சேரர் சோழர் பாண்டிய மன்னின் முரசும் அரசும் – ஆய்வுக்கட்டுரை

0 414

தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பாசறைக் கருவியாகத் திகழ்ந்தது முரசு. வீரத்தின் அடையாளமாக, வெற்றியன் சின்னமாக, எதிர்ப்பின் குரலாக, எச்சரிக்கை உணர்வாக, மகிழ்ச்சியின் ஒளியாக முழங்கி, தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றிய தோற் கருவி முரசு. இசைக்கருவி அல்லது தோற்கருவி வரிசையில் இது வீரமுழவு. ஒரு தலைவனுக்கு உரிய சிறப்புக்கள் என்று குறிக்கப்படும் மலை, ஆறு, நாடு, ஊர், யானை, குதிரை, மாலை, கொடி, முரசு, ஆணை ஆகிய பத்தில் ஒன்றாக சிறப்பிடம் பெற்றது முரசு.

இடிஓசை எழுப்பும் முரசாகவும், இன்னிசை எழுப்பும் முரசாகவும் பிற தாளக்கருவிகளுடன் இணைத்து இசைக்கும் கருவியாகவும், தனித்து இயங்கும் கொட்டு முரசாகவும் முழங்கியது.

வாத்தியமரபு என்ற இசை நூலின் 87, 88, 89 ஆவது பாடல்கள் முரசின் இலட்சணம் பற்றிக் குறிப்பிடுகின்றன. அதில்,

“கொட்டவென் றெடுத்தொரு மேளமது

குலாவியதைச் சுத்தினிறைக் கச்சமது

வட்டமாய் அதிலிருக்கும் வளையமது

வாகுபெற யிருவாய்த் தட்டுமது

இட்டமாய் அதிலிருக்குங் கண்க ளது

இயல்வாகக் கோக்கின்ற கயிறது

தட்டுதனை இறுக்குகின்ற திரிகளது

தாக்குகின்ற கம்பது சொல்லுவீரே”

-(வாத்தியமரபு, அ.நா.பெருமாள்,ப.115)

முரசின் மரபு :

முரசு செய்வதற்குக் கடம்ப மரத்தினைப் பயன்படுத்தியுள்ளனர். அரசனின் கருவியாகவும் அரண்மனைக்கு உரியதாகவும் திகழ்ந்ததால், வீரத்தால், வெற்றியால் கிடைத்ததைக் கொண்டு முரசு செய்யும் மரபை வைத்திருந்ததை இலக்கிய குறிப்புகள் காட்டுகின்றன.

“பகைவர் பலர்கூடி நின்று காத்த மலர்ந்த பூக்களையுடைய கடம்ப மரத்தினை, காவலமைந்த அடியோடு தடிந்து ஒழிக்குமாறு வீரரை ஏவி, போரை வென்று முழங்கும் முரசு. பகைவரது காவல்மரத்தை வெட்டி அதைக்கொண்டு முரசு செய்தல் மன்னர் இயல்பு” என்று எடுத்து காட்டுகிறது பதிற்றுப்பத்து” (இரண்டாம் பத்துபதிகம்).

“கடலைக் கடந்து சென்று காவல்மரமாகிய கடம்பினை வெட்டி வீழ்த்தி, அதனால் செய்யப்பட்ட வெற்றி தரும் பெரிய முரசு” –(பதிற்.17).

மோகூர் மன்னனுடைய காவல் முரசைப்பற்றி,

“அவன் உரைத்த வஞ்சினத்தைச் சிதைத்துத் தன்னையும் பணிவித்து, அவனுடைய காவல் மரமாகிய வேம்பினையும் அடியோடு வெட்டி வீழ்த்தி, முரசு செய்வதற்கேற்பச் சிறு துண்டங்களாகத் தறித்து, வண்டியிலேற்றி யானைகளை அதனை யீர்க்கும் பகடுகளாகப் பூட்டிச் செலுத்தினான்”

(பதிற்.ஐந்தாம் பத்து 44) என்றும் இலக்கியம் காட்டும் சான்றுகள் யாவும் முரசு என்பது எத்துணை வீரம் செறிந்தது என்பதை அறிவிக்கின்றன.

முரசின் வகைகள் :

முரசின் இயல்பு பேரொலி எழுப்புவதுதான். முரசுகள் பலவகை; பல்வேறு பொழுதுகளில், பல்வேறு வேறுபட்ட ஒலிகளை எழுப்பி அதனதன் தன்மைகளை உணர்த்தக் கூடியதாக, அந்த ஒலிப்புகள் அதற்குரிய செய்திகளை அறிவிப்பதாக அமைந்துள்ளன.

மாக்கண் முரசு, வெங்கண் முரசு, மயிர்க்கண் முரசு, கடிப்பிகு முரசு, குணில்வாய் முரசு, படுகண் முரசு, பலம்படு முரசு, வென்றெறி முரசு, புள்வாய் முரசு, கடிமுரசு, வெண்முரசு, மணிமுரசு, வண்முரசு, கோலமார் முரசு, பிளிறுவார் முரசு, துணைக்குரல் முரசு, இடியுறழ் முரசு, வார்பிணி முரசு, ஏமமுரசு, கொற்ற முரசு, மாமுரசு, வெற்றிமுரசு, மங்கல முரசு, மண்ணுறு முரசு என்று முரசின் வகைகளையும், முரசின் அமைப்புகளையும் அறியும்பொழுது பண்டைத் தமிழர் தம் வீரத்தைக் கருவிகள் மூலம் காட்டிய நுண்ணறிவை வியக்காமல் இருக்க முடியுமா?

இலக்கிய சான்றுகள் :

முரசவாகை, முரசஉழிஞை ஆகிய சொற்கள் வீரம் மிகுந்த முரசின் தன்மையை, அதன் நிலைமையைச் சொல்லும் (பு.வெ.) துறையாகத் தமிழிலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன.

பாசறைகளில் பகையரசர் நடுங்குமாறு முரசு முழங்குகிறது. முழங்குவது அரசு. ஆனாலும், ‘பொங்கு போர் முரசம் ஆர்ப்ப’ ‘கரம்பயில் முரசினம் கறங்க’ முரசதிர்ந்தது’ என்று அதன் பேரொலித் தன்மையை குறிப்பிட்டுள்ளனர்.

முரசுக்கு கட்டில் :

‘முரசு கட்டில் என்பதைக் காட்டும் வகையில் (புறநானூற்றுப்பாடல்) அதன் சிறப்பைப் புலவர் மோசிகீரனார் எடுத்துரைத்துள்ளார். முரசு கட்டிலில் அறியாது உறங்கிய தனக்குக் கவரி வீசிய சேரமானின் அரிய பண்பைப் போற்றி பாடிய பாடலில்,

“மாசுஅற விசித்த வார்புஉறு வள்பின்

மைபடு மருங்குல் பொலிய, மஞ்ஞை

ஒலிநெடும் பீலி ஒண்பொறி, மணித்தார்

பொலங்குழை உழிஞையொடு பொலியச் சூட்டிக்

குருதிவேட்கை உருகெழு முரசம்” –(புறநா.50)

வலிமையும் பெருமையும் உடைய தலைவனே! குற்றமில்லாது பின்னப்பட்ட வாரையுடையதும், கருமரத்தால் அழகுறச் செய்யப்பட்டதும், மயிர்ப்பீலிகளாலும் நவரத்தின மணிமாலைகளாலும் அணி செய்யப்பட்டதுமான இம்முரசு கட்டில் எண்ணெய் நுரைபோன்று மென்மையான உழிஞைப்பூக்களால் இனிது விளங்க, அதன் தன்மை அறியாது ஏறி உறங்கிக் கிடந்த என்னை’ என்று குறிப்பிடும்பொழுது முரசை அழகுபடுத்தி அதற்கென்று தனியான கட்டில் அமைந்திருந்ததையும் சுட்டிக் காட்டியுள்ளார் புலவர் மோசிகீரனார்.

பழங்காலத்தில் கொடி என்பது ஆட்சி, அரசு, மன்னர், சார்புடையதாக அமைவது பொதுப்பண்பாகும் முரசு முழங்க அதை நாட்டுமாறு அவனை கூறுகிறான்.

“முரசொடு நெடுங்கொடி முழங்க நாட்டுக

விரைவோடு படுவென வேந்த னேயினான்” –(நீல.226)

என்று முரசுக்கு அரசன் முதலிடம் வழங்குவதைக் காணலாம். முரசமெல்லாம் பறிப்பார் (காப்பவர்) படுதலான் இருந்து கெடும். முரசும் அரசும் இயைந்தே கூறப்படும். அரசன் பெருமை இழந்தால் முரசின் பெருமையும் போகும் என்பதும் சுட்டிக் காட்டப் படுகிறது. தமிழரின் சிறப்பைச் சொல்ல இன்னும் எத்தனையோ உண்டு.

வார் முரசம் ஆர்க்கும் (பு.வெ.மா. உழிஞை, 9.2:37), முழங்கு மதிரு முரசம் (பு.வெ.மா. வாகை 4.2.4) உரந்தலைக் கொண்ட உரும் இடிமுரசம் (பத்து, திருமுருகா.121), போய்க்கண் அன்ன பிளிறு கடிமுரசும் (பத்து. பட்டின. 236), இடியுமிழ் முரசம் (அக.நா.354:2), இடியிசை முரசம் (பதி. 66.4), இடியென முழங்கு முரசு (புற.நா.17.39), உரும் இசைமுழக்கு என முரசம் இசைப்ப (புற.நா.373), அதிர்குரல் முரசம் நாண (சீவக. 543.2), அதிர்குரல் முரசம் (பெருங்.1.49.86), இடிக்கண் முரசு (பெருங்.2.2.166), இடிக்குரலின முரசு (கம்ப.பால. 710.2), இடிக்குரல் முரசதிர் (கம்.பால.808.2) என்று அதன் பேரொலித் தன்மை சுட்டிக் காட்டப்படுகிறது.

முரசொலித்தல் :

காவல் செய்யவும், ஏவல் செய்யவும், வெற்றியையும், விழாவைக் கொண்டாடவும், பலவேறு பொழுதுகளில் முரசுகள் ஒலித்துள்ளன.

போர்ப்பறையும் முரசும் பிற இசைக்கருவிகளும் கூடி இசைக்கப்படும். அது ‘விரவுப் பணை முழங்கொலி’ எனப்பட்டது. முரசு வெற்றியை உண்டாக்கும். வெற்றியும் விழாவும், கொடையும் குறித்து முழங்கும் மூவகை முரசுகளுள் வெற்றி முரசே. மன்னனின் எறிகின்ற முரசம் இவ் உலகத்திற்குக் காவலென்று கூறும்படியாக ஒலியா நிற்கும். ஆகவே அது ‘ஏமமுரசு’. தோற்று ஓடும் மன்னர்கள் தம் முரசங்களைக் கைவிட்டு ஓடுவர். அரண்மனைக் காவலர் மாலையில் முரசம் முழங்குகின்றனர். அது ‘மாலை முரசம்’ ஆகும். குருதிப்பலி கொள்ளும் விருப்பத்தையுடைய உட்குப் பொருந்தியது ‘வீரமுரசம்’. முரசம் மூன்று, வீரமுரசு, நியாய முரசு, தியாக முரசு என்பன. மணமுரசுடனே ஏனைய இரண்டையும் கூட்டி மூன்றென்றும் கூறுவர்” (தமிழர் தோற்கருவிகள், ஆர், ஆளவந்தார், ப.99).

முரசு எனப் பெயர் ஒன்று எனினும், பல்வேறு சூழல்களில் பல்வேறு ஒலிகளை எழுப்பவல்ல முரசுகளைப் பயன்படுத்தி வந்தனர் தமிழர்கள். முரசு அரசனுக்கு உரியது எனினும், முரசை அறைந்து ஒலிக்கச் செய்தவர்கள் தோள்வலிமிக்க படைவீரர்களும், காவலர்களும்தான்.

-முனைவர் மு.வளர்மதி

You might also like

Leave A Reply

Your email address will not be published.