இந்நிலை தொடர்ந்தால் ஏழை எளிய நோயாளிகளின் உயிர்கள் பறிபோகும்” என்கிறார்கள் அரசு மருத்துவர்கள் பரிதாபமாக.

0 180

“ஆளுநர் மாளிகை டாக்டர் தனியார் மருத்துவமனையில்… நாங்கள் ஏன் போகவேண்டும்?” -அரசு டாக்டர்கள் போர்க்கொடி!

“ஆளுநரின் கூடுதல் செயலாளர் வீட்டிற்கே சென்று அரசு டாக்டர்கள் சிகிச்சை அளிக்கவேண்டும்” என்ற உத்தரவு பலத்த சர்ச்சைககளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சூழலில், “ஆளுநர் மாளிகையிலுள்ள டிஸ்பெஞ்சரியில் சிகிச்சையளிக்க அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட டாக்டரே தனியார் மருத்துவமனையில் வேலைபார்த்து இரட்டை சம்பளம் வாங்கிக்கொண்டிருக்க… அரசு மருத்துவமனையில் ஏழை எளிய நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதை விட்டுவிட்டு நாங்கள் ஏன் ஆளுநரின் செயலாளர் வீட்டுக்கு ட்யூட்டிக்கு செல்லவேண்டும்?” என்று போர்க்கொடி தூக்கி போராடிக்கொண்டிருக்கிறார்கள் சென்னை இராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள்.

இதுகுறித்து, விசாரிக்க ஆரம்பித்தபோது, “எம்.எல்.ஏ.க்கள் விடுதி, ஆளுநர் மாளிகை போன்ற இடங்களில் அவசர சிகிச்சைகளுக்காக மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கு, ‘ஹைபர்நேஷன்’ போஸ்டிங் என்று மருத்துவர்கள் வட்டாரத்தில் கிண்டலான பெயர் உண்டு. காரணம், அரசு மருத்துவமனைகள்போல எந்நேரமும் ட்யூட்டி இருக்காது. போனால் கையெழுத்து போட்டுவிட்டு வந்துவிடலாம். அவசரமான சூழ்நிலைகளில் முதலுதவி சிகிச்சை அளித்தால் போதும். அதனால், இதுபோன்ற போஸ்டிங்குகளுக்கு போட்டா போட்டி அதிகம். ஹை இன்ஃப்ளுயன்ஸ் இருந்தால் மட்டுமே இதுபோன்ற போஸ்டிங்குகளை வாங்கமுடியும்.

ராஜ்பவன் எனப்படும் ஆளுநர் மாளிகையிலும் ஒரு டிஸ்பெஞ்சரி உள்ளது. தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவர் டக்டர் செந்திலின் அதிகாரத்தை பயன்படுத்தி ஆளுநர் மாளிகையின் டாக்டர் போஸ்டிங்கை வாங்கிவிட்டார் அவரது நண்பர் டாக்டர் சிவராமக்கண்ணன். காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணிவரை ராஜ்பவனிலுள்ள ஊழியர்கள் மற்றும் பணியாளர்களின் குடும்பங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அந்த டிஸ்பெஞ்சரியில் வைத்து சிகிச்சை அளிக்கவேண்டும். இதுதான் அவரது பணி.

ஆனால், சென்னை இராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியில் இருக்கும்போதே தனியார் மருத்துவமனைக்கு ஓடிவிடுவார் டாக்டர் சிவராமக்கண்ணன். இப்படி, எம்.எம்.சியில் நேரப்பிரச்சனை ஏற்பட்டதால்தான் ஆளுநர் மாளிகை போஸ்டிங்கையே வாங்கிவந்திருக்கிறார் டாக்டர் சிவராமக்கண்ணன். இவருக்கு, சம்பளமே 1 லட்சத்து 30,000 ரூபாய்க்குமேல். ஆனால், இப்போதும் பெரும்பாலான நேரங்களில் தனியார் மருத்துவனைக்கு சென்றுவிடுவார்.

ஆளுநர் மாளிகைக்கு என அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட டாக்டரின் உதவியை தனது தாயாரின் உடல்நிலைக்கு ஆளுநரின் கூடுதல் செயலாளர் ராஜகோபால் ஐ.ஏ.எஸ். பயன்படுத்தியிருக்கலாம். அவரையும்கூட, வீட்டிற்கு அழைத்துச்செல்லக்கூடாது.

அப்படியிருக்க, அரசு மருத்துவமனையில் ஏழை எளிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கும் எங்களை அந்த வேலையை விட்டுவிட்டு ராஜகோபால் ஐ.ஏ.எஸ்.ஸின் அடிமைபோல அவரது வீட்டுக்குச்சென்று சிகிச்சை அளிக்கவேண்டும் என்பது மிகவும் அபத்தமானது. இப்படியேபோனால், ஒவ்வொரு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அரசியல்வாதிகள், அவர்களது உறவினர்களின் வீடுகளுக்கு சிகிச்சை அளிக்க அனுப்பிவிடுவார்கள். ஏற்கனவே, டாக்டர்கள் பற்றாக்குறையால் பரிதவித்துக்கொண்டிருக்கும் ஏழை எளிய நோயாளிகளின் உயிர்கள் பறிபோகும்” என்கிறார்கள் அரசு மருத்துவர்கள் பரிதாபமாக.

இதுகுறித்து, ஆளுநர் மாளிகை டிஸ்பெஞ்சரி டாக்டர் சிவராமக்கண்ணனை தொடர்புகொண்டு கேட்டபோது, “இதுபற்றி எதுவும் பேச முடியாது” என்று மறுத்துவிட்டார்.

ஒரு பக்கம் தங்களது அதிகாரத்தை பயன்படுத்திக்கொண்டு சொகுசான இடங்களில் பணியாற்றி பலனடைந்துகொண்டிருக்கிறார்கள் சில டாக்டர்கள். இன்னொரு பக்கம் பணிச்சுமையோடு அடிமைகளாக்கப்படுகிறார்கள் பல டாக்டர்கள். இனியும் இப்படிப்பட்ட அவலங்கள் தொடராமல் இருக்க சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். இல்லையென்றால் பாதிக்கப்படுவது ஏழை, எளிய நோயாளிகளே.

பதிவு: மனோ சுந்தர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.