நாடு கடத்தப்படும் தேவாங்குகள்..! இதன் பின்னனி ரகசியம் என்ன..?

0 432

தேவாங்கின் ஒவ்வொரு உடலுறுப்பும் பல லட்சங்களுக்கு விலை போவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்திய இலங்கை காடுகளில் இருந்து கடத்தப்படுகிற தேவாங்குகளை மயக்க ஊசிகள் மூலம் 20 மணி நேரத்துக்கு மேலாக மயக்க நிலைக்கு கொண்டுபோகிறார்கள். மயக்க நிலையில் இருக்கிற தேவாங்கு குட்டிகளை பேண்ட் பாக்கெட்டுகளிலும் சூட்கேஸ்களிலும் மணிபர்ஸிலும் வைத்து கடத்தி விடுகிறார்கள். வெளிநாடுகளில் மருத்துவத் துறையில் உடல்கூறு ஆராய்ச்சிக்காகவும், ஊக்க மருந்து தயாரிப்புக்காகவும் தேவாங்குகள் கடத்தப்படுகின்றன. தேவாங்கு தோலில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மூலம் தொழுநோய் தீரும் என்பது போன்ற மூட நம்பிக்கைகளுக்காக வேட்டையாடப்படுகின்றன.

தேவாங்கு. இரவில் மட்டுமே இறை தேடும் உயிரினத்தை கடத்தலுக்கு எளிதாக இருக்க வேண்டும் என்பதால் முதலில் அதன் பற்களை பிடுங்கி விடுகிறார்கள். பற்கள் பிடுங்கப்பட்ட தேவாங்குகளைப் பல ஆயிரம் டாலர்களில் விற்று விடுகிறார்கள். பல நாடுகளிலும் பற்கள் பிடுங்கப்பட்ட தேவாங்குகள் செல்லப் பிராணிகளாக வீடுகளில் வளர்க்கப்படுகின்றன என்பதுதான் இப்போதைய மார்க்கெட் நிலவரம். இங்கிருந்த ஓர் உயிரினம் இந்தோனேசியா தாய்லாந்து அமெரிக்கா ரஷ்யா என பல நாடுகளுக்கும் கடத்துகிறார்கள் என்றால் எவ்வளவு பெரிய சந்தையை தேவாங்கு என்கிற உயிரினத்துக்கு நிர்ணயித்திருக்கிறார்கள் என யோசித்துப் பாருங்கள்.

தமிழ்நாட்டில் தேவாங்கின் நிலை வேறுமாதிரியாக இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு வேலூர் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகில் ஒருவர் தேவாங்கை வைத்து கயிறு விற்பனை செய்துகொண்டிருந்தார். தேவாங்கு உடலில் கட்டிய கயிறை குழந்தைகளுக்கு கட்டினால் குழந்தைகள் எந்த நோயும் இன்றி வளர்வார்கள் என்கிற நம்பிக்கையை மக்களிடம் விதைத்து தொழில் செய்து கொண்டிருந்தார். தேவாங்கின் உடலில் கட்டியிருந்த ஒவ்வொரு கயிறாக எடுத்து 250, 300 ருபாய் என விற்றுக்கொண்டிருந்தார். விழித்தெழுந்த சமூக ஆர்வலர்கள் வனத்துறைக்குத் தகவல் கொடுக்க, தேவாங்கோடு சேர்த்து அவரையும் அள்ளிக்கொண்டு போயிருக்கிறது வனத்துறை.

படித்தவர்கள் படிக்காதவர்கள் என பாரபட்சமில்லாமல் உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் மூட நம்பிக்கை நம்பப்படுவதால் இங்கே கடத்தல்கள் பலவிதங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. நமக்கு தெரிந்து இன்று தேவாங்கு. தெரியாமல் இன்னும் எதையெல்லாம் கடத்திக் கொண்டிருக்கிறார்களோ!

You might also like

Leave A Reply

Your email address will not be published.