கல்கியின் பொன்னியின் செல்வனை கடந்த எவரும் சோழதேசத்தின் மீது அளப்பரிய காதல் கொள்வர் .

0 470

கதைகள் யாருக்குத்தான் பிடிக்காது .அதுவும் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு அரசாண்ட சோழர்களின் கலைத்திறன் மிளிரும் கலைச்செல்வம் கொட்டிக்கிடக்கும் தமிழகத்தில் சோழர்களை பற்றிய வசீகரமும் ஈர்ப்பும் ஓவ்வொரு காலத்திலும் ஏதோ ஒரு வகையில் தூண்டப்பட்டு கொண்டே இருக்கிறது .கல்கியின் பொன்னியின் செல்வனை கடந்த எவரும் சோழதேசத்தின் மீது அளப்பரிய காதல் கொள்வர் .

தஞ்சை பெரிய கோவில் குறித்த நிழல் விழாத கோபுரம் , விமானத்தின் உச்சியில் எண்பது டன் எடைகொண்ட ஒரே கல் என அறிவுக்கு எட்டாத செவி வழியே ஊடறுத்து போகும் கதைகளுக்கு பஞ்சமேயில்லை .

அது போலவே செய்யாறு அருகே உள்ள இந்த பிரம்மதேசம் பகுதியும் நமக்குள் எண்ணற்ற கற்பனையையும் கதைகளையும் விதைக்கக்கூடியது.சந்திரமௌலீஸ்வரர் கோவில் அமைத்துள்ள இடமும் தோற்றமும் அப்படி .கதிரவனின் காலை நேர ஒளிவீச்சிலும் அந்தி மாலை நேர அரவணைப்பிலும் மனதை வசமிழக்க செய்யும் சந்திரமௌலீஸ்வரர் கோவிலின் தோற்றம் நமக்குள் என்னென்னவோ உணர்வுகளை உருவாக்கும் .அதில் ஒன்று இது இராஜேந்திர சோழரின் பள்ளிப்படை என்பது இராஜேந்திரர் அவருடைய இறுதிக்காலத்தை இப்பகுதியில் கழித்திருக்கலாம் ?

ஆனால் சந்திரமௌலீஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் நம்மால் கொஞ்சம் நிதானித்தால் படித்து அறியக்கூடிய வகையில் சில கல்வெட்டுக்கள் உள்ளன அவற்றில் ஒன்று மதிரைகொண்ட கோப்பரகேசரி என துவங்கும் ஆயிரத்து நூறு வருடங்களுக்கு முன்பான பராந்தகரின் கல்வெட்டு .பராந்தகரின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி .அதன் பின் இராஜராஜரின் கல்வெட்டு .

பள்ளிப்படை என்பது இறப்புக்கு பின்பாக எரியூட்டப்பட்ட இடத்திலோ ,புதைத்த இடத்தின் மேலாகவோ இலிங்கம் வைத்து முன்னோர்கள் வழிபாடாக கொள்வது .இராஜேந்திரர் இறந்த பின் தான் அவருக்கு பள்ளிப்படை எழுப்பியிருக்க கூடும் .அவ்வாறெனில் அவருடைய பள்ளிப்படையில் எவ்வாறு பராந்தகரின் கல்வெட்டும் இராஜராஜரின் கல்வெட்டும் இடம் பெற முடியும் .

வரலாறு மிகப்பெரும் இரகசியங்களை ,நமது நவீன வாழ்வால் எண்ணிப்பார்க்க இயலாத சாதனைகளை ,அதிசயங்களை வைத்திருக்கிறது.ஆர்வம் உள்ளோர் தேடிக்கண்டடைந்து கொண்டாடுவதற்கு எவர் உதவியும் இன்றி தனது பக்கங்களை புரட்டி படித்துக்கொள்ள வாய்ப்பளித்து காத்திருக்கிறது .நமது புனை கதைகளால் அவற்றை நிரப்ப வேண்டிய அவசியமேயில்லை .

பதிவு: பரந்தாங்கன் தமிழ் செல்வம்

பிரம்மதேசம் -செய்யாறு

You might also like

Leave A Reply

Your email address will not be published.