யார் இந்த கஃபில் கான்..? உண்மையில் நடந்தது என்ன..?கொலையா..? படுகொலையா..?

0 619

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற கோரக்பூர் மருத்துவமனை சோகம்… நிகழ்கால வரலாற்றின் கறுப்புப் பக்கம்.

மூளை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த குழந்தைகளில் சுமார் 60 குழந்தைகள், ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்குப் பலியாகின. அப்போது, தனி ஒருவனாக தன்னுடைய சுய முயற்சியால், வேறு சில இடங்களிலிருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களைக் கொண்டு வந்து பல குழந்தைகளைக் காப்பாற்றினார் அந்தப் பிரிவுக்கு அன்றைக்குப் பொறுப்பில் இருந்த மருத்துவர் கஃபீல் கான்.

அதற்குப் பின் நடந்த விஷயங்களை நம்மில் பலர் அறிவோம். நியாயமாகப் பார்த்தால், குழந்தைகளைக் காப்பாற்றிய அந்த மருத்துவருக்கு விருது கொடுத்துக் கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால், அவரோ சிறையில் தள்ளப்பட்டிருக்கிறார். சிறையிலிருந்து அவர் எழுதிய கடிதம், சில நாட்களுக்கு முன்பு வெளியானது. படிப்பவரின் மனதை நொறுக்கும் அந்தக் கடிதம் வெளியான சில நாட்களில், அதுவரை அவருக்கு மறுக்கப்பட்டு வந்த பிணை, வழங்கப்பட்டிருக்கிறது.

ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்தக் கடிதத்தை ‘கருப்பு’ எனும் இணைய இதழில் செம்பியன் மொழிபெயர்த்துள்ளார். அதிலிருந்து ஒரு பகுதி:

“….13-08-2017 அன்று காலை, உத்தரபிரதேச முதல்வர் யோகிஜி மகராஜ் வந்தபோது, என் வாழ்க்கை தலைகீழாக மாறியது.

அவர் என்னிடம் கேட்டார்: “நீதான் அந்த கஃபீல் கானா? நீதான் சிலிண்டர்களை ஏற்பாடு செய்தாயா?

“ஆமாம் சார்…”

அவர் மிகுந்த கோபத்துடன் என்னைப் பார்த்துக் கேட்டார், “சிலிண்டர்களை ஏற்பாடு செஞ்சுட்டா, நீ ஹீரோ ஆகிடுவியா? இரு… இரு… நான் கவனிச்சுக்கிறேன்!”

யோகிஜி கோபமாக இருந்ததற்குக் காரணம், ‘இந்தச் சம்பவம் ஊடகங்களில் எப்படி வெளியானது?’ என்பதுதான். அல்லாவின் மீது சத்தியம் செய்கிறேன். அந்த இரவில் எந்த ஊடகவியலாளருக்கும் இது குறித்து நான் எதுவுமே தெரிவிக்கவில்லை. முந்தைய நாள் இரவிலிருந்தே அவர்கள் அங்கிருந்தனர்.

அதற்குப் பிறகு காவல்துறையினர் என் வீட்டுக்கு வரத் தொடங்கினர். கத்துவது, அச்சுறுத்துவது என எனது குடும்பத்தைச் சித்திரவதை செய்தனர்.

அவர்கள் என்னை என்கவுன்ட்டரில் கொன்றுவிடுவார்கள் எனப் பலர் எச்சரித்தனர். என் குடும்பம், என் அம்மா, என் மனைவி, என் குழந்தைகள் மிகவும் அச்சத்தில் இருந்தார்கள். அதை விளக்க எனக்கு வார்த்தைகள் இல்லை.

அவமானம், துன்பம் ஆகியவற்றிலிருந்து என் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக நான் சரணடைந்தேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதால் நிச்சயமாக நான் நீதியைப் பெற்றாக வேண்டும்.

ஆனால், டிசம்பர் 2017 முதல் ஏப்ரல் 2018 வரை நாட்கள், வாரங்கள், மாதங்கள் ஓடிக்கொண்டிருந்தன. ஹோலி வந்தது, தசரா வந்தது, தீபாவளி வந்தது, கிறிஸ்துமஸ் போனது, புத்தாண்டும் வந்தது. ஒவ்வொரு நாளும் என்னைப் பிணையில் விடுவிப்பார்கள் என்று நம்பியே கழிந்தன.

பின்னர், நீதித்துறையும் நெருக்கடியின் கீழ் செயல்படுகிறது என்பதை நான் உணர்ந்தேன் (அவர்களும் அதை ஒப்புக்கொண்டனர்).

ஒரு தடுப்பு முகாமின் கட்டாந்தரையில், 150-க்கும் மேற்பட்ட சிறைவாசிகளுடன், இரவில் லட்சக்கணக்கான கொசுக்களுடனும் பகலில் ஆயிரக்கணக்கான ஈக்களுடனும் தூங்கிக்கொண்டிருக்கிறேன்.

உயிர் வாழ, உணவை விழுங்க, வயலில் அரை நிர்வாணமாகக் குளிக்க, உடைந்த கதவு கொண்ட கழிப்பறைக்குள் உட்கார நான் முயற்சிக்கிறேன். ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் என் குடும்பத்தைச் சந்திக்கக் காத்திருக்கிறேன்.

எனக்கு மட்டுமல்ல… என் குடும்பத்துக்கும் சேர்த்தே வாழ்க்கை என்பது நரகமானதாக, துன்பகரமானதாக மாறிவிட்டது.

காவல் நிலையத்திலிருந்து நீதிமன்றம்வரை, கோரக்பூரிலிருந்து அலாகாபாத்வரை என நீதியைப் பெற்றுவிடும் நம்பிக்கையில், அவர்கள் அலைய வேண்டியிருக்கிறது. ஆனால், அனைத்தும் வீண்.

என் மகளுடன் இருந்து, முதல் பிறந்தநாளைக்கூட என்னால் கொண்டாட முடியவில்லை.

இப்போது அவளுக்கு ஒரு வயது முடிந்து ஏழு மாதங்களாகின்றன. ஒரு குழந்தை மருத்துவனாக என்னுடைய குழந்தை வளர்வதைக்கூட என்னால் பார்க்க முடியவில்லை.

ஒரு குழந்தையின் வளர்ச்சியில் உள்ள முக்கியமான மைல்கற்களைப் பற்றி பெற்றோர்களுக்கு நான் விளக்குவது வழக்கம். ஆனால் என்னுடைய மகள் எப்போது நடக்க, பேச, ஓட ஆரம்பித்தாள் என்று எனக்குத் தெரியாது.

இப்போது மீண்டும் அந்தக் கேள்வி என்னை அலைக்கழிக்கிறது. நான் உண்மையிலேயே குற்றவாளியா? இல்லை, இல்லவே இல்லை

You might also like

Leave A Reply

Your email address will not be published.