`ரயில் நிலையங்களில் இளநீர் விற்க உள்ள தடை நீக்கப்பட வேண்டும்!’ –

0 243

வெளிநாட்டில், ஒரு இளநீரின் விலை 315 ரூபாய் வரை உள்ளது. குடலைப் புண்ணாக்கும் கோக், பெப்ஸி பானங்களை நம்மிடம் கொடுத்துவிட்டு, குளுகுளு இளநீரை நம்மிடமிருந்து இறக்குமதிசெய்து குடிக்கிறார்கள் வெளிநாட்டவர்கள்.

ஆனால், இளநீரின் மருத்துவ குணம் தெரிந்தும் பன்னாட்டு பானங்களையே விரும்புகிறது இந்திய மனசு என்று இயற்கை விவசாயத்தில் இளநீர் சாகுபடி செய்துவரும் பெண் விவசாயி வஞ்சிக்கொடி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில், மொத்தம் 15 லட்சம் தென்னைகள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. மரம் ஒன்றிலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 200 இளநீர் பறிக்கப்படுகிறது. அதாவது, ஆண்டுக்கு 30 கோடி இளநீர் உற்பத்தி செய்யப்படுகிறது. மற்ற நாடுகளை ஒப்பீடு செய்கையில், தமிழ்நாட்டில் இளநீர் நுகர்வு மிகக்குறைவுதான். அதேசமயம், நாள் ஒன்றுக்கு ஒன்றைரைக்கோடி பாட்டில் பானங்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

அதற்காக கோடிக்கணக்கில் செலவுசெய்து ஊடகத்தில் விளம்பரம் செய்யப்படுகிறது. குளிர்பான விற்பனைக்கு பருவங்கள் கிடையாது, கோடைக்காலம், குளிர்காலம், பனிக்காலம் என்று எல்லா பருவங்களிலும் இதன் விற்பனை அமோகமாக உள்ளது. இளநீரைப் பொருத்தமட்டில், கோடைக்காலங்களில் மட்டுமே ஓரளவு விற்பனை செய்யப்படுகிறது. மனித உடலுக்கு மட்டில்லா நன்மைகள் கொடுக்கும் இளநீருக்கு விலை இல்லாமல், தென்னை விவசாயிகள் வேதனைப்படுகிறார்கள்.

கோடைக்காலங்களில் இளநீர் ஒன்றின் அதிக பட்ச விலை 15 ரூபாய் எனவும், மற்ற மாதங்களில் 10 ரூபாய் என்றும் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் குளிர் பானங்களோ, ஆண்டு முழுவதும் லிட்டர் 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ரயில் மற்றும் விமான நிலையங்களில் அனைத்து வெளிநாட்டு பானங்களும் விற்பனைசெய்யப்படுகின்றன. அங்கெல்லாம் சுதேசி பானம் இளநீர் விற்கத் தடை உள்ளது. இந்தத் தடை நீக்கப்பட வேண்டும். அரசு அலுவலக கேன்டீன்கள், சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள் என்று அனைத்து இடங்களிலும் இளநிர் விற்பனை கட்டாயமாக்கப்பட வேண்டும். இளநீரின் நன்மைகள்குறித்த விளம்பரப் பதாகைகள் அனைத்து இடங்களிலும் வைக்கப்பட வேண்டும்.
அப்பொழுதுதான் வெளிநாட்டுக் குளிர்பானங்களைப் புறக்கணித்து, இளநீர் மவுசு பெறும்’ என்று தெரிவித்தார்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.