குயிலை நேரில் காணாதவர்களுக்கும் அதன் ஓசையை கேட்காதவர்களுக்கும் இப்பதிவு..!

0 313

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் தொடங்கினாலே அதிகாலை முதல் மாலை வரை, குயில்களின் இனிமையான கூவல் ஓசை கேட்க  தொடங்கும்.‎

இந்த இனிமை யான ஓசை மே இறுதிவரை, தொடர்ந்து நகரம், கிராமம் என எல்லா இடங்களிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

இந்த குயில் களின் கூக்குரலை ரசிப்பவர்கள் பலருக்கும், அவை எதற்காக ஓயா மல் கூவுகின்றன, அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது தெரியாது.

அந்த இனிமை யான கூவலுக்கு பின்னணியில் குயில்களின் இனப்பெருக்க உயிர் போராட்டம் இருப்பதாக பறவை ஆர்வலர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மதுரை திருமங்க லத்தைச் சேர்ந்த பறவை ஆர்வலர் ரவீந்திரன் நடராஜன் கூறியதாவது: நம் அனைவருக்குமே சிறுவயது முதல் தெரிந்த ஒரு விஷயம் காகங்களின் கூடுகளில் குயில்கள் முட்டையிடும் என்பதுதான்.

ஆனால், அதைச் செய்வதற்கு முன் எத்தனை கள்ளத்தனமான திட்டமிடல் இருக்கிறது என்று தெரிந்தால், குயில்களைப் பற்றிய நமது எண்ணங்கள் மாறிவிடும்.

காகங்கள் பின்பனிக் காலம் முடியும்போதும், முன்பனிக் காலம் தொடங்கும் போதும் குச்சிகளைச் சேகரித்து கூடுகளைக் கட்டவோ அல்லது பழைய கூடுகளைச் சீரமைக்கவோ தொடங்கும்.

இதை ஆண் குயில்கள் கவனிக்கத் தொடங் கும். பின்னர் காகங்கள் கூடு கட்டும் செய்தியை, பெண் குயில்களுக்கு ஓசை எழுப்பி இணை சேர அழைக்கும். இவ்வாறு இணை சேர அழைக்கும் ஓசை, இரண்டு மூன்று வகையில் ஒலிக்கும்.

ஆண் குயில்கள் சில வேளை யில் ஒன்றுக்கு ஒன்று இசைப்பாட்டு பாடுவதும் உண்டு. பெண் குயில் தனது இணையை தேர்வு செய்யும் முன் ஆண் குயில்களுக்குள் ஒரு போராட்டமே நடக்கும்.

பின்னர் ஒரு ஆணும், பெண்ணும் இணை சேர்ந்தால் அந்த பருவத்துக்குள் அவை பிரியாது. இவை இரண்டும், அந்த பகுதியில் இருக்கும் காகங்கள், எப்போது முட்டையிடும் எனக் காத்திருக்கும்.

காகங்கள் முதல் முட்டையிட்ட உடனே, குயில்கள் காகத்தின் கூடு களில் முட்டையை இட ஆரம்பிக் கும். காகத்தின் கூட்டுக்குச் சென்று முட்டையிட்டு வருவது அவ்வளவு எளிதல்ல.

எனவே இவை இரண் டும் சேர்ந்து, காகத்தை ஏமாற்ற ஆண் குயில் முதலில் காகங்களின் கூடுகளுக்கு அருகில் சென்று அவற்றை வெறுப்படையச் செய் யும். கோபம் கொள்ளும் காக்கை கள் கூட்டை விட்டுக் கிளம்பி ஆண் குயிலைத் துரத்தத் தொடங்கும்.

அந்த நேரம் பெண் குயில் சத்தம் இல்லாமல் சென்று காகத்தின் முட்டைகளுடன் தனது முட்டை ஒன்றை இட்டு சென்றுவிடும்.

ஆனால், காகங்களால் முட்டைகளின் எண்ணிக்கையை கணக்கில் கொள்ள முடியும். எனவே அதற்கு சந்தேகம் வராமல் இருக்க பெண் குயில், காகத்தின் முட்டை ஒன்றை வெளியே தள்ளிவிட்டு, தன் முட்டையை இட்டு விடும். இப்படியே, அந்த பகுதியில் இருக் கும், ஒவ்வொரு காகத்தின் கூடு களிலும் ஒரு முட்டையை இடும். இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தில் மாட்டிக்கொள்ளும் குயில்கள், காகங்களால் கடுமையாகத் தாக்கப்படும்.

இந்த சவால் ஒன்று மட்டுமே குயில்கள் அதிகபட்சமாக தங்கள் இனப்பெருக்கத்துக்காக எடுக்கும் பெரும் முயற்சி ஆகும்.

ஒரு வழியாக எல்லா முட்டைகளையும் குயில் இட்ட பின், தான் முட்டையிட்ட கூடுகளைக் கவனித்துக் கொண்டே இருக்கும். எந்தக் காகமாவது தன் முட்டையை அடை காக்காமல் தவிர்ப்பது தெரிந் தால், கள்ளத்தனமாய் போய் காகத் தின் கூடுகளைக் குயில்கள் கலைத்து விட்டு வந்துவிடும் என்றார்.

காகத்தின் கூட்டில் குயில் குஞ்சுகள்

பொதுவாக, காகங்களின் முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவர பதினெட்டு நாட்கள் ஆகும். ஆனால், குயில்களின் முட்டையில் இருந்து குஞ்சுகள் பதினான்கு நாட்களில் வெளிவந்து விடும். கண் திறக்காத நிலையிலும் இந்தக் குஞ்சுகள், அந்தக் கூட்டில் உள்ள மற்ற முட்டைகளைக் கூட்டைவிட்டு வெளியே தள்ளி விடும்.

எனவே கூட்டின் முதல் குஞ்சு என்ற உரிமையை நிலை நாட்டி உணவின் பெரும் பகுதி அதற்கே கிடைக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ளும். மேலும் பிறந்த ஒரு மாதத்துக்கு அது காகத்தைப் போலவே குரல் எழுப்பும். இந்த குரல் மாறும்போதுதான், காகங்கள் அதை கூட்டை விட்டு துரத்தும்.

இவ்வாறு கூட்டை விட்டு வெளியேறும் இளம் குயில்கள், ஒரு வருடம் வரை ஒரு அணியாக ஆல், அத்தி, வேப்பமரம் மற்றும் மாந்தோப்புகளில் தஞ்சம் அடையும்.

அவற்றுக்கு பிடித்தமான உணவுகள் கம்பளிப்பூச்சிகள், ஆல், அத்தி பழங்கள் ஆகும். பின்னர் ஓராண்டு முடியும் நிலையில் வசந்த காலம் தொடங்கும்போது, தங்கள் முதல் இனப்பெருக்கத்தை இந்த இளம் குயில்கள் தொடங்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.