யார்முகத்தில் விழித்ததோ நரி…? நரியின் நிலை..?

1 283

நரி முகத்தில் முழித்தால் நல்ல சகுனம், செய்யப்போகும் காரியம் நல்லபடியாக முடியும் என்பது தமிழ்நாட்டிலுள்ள பல மூடநம்பிக்கைகளில் ஒன்று. அது எப்படி நரி முகத்தில் முழிக்க முடியும்? இந்த வாக்கியம் எப்படி உருவாகியிருக்கமுடியும்? அது சாத்தியம் தானா என பலரிடம் கேட்டும் இதுவரை எனக்கு விடை கிடைக்கவில்லை. சமீபத்தில் நான் நரி ஊளையிடுவதைக் கேட்டது இந்த ஆண்டு (2012) ஜனவரி மாதம் பாண்டிச்சேரி பல்கலைக்கழக ஹாஸ்டலில் சில நாட்கள் தங்கியிருந்த போது தான். தானே புயல்க்கி யிருந்த சமயமது. மின்னினைப்பு இல்லாத இரவில் நான் தங்கியிருந்த அறையில் வெகு அருகாமையிலிருந்து சுமார் 5 நிமிடங்களுக்கு மேல் ஒரு நரி ஊளையிட்டுக்கொண்டிருந்தது. நீண்ட நாட்கள் கழித்து கேட்ட அதன் குரல் என் காதில் தேனைப்போல பாய்ந்தது. ஏனெனில் இப்போதெல்லாம் நரிகளைக் காண்பதே அரிதாகிவிட்டது. கிராமங்களில் வசிப்பவர்களைக் கேட்டுப்பாருங்கள். ஒரு காலத்தில் இந்தியாவின் பல இடங்களிலும் பரவி காணப்பட்ட நரி பல இடங்களிலிருந்து அற்றுப்போயும், எண்ணிக்கையில் குறைந்தும் வருவது சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் வாயிலாக அறியமுடிகிறது.

Golden Jackal. Photo: Kalyan Varma

நரி  தென்படும் நாய் இனத்தைச் சேர்ந்த விலங்குகள். இவற்றில் தமிழகத்தின் அடர்ந்த காடுகளில் செந்நாயும், புதர்க்காடுகளில் குள்ளநரியும் தென்படும். ஆனால் நரியோ வயல் வெளிகள் உள்ள கிராமங்கள், புதர்காடுகள், மலை மேலுள்ள புல்வெளிகள், அடர்ந்த காடுகள் என பல வகையான வாழிடங்களில் வசிக்கும். சில ஆண்டுகளுக்கு முன் கொல்கத்தா தாவரவியல் பூங்காவிற்குச் சென்றிருந்த போது அங்கு இரண்டு நரிகளை பகலிலேயே பார்த்து ஆச்சர்யமடைந்தேன். நகரத்தின் அருகாமையில் இருக்கும் அப்பூங்காவில் கொஞ்சம் அடர்த்தியாக மரங்கள் இருப்பதே அவை அங்கு வாழ ஏதுவாக இருக்கக்கூடும். நரி, பலதரப்பட்ட சூழலிலும் வாழ்வதற்குத் தகவமைத்துக் கொண்டதன் காரணம், குறிப்பிட்ட வகையான உணவை மட்டுமே உட்கொள்ளாமல் அனைத்துண்ணியாக இருப்பதே.

பருவ காலத்திற்குத் தகுந்தவாறு என்ன உணவு கிடைக்கிறதோ அவற்றை உட்கொண்டு வாழும். ஆயினும் அவற்றின் உணவில் பெரும்பகுதி எலிகள், முயல், பாம்பு, பல்லி, சிறு பறவைகள் போன்றவையும், இலந்தைப்பழங்கள், கலாக்காய், நாவற்பழம், சரக்கொன்றை பழங்கள் முதலியவற்றையும் சாப்பிடும். கிராமப்பகுதிகளின் அருகில் தென்படும் நரிகள் அங்குள்ள கோழிகளையும் அவ்வப்போது பிடித்துச்செல்லும். இதன் காரணமாகவே இவற்றை பிடித்து கொல்லப்படுவது உண்டு. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நிர்த்தனமங்களம் எனும் கிராமத்தில் இப்படிப் பிடிக்கப்பட்ட நரியினை பிடித்தவர்கள் சமைத்து சாப்பிட்டதற்கான குறிப்பு இயற்கையியல் இதழான Hornbill ல் (Jan-Mar 2011) ஒரு கட்டுரையில் உள்ளது. இப்படி உணவிற்காகவும், தோலுக்காகவும், வளர்ப்புப்பிராணிகளைக் கொன்று சாப்பிடுவதால் கண்ணி வைத்தும், விஷம் வைத்தும், வாகனங்களில் அடிபட்டும் நரிகள் பல இடங்களில் கொல்லப்படுகின்றது. இந்திய வனவிலங்குப் பாதுகாப்புச்சட்டம் 1972ன் படி நரியைக் கொல்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.

jackal roadkill near kurnool_700

ஏப்ரல் 2008லிருந்து மே 2009 வரையில் மேற்குத்தொடர்ச்சிமலையின் தென் பகுதியில் உள்ள 394 வனச்சரகத்திற்கும் (Forest Range) ஆராச்சியாளர்கள் சென்று அங்கு பணிபுரியும் வனத்துறை அதிகாரிகளிடமும், வனத்தின் உள்ளேயோ, அதன் அருகாமையிலோ பலகாலமாக வாழும் கிராமத்தாரிடமும், பதினெட்டு வகையான மிருகங்களின் நிலையைப்பற்றி விசாரித்தனர். வேங்கைப்புலி, கரடி, சிறுத்தை, செந்நாய், நரி, யானை, காட்டெருது, கடம்பை மான், வரையாடு, காட்டுப்பன்றி, புள்ளிமான், கேளையாடு, சருகு மான், நீலகிரி கருமந்தி, வெள்ளை மந்தி, சோலைமந்தி (சிங்கவால் குரங்கு), நாட்டுக்குரங்கு, மலையணில் ஆகியவற்றின் தற்போதைய நிலையையும், 30 வருடங்களுக்கு முன் இருந்த நிலையையும் கேட்டறிந்தனர். பலகாலமாக இப்பகுதிகளில் வாழ்ந்தும், பணிபுரிந்தும் வந்த இவர்கள் அனைவரும் சொன்னதைக் கேட்டறிந்து முடிவுகளை கூர்ந்து ஆராய்ந்த விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் பல உண்மைகள் தெரிய வந்தது.

Photo: Vijay Ramanathan

அழிவின் விளிம்பில் இருக்கும் வேங்கைப்புலி, யானை போன்ற விலங்குகள் பல இடங்களில் இருந்து மறைந்துபோனதும், இருக்குமிடங்களிலும் கூட இவ்விலங்குகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து போனது தெரியவந்தது. இதைவிட அதிர்ச்சியான உண்மை ஒருகாலத்தில் எங்கும் பரவியிருந்த நரி தற்போது பல இடங்களில் மாயமாய் மறைந்து போனது தான். இதைத்தொடர்ந்து நரிக்கென்றே பிரத்தியோகமான நாடு தழுவிய வலைத்தள கணக்கெடுப்பு ஒன்று 2011ல் ஜூலை ஆகஸ்டு மாதங்களில் நடத்தப்பட்டது. இதில் சுமார் 320 பேர் பங்கு கொண்டு இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் நரியைக் கண்டறிந்த 470 தகவல்கள் கிடைத்தது. பெரும்பாலான தகவல்கள் கர்நாடகா, உத்தரகாண்ட் மாநிலங்களிலிருந்துதான் கிடைத்தது. இந்த சர்வேயின் முலமாக நரியின் தற்போதைய நிலையையும், பரவலைலும், துல்லியமாக அறிய முடியாவிட்டாலும், முதனிலை முடிவுகள் நரிகள் இந்தியாவின் தென் மற்றும் கிழக்குப்பகுதிகளில் அருகி வருவதும், குஜராத், மத்தியப்பிரசேதத்தில் இதன் நிலை ஓரளவிற்கு நல்ல நிலையில் இருப்பதும் தெரிய வந்தது. வாழிட இழப்பே இவை குறைந்து போனதற்கான முக்கிய காரணமாக அறியப்பட்டது. அதாவது நகரமயமாதலும் ஒரு முக்கியக் காரணம்.

சரி, நரியைக் காப்பாற்றுவதால் என்ன பயன் என்கிறீர்களா? வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை முதலிய விலங்குகள் உணவுச் சங்கிலியின் மேல் நிலை இரைக்கொல்லிகளாக (Predators) அங்கம் வகிக்கின்றன. அவற்றிற்கு அடுத்தாற்போல் வருபவை நரி, குள்ள நரி போன்ற விலங்குகள். இவை பலதரப்பட்ட சிறிய விலங்குகளையும், பறவைகளையும் உணவாக்கி அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துகின்றன. பழங்களை உட்கொண்டு விதை பரவலுக்கும். வயற்புறங்களின் அருகாமையில் சுற்றித்திரியும் நரிகள் அங்குள்ள எலிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. நரி ஒரு அழகான விலங்கு. மனிதனின் தோழனான நாயை விரும்பும் நமக்கு நிச்சயமாக நரியையும் பிடித்தாக வேண்டும்.

Photo: Anshul Maheswari

  1. பெருகிவரும் மக்கட்தொகைக்கு இடையில் அருகி வரும் பல உயிரினங்களில் நரியும் ஒன்று. நாம் நரி முகத்தில் முழிப்பது நமக்கு வேண்டுமானால் நல்ல சகுனமாக இருக்கலாம், ஆனால் அது நிச்சயமாக அந்த நரிக்கு இல்லை. அடுத்த முறை நீங்கள் நரி ஊளையிடுவதைக் கேட்டால் புண்ணியம் செய்ததாக நினைத்துக் கொள்ளுங்கள். அப்படியே நீங்கள் கேட்ட அல்லது நரியைப் பார்த்த நாள், இடம் முதலிய தகவல்களை நரியைப்பற்றி ஆராயும் உயிரியலாளர்களுக்கு இமெயில் (<mailto:[email protected]>) செய்ய முடிந்தால் புண்ணியமாகப் போகும்.ஞ
You might also like
1 Comment
  1. Ramkumar says

    Super

Leave A Reply

Your email address will not be published.