பட்டி பொங்கல் பற்றி அறிவோம்…. பாரம்பரியம் காப்போம்!!!

0 786

நமது பாரம்பரிய மாட்டுப் பொங்கள் அன்று கொண்டாடப்படும் பட்டி பொங்கல் பற்றி அறிவோம்…. பாரம்பரியம் காப்போம்!!!

காலையில பட்டிக்கு காப்பு கட்டி, ஏர் கலப்பைக்கு காப்புக்கட்டி, கட்டைவண்டி, சவாரி வண்டி கழுவி காப்புக்கட்டி, பட்டியில் கல் அடுப்பு கூட்டி …..
ஆடு, மாடு, நாய் ,கோழி முதற்கொண்டு எல்லாம் கழுவி … மாடு, காளை, ஆட்டுகிடா கொம்புகளுக்கு எண்ணெய் -மஞ்சள் பூசி -பெயிண்ட் அடுச்சு. வயிறு நிறைய பசும் தீவனம் கொடுத்து……
சாயங்காலம் … வீட்டில்,… பட்டியில் பொங்க வைக்க தேவையான அனைத்தையும் “மக்கிரிகளில்”(பெரிய மூங்கில் கூடைகள்) எடுத்து கட்டை வண்டியில் வைத்து ஊருக்குள்ள தலைவாசல் வழியாக காடு போகும் ….
பட்டியில் 7 பொங்கல் வரிசையாக வைத்து.. தெப்பக்குளம் தோண்டி மாட்டு சாணம் இட்டு நீர் நிரப்பி, கரும்பு ,மா, வாழை ,மஞ்சள் கொத்து , பூக்கள் கொண்டு தெப்பக்குளம் அழங்கரித்து..

தெப்பக்குளம் சுற்றிலும் “வெங்கச்சான் கல்” சாமிகள் வைத்து “காது ஓலை”. “கருகமணி “, மடிபுடவை , “இரட்டை மைகோதி”, மாவிளக்கு, வைத்து .. வந்தவர் எல்லோரும் தெப்பக்குளத்தில் காசு போட்டு, விமர்சையாக கும்பிட்டு…பச்சரிசி மாவில் செய்த மாவிளக்கை சும்மாடு வைத்து, கன்னி பெண் குழைந்தையின் தலையில் வைத்து ,பட்டி சுற்றி, பாடல்கள் பாடி…
“கைதண்ணி பட்டியாரே கைதண்ணி” “அசனம் பட்டியாரே அசனம்” “வாய் பூசு பட்டியாரே வாய்பூசு”.. என பட்டி சுற்றி கன்னுகுட்டி, காளைகளுக்கு, பொங்கல் ஊட்டி ..
பட்டியில் உள்ளோர் எல்லாம் கிழக்கு, மேற்கு ,தெற்கு, வடக்கு, என நான்கு திசைகளிலும் நின்று ..அந்தந்த திசைகளில் ஊர் உலகத்துல உள்ள தெய்வங்களை அழைத்து ,விருத்தங்கள் பாடி, விழுந்து கும்புட்டு ….
பின் பொங்கல் பந்தி ….. பொங்கல், பருப்பு, நெய், மொச்சைக்கொட்டை குழம்பு, ரசம், தயிர், அரசாணிக்கா,அவரைக்கா, அப்பளம், பச்ச்சமாவு, வாழைபழம்… என அயிட்டங்கள் நீளும்….

பின் காளை அல்லது கன்னுக்குட்டி அழைத்து, தெப்பக்குளம் சுற்றி … வெண்கல தட்டு எடுத்து , “இரட்டை மைகோதியால்” தட்டி .. மாடு மிரட்டி.. எதிரில் பிடித்திருக்கும் .. “முடக்கத்தான்” தலையால் செய்த, தலை கையிறை, மிரண்ட காளை அறுத்து ஓடும்போது… காட்டில் மாடு மேய்ப்பவர், கீழ் விழுந்து, மாட்டின் பாதம் கும்பிட்டு, தேங்காய் பழம் எடுப்பார்..
பின் பொங்கல் வைத்த அடுப்பில், பால் வைத்து பொங்கவிட்டு .. பொங்கலை மீண்டும் கட்டைவண்டி ஏற்றி.. அடுப்பில் எரியும் கொள்ளிகட்டையும் எடுத்துக்கொண்டு பொங்கல் வீடு புறப்படும்….. “பொங்கல் பொங்கோணும்! வெள்ளாமை வெளையோணும்! பட்டி பெருகோணும்! பால் பொங்கி வழியோனும்!!”

இந்த வருடம் முதல் பாரம்பரியம் காக்க நாம் அனைவரும் பட்டி பொங்கல் சிறப்பாக கொண்டாடுவோம்.. அடுத்த தலைமுறைக்கும் இது தொடர துணை நிற்போம்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.