யார் இந்த பிரேமானந்த்..? நிச்சயம் சமூக வலைதளத்தில் இவரை பார்த்திருப்பீர்கள்..!

0 237

சென்னை : அறிவியல் பாடத்தை செயல்முறையில் மாணவர்களுக்கு புரிய வைக்கிறார் ராமநாதபுரத்து இளைஞர் பிரேமானந்த் சேதுராமன். இவரது செயல்பாடுகள் வியக்க வைப்பதோடு மாணவர்களுக்கு ஆர்வத்தை அதிகரித்துள்ளது. எல்லோருமே மாற்றத்தை விரும்புகிறோம், ஆனால் அந்த மாற்றத்திற்காக நாம் என்ன செய்தோம் என்பதில் தான் தொடங்குகிறது அதற்கான மையப்புள்ளி. கல்வி முறையில் மாற்றம் வேண்டும், மாணவர்கள் புரிந்து படித்தல் வேண்டும் அதுவே எதிர்கால தலைமுறையை அறிவாளி சமூகமாக்கும் என்பதை அனைவரும் இன்றைய காலகட்டத்தில் உணரத் தொடங்கியுள்ளனர். என் பிள்ளை எத்தனை மதிப்பெண் எடுத்தான், என்பதை விட அவன் என்ன புரிந்து கொண்டான் என்று பெற்றோர் கேட்கத் தொடங்கிவிட்டாலே இளைய சமுதாயம் நற்சிந்தனை பெரும். அந்த வகையில் தான் பயின்ற பொறியியல் படிப்பை வைத்து தமிழ் வழியில் பள்ளி மாணவர்களுக்கு செயல்முறை வழியில் புரிய வைக்க முயன்று வருகிறார் இளைஞர் பிரேமானந்த் சேதுராஜன்.

என்னுடைய சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் திணைக்குளம், அப்பா சிறிய அளவில் கூல்டிரிங்ஸ் வியாபாரம் செய்கிறார், அம்மா இல்லத்தரசி. எங்கள் குடும்பத்தில் நான் முதல் பிள்ளை. பள்ளிப் படிப்பு முழுவதும் அருகில் உள்ள கிராமத்தில் 10 மைல் தூரல் நடந்தே சென்று தான் படித்து வந்தேன். எனினும் படிப்பில் ஆர்வம் இருந்ததால் பனிரெண்டாம் வகுப்பு முடித்து எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங் படித்தேன்.

வழக்கமாக கிராமப்புறங்களில் இருக்கும் மாணவர்களுக்கு இருக்கும் அதே ஆங்கில மொழிப் பிரச்னை எனக்கும் இருந்தது. எனினும் 4 ஆண்டுகள் படித்து முடித்தேன். ஆனால் நான் படித்து முடித்த போது பொறியியல் பற்றி முழுவதும் தெரிந்து கொண்டேனா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அதனைத் தொடர்ந்து சென்னையில் ஒரு ஐடி நிறுவனத்தில் 2 ஆண்டுகள் பணியாற்றினேன். ஆனால் நான் பார்த்த அந்த வேலையை 12ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் கூட செய்யலாம். அப்படியே நாட்கள் செல்ல அமெரிக்காவில் ஏரோஸ்பேஸ் தொடர்பாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. நான் புத்தகத்தில் மனப்பாடம் செய்து படித்தவை தான் அந்தப் பணிக்கு தேவைப்படுகிறது, ஆனால் அவற்றை செயல்படுத்தும் எல்லாம் அங்கே செயல்முறையில் விதம் தெரியாமல் திணறினேன்.

அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் அறிவியலுக்கான தேடலைத் தொடங்கினேன். அறிவியலை எப்படி செயல்முறை ரீதியாக படிக்க வேண்டும் என்பது குறித்த எண்ணம் எனக்கு கிடைத்தது. இரண்டு, மூன்று ஆண்டுகள் இப்படியே செல்ல எனக்கு தெரிந்த விஷயத்தை எல்லோருக்கும் தெரியப்படுத்தலாம் என்று முதலில் ‘lets make engineering simple’ என்று யூ டியூப் சேனலைத் தொடங்கி அதில் தமிழ் வழியில் அறிவியல் குறித்த வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் பணியை பகுதிநேரமாக செய்து வந்தேன்.

எனக்கு எப்போதுமே மற்றவர்களை பயிற்றுவிப்பது மிகவும் பிடிக்கும், அதனால் இதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லலாம் என திட்டமிட்டு இந்தியாவிற்கே வந்து முழுநேரமாக இந்தப் பணியை செய்யத் தொடங்கினேன். கிட்டதட்ட ஓராண்டு ஆகிறது இன்று சென்னையில் சில தனியார் பள்ளிகளுக்கு கட்டண முறையில் ‘பிக் பேங் கிட்’ என்ற ஒன்றை அறிமுகம் செய்து அவர்களின் பாடத்திட்டத்தை ஒட்டிய செயல்வழி பயிற்சிகளை அளித்து வருகிறோம்.

அறிவியலில் இருக்கும் நாட்டத்தை அதிகரிக்க முதற்கட்டமாக அறிவியல் அம்சங்களை வைத்து மாணவர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். ஆனால் அதை விளையாட்டாக மட்டுமே பார்த்தனர் மாணவர்கள், அதனால் அவர்களின் பாடம் சார்ந்த விஷயங்களை ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கு எளிமையான சாதனங்களைக் கொண்டு எப்படி புரிய வைப்பது என்பதை செய்து வருகிறோம்.

ஒரு வகையில் தனியார் பள்ளிகளிடம் பணம் பெற்று செய்தாலும் மற்றொரு வகையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக இதனை செய்து வருகிறோம். தற்போது சென்னையில் 4 அரசுப் பள்ளிகள், ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 பள்ளிகள், சிவகங்கை மாவட்டத்தில் 2 பள்ளிகள் சேலத்தில் 2 பள்ளிகள் என்று எங்களது சேவையை வழங்கி வருகிறோம்

அமெரிக்காவில் கை நிறைய சம்பாதித்த வாழ்க்கையை விட்டு விட்டு சென்னையில் வந்து முதல் முறையாக முயற்சிக்கும் இந்த அனுபவத்திற்கு தொடக்கத்தில் குடும்பத்தார் பெரிய அளவில் ஆதரவளிக்கவில்லை. ஆனால் தற்போது அந்த அளவிற்கு வருமானம் ஈட்டாவிட்டாலும் சமூகத்தில் நல்ல விஷயம் செய்து வருகிறேன் என்பதால் என்னுடைய பெற்றோர் மகிழ்ச்சியாக உள்ளனர்.

நிச்சயமாக நான் என்னுடைய இலக்கை அடைவேன். அடுத்த சமுதாயத்திற்கு அறிவியல் குறித்து இருக்கும் அச்சம் இல்லாமல் போகும், விரைவில் சிபிஎஸ்இ பாடத்திட்டங்களுக்கு ஏற்பவும் இந்த பிக் பேங்க் கிட் தயாராகி வருகிறது. அதே போன்று கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மாணவர்களின் அறிவியல் புரிதல் நிலையை மாற்ற உறுதுணையாக இருப்பேன் என்று கூறுகிறார் இந்த முதல் தலைமுறை பட்டதாரி பிரேமானந்த் சேதுராமன்.

நண்பன் படத்தில் நடித்த விஜய்யின் பசப்புகழ் கதாபாத்திரத்தில் இயக்குநர் ஷங்கர், அறிவியல் பாடத்தை அனுபவப் பூர்வமாக செயல்முறையில் புரிந்து கொள்ள வேண்டும் என்பது போன்று வடிவமைத்திருப்பார். இறுதியில் விஜய் தனது அறிவியல் மையத்தை அமைத்த இடமாக காட்டப்படுவதும் ராமநாதபுரத்தைத் தான்.

ஆனால் அதே ராமநாதபுரத்து மன்னில் இருந்து பிறந்து வளர்ந்து அயல்நாடுகளில் சென்று பணியாற்றிவிட்டு நாடு திரும்பிய பிரேமானந்த் நிஜ வாழ்வில் அவற்றை செயல்படுத்தி வருகிறார் என்பது பாராட்டிற்குரிய விஷயமே.

கனவு காணுங்கள் என்று மாணவாகள் மனதில் விதைத்துவிட்டு சென்ற ராமநாதபுர மூத்த குடிமகன் கலாமின் கனவை நிஜமாக்கும் பயணத்தில் இணைந்திருக்கும் பிரேமானந்தை பாராட்டுவதோடு அவருக்கு ஊக்கமளிப்பதிலும் பெருமை கொள்கிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.