத்துச்சென்றது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைத்து மீன் பதப்படுத்தும் நிலையங்களிலும் வெளிப்படையான ஆய்வு நடத்தி மீன்களில் ஃபார்மலின் பயன்படுத்தப்படுகின்றதா என்பதை மக்கள் முன்பாகவே ஆய்வு செய்து, சந்தேகத்தை தீர்க்க வேண்டியது அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, தாங்களும் அன்றாடம் உண்பதாகவும், அப்படியிருக்கையில் இதுபோன்று மீனில் கலப்படம் செய்வோமா என மீனவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்

மீன்களை விரும்பிச் சாப்பிட்ட பலர் ஃபார்மலின் தெளிக்கப்படும் தகவல் அறிந்து மீன்களை வாங்கிச் சாப்பிடவே அஞ்சும் நிலை உருவாகி உள்ளது என்பதே கசப்பான உண்மை..!

நன்றி :பாலிமர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.