பெரும்பாலானோர் பயன்படுத்த மறந்த பழங்களில் இதுவும் ஒன்று..! இனி இதனை சாப்பிடுங்கள்..!

0 565

இலந்தை பழம் தெரிந்ததும்! தெரியாததும்?

இலந்தை பழங்காலம் முதல் நாம் பயன்படுத்தி இன்றைக்கு பெரும்பாலோர் பயன்படுத்த மறந்த பழங்களில் ஒன்று.

அதிக அளவு ஊட்டச்சத்துகளைக் கொண்டு குறைவான விலையில் எல்லோரும் வாங்கக்கூடிய பழமாதலால் இலந்தை, ஏழைகளின் பழம் என்றழைக்கப்படுகிறது.

இனிப்புக் கலந்த புளிப்புச் சுவையுடன் உள்ள இப்பழத்தினை நினைத்தாலே நாவில் நீரினை வரவழைக்கும்.

இப்பழமானது 5-6 மீட்டர் உயரம்வரை படர்ந்து வளரக்கூடிய சிறிய மரவகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இப்பழத்தின் மரமானது அதிகக் கிளைகளுடன் கூரிய முட்களைக் கொண்டுள்ளது.

இத்தாவரம் வெப்பப்பகுதியில் நன்கு செழித்து வளரும். இது வறட்சியையும், வளமில்லா நிலத்திலும் தாக்குப் பிடித்து வளரும் இயல்புடையது.

கோடை காலத்தின் முற்பகுதியில் வெளிரிய பச்சை அல்லது வெள்ளை நிறத்தில் பூக்களைப் பூக்கிறது. இலந்தை காயாக இருக்கும்போது பச்சை நிறத்திலும், பழுக்கும்போது மஞ்சள் கலந்த சிவப்பாகவும், ஆழ்ந்த சிவப்பாகவும் பின் பழுப்பு நிறத்திலும் மாறும்.

இப்பழத்தின் உள்ளே வெள்ளை நிறத்தில் கீரீம் போன்ற சதைப்பகுதியினைக் கொண்டுள்ளது. பழத்தினுள் கடினமான கொட்டைப்பகுதி உள்ளது. இப்பழம் ட்ரூப் பழவகையைச் சார்ந்தது.

இப்பழத்தின் தாயகம் சீனா ஆகும். இது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பே பயிர் செய்யப்பட்டுள்ளது. இப்பழம் அப்படியாவோ, உலர்பழமாகவோ பயன்படுத்தப்படுகிறது. இப்பழமரத்தின் இலைகள், பட்டைகள், வேர்கள், விதைகள் ஆகியவை பண்டைய நாட்களிலிருந்து மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன‌.

இலந்தையில் உள்ள சத்துக்கள்

இப்பழத்தில் வைட்டமின்கள் ஏ,சி, பி2(ரிபோஃப்னோவின்), பி3(நியாசின்), பி6(பைரிடாக்ஸின்), கால்சியம், பொட்டாசியம், இரும்பு, மாங்கனீஸ், பாஸ்பரஸ், காப்பர் போன்ற தாதுஉப்புக்களும், கார்போஹைட்ரேட்டுகள், புரோட்டின், பிளவனாய்டுகள், ஆன்டிஆக்ஸிஜென்டுகள் மற்றும் சிறிதளவு எரிசக்தி ஆகியவற்றைப் பெற்றுள்ளன.

இலந்தையின் மருத்துவப் பயன்கள்

தூக்கமின்மைக்கு

தூக்கமின்மை மற்றும் அமைதியின்மையினால் அவதிப்படுபவர்களுக்கு இலந்தைப்பழம் ஓர் வரப்பிரசாதமாகும். இப்பழத்தில் உள்ள கரிமப் பொருட்கள் உண்பவர்களுக்கு உடல் மற்றும் மன அமைதியை தருகின்றன.

இரவில் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இலந்தைப்பழத் தேநீர் அருந்தி நிவாரணம் பெறலாம்.

இரத்தச் சுத்திகரிப்பு

இலந்தையில் காணப்படும் சபோனின் மற்றும் ஆல்காய்டுகள் இரத்தத்தில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி இரத்தத்தைச் சுத்திகரிப்பு செய்கின்றன.

இப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்ட்கள் உடலில் உள்ள கோளாறுகள் மற்றும் நோய்களை நீக்குவதோடு நிணநீர் மண்டலத்தின் மீதான அழுத்தத்தைக் குறைக்கின்றன.

அனீமியாவை நீக்க மற்றும் சீரான இரத்த ஓட்டத்திற்கு

இலந்தையில் பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இவைகள் உடலில் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கி ரத்த ஓட்டத்தைச் சீராக்குகின்றன. இப்பழம் சிவப்பு ரத்த அணுக்களின் குறைவால் ஏற்படும் அனீமியா நோய் வரால் நம்மைப் பாதுகாக்கின்றது.

மேலும் இப்பழத்தினை உண்டு ரத்த ஓட்டத்தினைச் சீராக்கி தசைபலவீனம், சோர்வு, மனத்தெளிவின்மை ஆகியவற்றிலிருந்து விடுபடலாம்.

எலும்புகளின் பாதுகாப்பிற்கு

இலந்தையில் எலும்புகளைப் பலப்படுத்த தேவையான தாதுஉப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை உள்ளன. எனவே இப்பழத்தினை உண்டு வயதான காலத்தில் ஏற்படும் எலும்பு தேய்மானம், ஆஸ்டியோபோரோஸிஸ் போன்ற நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள இலந்தைப்பழத்தினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

செரிமானத்திற்கு

இப்பழம் உணவினை செரிக்க வைத்து சத்துக்களை உறியச் செய்வதற்கு உதவி புரிகிறது. இப்பழத்தில் காணப்படும் சபோனின் மற்றும் டிரைடெர்பெனாய்ட்டுகள் உணவிலிருந்து சத்துகளை உடல் உட்கிரகிக்கும் தன்மையை அதிகரிப்பதோடு குடலினை சீராக இயங்கச் செய்கிறது. இதனால் மலச்சிக்கல், தசைப்பிடிப்பு, அதிகப்படியான வாயு, பெருங்குடல் புற்று நோய் ஆகியவை ஏற்படாமல் பாதுகாக்கிறது.

உடல் எடையைக் குறைக்க

இப்பழமானது குறைந்த அளவு கலோரியையும், அதிகப் புரோட்டீன் மற்றும் ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. எனவே உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் இப்பழத்தினை உண்டு குறைவான எரிசக்தியையும் அதே நேரத்தில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் பெறலாம்.

உடல் எடையைக் குறைக்க இப்பழத்தினை இடைவேளை உணவாகக்கூட உட்கொள்ளலாம்.

நோய் எதிர்ப்பாற்றலைப் பெற

இப்பழத்தில் ஆன்டிஆக்ஸிஜென்ட்டுகளான விட்டமின் ஏ, சி போன்றவை அதிகமாக உள்ளன. விட்டமின் சி உடலின் நோய் ஏற்படுவதை தடுக்கக்கூடிய இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

நம் அன்றாட விட்டமின் சி தேவையின் 100 சதவீதத்தினை இப்பழம் பெற்றுள்ளது. எனவே இப்பழத்தினை உண்டு நோய் எதிர்ப்பாற்றலைப் பெறலாம்.

மனஅழுத்தம் மற்றும் பதட்டத்தைச் சரி செய்ய

இப்பழத்தில் இருந்து தயார் செய்யப்பட்ட எண்ணெய் அல்லது இப்பழத்தினை அப்படியே உட்கொள்ளும்போது மன அழுத்தத்தினால் ஏற்படும் ஹார்மோன் வேறுபாட்டினைச் சரிசெய்து மனம் மற்றும் உடலினை அழுத்தத்திலிருந்து அமைதி அடையச் செய்கிறது.

நாள்பட்ட மனஅழுத்தம் அல்லது கவலைகளால் அவதியுறுபவர்கள் இடைவேளை உணவாக அவ்வப்போது எடுத்துக் கொண்டால் மனஅழுத்தத்தினால் ஏற்படும் பக்க விளைவுகளிலிருந்து பாதுகாப்படையலாம்.

சருமப்பாதுகாப்பு

இப்பழத்தினை அப்படியேவோ அல்லது சாறு எடுத்துப் பருகினால் நமச்சல், அரிப்பு ஆகியவற்றால் தோலில் ஏற்படும் நோய்களைச் சரிசெய்கிறது. தோலில் உண்டாகும் படை, முகப்பரு, தடிப்பு, சுருக்கங்கள் மற்றும் வடுக்கள் ஆகியவற்றை இப்பழத்தினை உண்டு சரிசெய்யலாம்.

இலந்தையினை வாங்கும் முறை

இலந்தையினை வாங்கும்போது புதிதாகவும், காயங்கள் இல்லாமலும், கனமாகவும் இருக்க வேண்டும். இப்பழத்தினை அறையின் வெப்பநிலையில் 3-4 நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

உலர்ந்த பழத்தினை குளிர் பதனப் பெட்டியில் வைத்து எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

இலந்தை பற்றிய எச்சரிக்கை

இப்பழத்தினை அளவுக்கதிகமாக பயன்படுத்தும் போது உடலில் உள்ள சர்க்கரையின் அளவினை வேறுபாடு அடையச் செய்யும். எனவே அளவோடு பயன்படுத்த வேண்டும். மேலும் கர்பிணிகள் இப்பழத்தினை மருத்துவர்களின் அறிவுரையின் படி உட்கொள்ள வேண்டும்.

இப்பழம் கேக்குகள், ஜாம்கள், சாக்லேட்டுகள், இனிப்புகள், பிரட்டுகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

கொரியன் கலாச்சாரத்தில் இப்பழத்திலிருந்து தயார் செய்யப்படும் தேநீரானது விழாக்களில் வரவேற்பு பானமாக அளிக்கப்படுகிறது.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இலந்தையினை அளவோடு சாப்பிடவேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.