சோமாலியாவில் பசி பஞ்சம், பட்டினி, இதெல்லாம் தெரியும்..! ஆனா என்ன காரணம் தெரியுமா..?

0 551

”நாளொன்றுக்கு ஒவ்வொரு பத்தாயிரம் பேருக்கும் இருவர் உயிரிழப்பு. முப்பது சதவிகிதத்துக்கும் அதிகமான ஊட்டச்சத்துக் குறைபாடு. அனைத்து கால்நடைகளும் உயிரிழத்தல். தனியொரு மனிதனுக்கு நாளொன்றுக்கு 4 லிட்டருக்கும் குறைவான நீர் மட்டுமே கிடைப்பது. 2,100 கிலோ கலோரிக்கும் குறைவான உணவு மட்டுமே ஒருவருக்கு உண்ணக் கிடைப்பது” இவைதான், ஒரு நாட்டில் பஞ்சம் நிலவுவதற்கான வரையறை என்று ஐக்கியநாடுகள் சபையால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐ.நா வரையறைக்கும் அதிகமாகவே சோமாலியாவில் பஞ்சம் வாட்டி வதைக்கிறது.

சோமாலியாவில் 2011-ல் 2,60,000 பேர் வரை கொடூரப் பஞ்சத்துக்குப் பலியாயினர். இப்போது வெர்ஷன் 2-வாக அங்கே பஞ்சம் மீண்டும் மக்களைப் பலிவாங்கிக்கொண்டிருக்கிறது. இரண்டு நாட்களில் இருநூறு பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்றால் பஞ்சத்தின் கொடூரம் எவ்வளவு அதிகமாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். சோமாலியாவில் பல ஆண்டுக்காலமாக நிலவி வரும் உள்நாட்டுப் போரும், இஸ்லாமிய நாடுகளில் இருந்து வரும் மக்கள் அமெரிக்காவுக்குள் நுழையக் கூடாது என்று அதிபர் ட்ரம்ப் தலைமையிலான புதிய அரசு அறிவித்ததும், தற்போது பஞ்சத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு காரணமாகக் கூறப்படுகிறது.

பஞ்சத்தின் கொடூரத்தால் மனிதர்களுக்குள் இருக்கும் மனிதநேயமும் செத்துக்கொண்டிருக்கிறது. உணவுகளைப் பகிர்ந்து உண்ணும் நிலையே சோமாலியாவில் அற்றுப் போய்விட்டது. சிறு கவளம் உணவை, யாருக்குப் பசிக்கிறதோ அவர்கள் மட்டுமே சாப்பிட முடியும் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதனால் பெரும்பாலும் குழந்தைகளுக்கு மட்டுமே உணவு கிடைக்கிறது. அதுவும் நான்கைந்து பிள்ளைகள் இருக்கும் குடும்பத்தில் கடைக்குட்டிகளுக்கு மட்டுமாவது உணவைக் கொடுத்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுவிட்டனர்.

காரணமும் தீர்வும்

அறுபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த இரண்டு வருடங்களாக சோமாலியா தொடர் வறட்சியில் தத்தளித்து வருகிறது. இதனால் உணவு உற்பத்திக் குறைபாடு ஏற்பட்டு இருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் இந்தப் பிரச்னையிலிருந்து 50 சதவிகிதம் வரை நிலங்கள் மீட்டெடுக்கப்பட்டுவிடும் என்று அரசு தரப்பில் நம்பிக்கை தரப்பட்டிருக்கிறது. தற்போதைய நிலையில், அங்கு சாதாரண சூழல் என்பதே அசாதாரண சூழலைத்தான் குறிப்பிடுகிறார்கள் என்னும் அளவுக்கு மக்களுக்கு நிலை பழகிப் போய் உள்ளது. பஞ்சத்தால் கால்நடைகளும் 90 சதவிகிதம் வரை இறந்துள்ளன. கால்நடை மூலமான வர்த்தகம், உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுப் பூசல் தொடர்ந்து நீடித்து வருவதன் காரணமாக அங்கே இழப்பும், இறப்பும் தேவையும் எவ்வளவு என்று கணக்கிட முடியாத நிலை. இதனால் சர்வதேச அளவிலான உதவிகளும் காலதாமதமாகின்றன. தற்போதைய கணக்கீட்டின்படி 1 பில்லியன் அமெரிக்க டாலர் வரை சோமாலியாவுக்கு நிதி உதவி தேவைப்படுகிறது. ஆனால் 200 மில்லியன் டாலர் வரை மட்டுமே நிதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில் பசிக்குப் பலியாகும் மக்களை எப்படிக் காப்பாற்ற முடியும்?

உலகின் பல்வேறு நாடுகளிலும் உணவு உற்பத்தி என்பது சுகாதார அடிப்படையில் பாதிப்படைந்துள்ள நிலையில் ஆப்ரிக்க தேசங்களில் அந்த மண்ணின் வளம் உணவு உற்பத்தியை சுகாதார அளவில் பாதிக்காத நிலையில் உள்ளது. உலக நாடுகள் தங்களது உணவு உற்பத்தித் திட்டங்களை ஆப்ரிக்க நாடுகளில் செயல்படுத்த முன்வரவேண்டும். வர்த்தகத்துக்கான போக்குவரத்துத் தொடர்புகளை மேம்படுத்துதல், சாலைப் பராமரிப்பு உள்ளிட்டவற்றில் அந்நிய நாடுகளின் முதலீடு தேவைப்படுகிறது. தவிர, ஒவ்வொரு குடும்பத்துக்கும் முழு ஆண்டுக்குமான உணவுத் தேவைக்கான தீர்வை அளிக்கலாம். அதன்வழியாக, அவர்கள் தங்களது இதர பிரச்னைகளை சரிசெய்துகொள்ள வழி செய்யமுடியும்.

இது போன்ற உடனடித் தேவைகள் ஒரு பக்கம் இருந்தாலும்.இதே பஞ்சம் மீண்டும் ஏற்படாத வகையில், ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்கள் என்கிற வகையில் மற்ற நாடுகளும் சோமாலியாவுக்கான செயல் திட்டங்களில் பங்களிக்க வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.