இந்தியாவிலே நீர் மேலாண்மையில் சிறந்து விளங்குவது தமிழ்நாடு: சொன்னது யார் தெரியுமா…? அட நம்ம வெள்ளச்சாமிதான்..!

0 335

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் தமிழ்நாடு சிறந்து விளங்கியது என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலியில் ‘மன் கீ பாத்’(மனதின் குரல்) என்ற தலைப்பில் உரையாற்றி வருகிறார். நேற்று அவர் பேசும்போது கூறியதாவது:-

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் நமது நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விதமாக வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து இருக்கிறார்கள். பதக்கங்கள் வெல்வது வீரர், வீராங்கனைகளுக்கு புகழ் சேர்க்கும் விஷயமாக இருந்தாலும் அது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பெருமை சேர்ப்பதாகவும் அமைந்திருந்தது.

கடந்த மாதம் இந்த நிகழ்ச்சியில் பேசும்போது ‘உடலுறுதி இந்தியா இயக்கம்’ (பிட் இண்டியா) குறித்து அறைகூவல் விடுத்து அனைவரும் இதில் இணையுங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். பலர் இதற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து கடிதங்கள் எழுதியுள்ளனர்.

திரைப்பட நடிகரான அக்‌ஷய்குமார், டுவிட்டரில் ஒரு காட்சியை பதிவேற்றம் செய்திருக்கிறார். அதை நானும் பார்த்தேன். அவர் மரத்தால் ஆன மணிகளுடன் உடற்பயிற்சி மேற்கொள்வதைக் காணலாம். இந்த பயிற்சி முதுகிற்கும், வயிற்று தசைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார். இது போன்ற ஒரு இயக்கம் நம் அனைவருக்கும், நாட்டுக்கும் அதிக பயனுள்ளது.


எந்தச் செலவும் இல்லாமல் உடல் நலத்தை பேண உதவும் ‘உடலுறுதி இந்தியா’ இயக்கத்தில் யோக கலைக்கும் சிறப்பான மகத்துவம் இருக்கிறது. ஜூன் மாதம் 21-ந்தேதி சர்வதேச யோக கலை தினத்தின் மகத்துவத்தை உலகமே ஏற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக இன்றே நீங்களும் தயாராகுங்கள். உங்கள் நகரம், கிராமம், பகுதி, பள்ளி, கல்லூரி, என அனைத்து வயதினரும் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

மத்திய அரசின் விளையாட்டுத்துறை, மனித வள மேம்பாட்டுத்துறை, குடிநீர் வழங்கல் துறை ஆகிய மூன்றும் இணைந்து தூய்மை இந்தியா கோடைக்கால பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்திருக்கின்றன. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித் திட்ட இளைஞர் கள், நேரு யுவகேந்திரா இளைஞர்கள் என எல்லோரும் இணைந்து கொள்ளலாம்.

இதனால் தூய்மை பணிக்கும் வலு கூட்டப்படும். அக்டோபர் 2-ந்தேதி காந்தியடிகளின் 150-வது பிறந்த நாளை கொண்டாடும் நேரத்தில் அதற்கு முன்பாக ஏதாவது சாதிக்கும் சந்தோஷம் உங்களுக்கு கிடைக்கும். இதில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு தேசிய விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். பல்கலைக்கழக மானியக் குழு 2 கூடுதல் புள்ளிகளையும் அளிக்கும்.

எதிர்காலத்தில் உலகில் தண்ணீருக்காக போர்கள் நடக்கலாம் என்ற நாம் கேள்விப்படுகிற நேரத்தில், நீர் சேமிப்பு என்பது சமுதாயத்தின் பொறுப்பு என்று நமக்குத் தோன்றவில்லையா?… இது ஒவ்வொரு தனிமனிதனின் பொறுப்பாகவும் இருக்கவேண்டும். நீர் சேமிப்பு என்பது நமது நாட்டு மக்கள் அனைவருக்கும் புதிய விஷயம் அல்ல.

பல நூற்றாண்டுகளாகவே நமது முன்னோர்கள் இதைச் செயல்படுத்தி காட்டி இருக்கிறார்கள். ஒவ்வொரு சொட்டு நீரின் மகத்துவத்துக்கும் அவர்கள் முன்னுரிமை அளித்து இருக்கிறார்கள்.

நீர் மேலாண்மையில் அவர்கள் புதிய புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்து, ஒவ்வொரு சொட்டு நீரையும் எப்படி சேமிப்பது என்று அறிந்து கையாண்டு இருக்கிறார்கள்.

உங்களில் யாருக்காவது தமிழ்நாடு செல்லும் வாய்ப்பு கிட்டியிருந்தால், அங்கே சில கோவில்களில் நீரிறைக்கும் முறை, நீர் சேமிப்பு முறை, வறட்சிக்கால ஏற்பாடுகள் ஆகியவை தொடர்பாக பெரிய பெரிய கல்வெட்டுகள் காணப்படுவதை நீங்கள் கவனித்து இருக்கலாம்.

மன்னார்கோவில், சேரன்மாதேவி, கோவில்பட்டி, புதுக்கோட்டை என அனைத்து இடங்களிலும் பெரிய பெரிய கல்வெட்டுகள் காணக் கிடைக்கின்றன. இன்றும், பல்வேறு படிக்கட்டு கிணறுகள் சுற்றுலாத்தலங்களாக அறியப்படுகின்றன. இவை நீர் சேமிப்பு இயக்கம் குறித்த நமது முன்னோர்களின் வாழும் எடுத்துக்காட்டுகளாக இன்றும் திகழ்கின்றன என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

மகாத்மா காந்தி ஊரகப் பகுதி வேலை வாய்ப்பு திட்டத்துக்கு அப்பாற்பட்டு நீர்மேலாண்மைக்கென சராசரியாக ரூ.32 ஆயிரம் கோடி செலவிடப்பட்டு இருக்கிறது. 2017-18-ல் மட்டும் ரூ.64 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டதில் சுமார் ரூ.35 ஆயிரம் கோடி நீர் சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மை போன்ற நடவடிக்கைகளுக்காக மட்டும் செலவிடப்பட்டு உள்ளது.

இன்னும் சில நாட்களில் புனித ரமலான் மாதம் தொடங்க இருக்கிறது. உலகம் முழுவதும் ரமலான் மாதம் முழு சிரத்தையுடனும், மரியாதையுடனும் கொண்டாடப்படுகிறது.


இறைத்தூதர் முகமது நபிகள் விடுத்த செய்தியையும், அளித்த உபதேசத்தையும் நினைத்துப் பார்க்கும் சந்தர்ப்பம் இது. சமத்துவம், சகோதரத்துவம் நிறைந்த பாதையில் பயணிப்பதுதான் அவருடைய வாழ்க்கையில் இருந்து நாம் கற்கும் பாடம்.

உங்களிடத்தில் ஏதாவது ஒரு பொருள் உங்கள் தேவைக்கு அதிகமாக இருந்தால் நீங்கள் அதை தேவைப்படும் மனிதருக்கு அளியுங்கள் என்று இறைத்தூதர் முகமது நபிகள் கூறி இருக்கிறார். ஆகையால்தான் ரமலான் மாதத்தில் கொடைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது. புனித ரமலான் மாதத்திற்கான நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

புத்த பவுர்ணமி ஒவ்வொரு இந்தியனுக்கும் சிறப்பான தினம். கருணை, சேவை, தியாகம் ஆகியவற்றின் சக்தியை வெளிப்படுத்திய பகவான் புத்தரின் பூமி பாரதம். அவர் உலகெங்கும் இருக்கும் லட்சோப லட்ச மக்களுக்கு வழிகாட்டி இருக்கிறார். டாக்டர் அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டத்தின் வாயிலாக தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும், வஞ்சிக்கப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப்பட்டோருக்கும், விளிம்பில் இருக்கும் கோடிக்கணக்கானவர்களுக்கும் ஆற்றல் வழங்கினார். கருணைக்கு இதைவிட சிறந்த வேறு ஒரு எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 1998-ம் ஆண்டு மே மாதம் 11-ந்தேதி ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்திய அணுகுண்டு பரிசோதனை நிகழ்த்தியது. அந்த நாளும் புத்த பவுர்ணமிதான்.

பொக்ரான் அணுகுண்டு பரிசோதனையின் 20-ம் ஆண்டைக் கொண்டாடும் இவ்வேளையில் இந்தியாவின் சக்திக்காக, வாஜ்பாய் அளித்த ஜெய் விஞ்ஞான் மந்திரத்தை நம்முள் ஏற்று சக்தி படைத்த இந்தியாவை உருவாக்க ஒவ்வொரு இளைஞனும் தனது திறமையை நாட்டோடு இணைக்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.