புடிச்சாப் புளியங்கொம்பாப் புடிக்கணும் அப்புடின்னு சொன்ன ரகசியம் உங்களுக்கு தெரியுமா..?

0 1,116

கேட்டுக் கேட்டுப் புளித்தாலும் புளி பற்றி அறியாத பலவுண்டு.உணவே மருந்தாகும் உணவுகளை அறிந்திடுவோம்.புடிச்சாப் புளியங்கொம்பாப் புடிக்கணும் என்று இம் மரக்கிளைகளின் உறுதியைப் பறை சாற்றுவர். புளிய மரத்தின் இலை, பூ, காய் பழம்,கொட்டை, பழத்தின் ஓடு, மரப்பட்டை, மரம் உள்ளிட்ட அனைத்துமே பயனுள்ளதாகும்.இவை பற்றி அறிந்து பயனுறுவோமா?

புளிய இலை:
புளியங் கொழுந்தைத் துவரைப்பருப்பு சேர்த்துச் சுவையான சட்னி செய்யலாம். இது உடல் சூட்டைத் தனிக்கும்.புளிய இலைகளை வடச்சட்டியில் சூடாக்கித் துணிக்குள் வைத்து ஒத்தனம் கொடுக்க உடல் வலி,வீக்கம் குணமாகும்.புளிய இலைகளை நீரில் கொதிக்க வைத்து வடித்த நீர் புண்களைக் கழுவித் தூய்மைப் படுத்தும். பிறகு மருந்திடலாம். இது அக்காலப் போர் வீரர்கள் பயன்படுத்திய முறை.

புளியம் பூ:
புளியம்பூக்களைச் சேகரித்து உலர்த்திப் பொடியாக்கி கருப்பட்டி அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து தேநீர் தயாரிக்கலாம். இது ஜலதோச ( சளி) நிவாரணியாகும். புளியம் பூத் துவையல் பித்தம் போக்கும். புளியம் பூவை மட்டும் அரைத்து கண்களைச் சுற்றித் தடவி ஓய்வெடுக்க கண் வலி, எரிச்சல், கண் சிகப்பு போன்றவை குணமாக்கும்.

புளியங் காய்( பிஞ்சு):
புளியம் பிஞ்சுகளைச் சேசகரித்து சட்னி செய்யலாம். இதை இட்லி தோசையுடன் சாப்பிடச் சுவையாகவும் இருக்கும் அதே நேரத்தில் பித்தம் குறையும்.வயிற்றுக் கோளாறுகளுக்கு எளிய மருந்து.

புளியம் பழ சர்பத்:
புளியம் பழ சர்பத் ( பானகம்) அக் காலத்தில் உறவினர்கள் வந்தவுடன் தரும் பானமாகும். ( தேநீர், காபி தற்போது தான்)
பழுத்த புளியுடன் வெல்லம் அல்லது கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து தயாரிக்கலாம். உடலுக்கு குளிர்ச்சியானது.
வயிற்று உபாதைகள், பெண்களுக்கான மாதவிடாய் சமயத்திலான வயிற்று வலி போன்றவைக்கு இது எளிய மருந்து. சூட்டால் உண்டாகும் பிறப்புறுப்பு வலியையும் இந்த பானகம் சரிப்படுத்திவிடும்.தாராளமாக மூன்று நான்கு முறை சிறுசொம்பில் பருகலாம். முன்பு தண்ணீர் பந்தலில் வழங்கினர்.அரசர்களை வரவேற்க பன்னீர் ரோஜா இதழ்கள் கலந்து தரப்பட்ட தரமான பானமே இது.

புளியம் பழத்தின் பயன்கள்:
வைட்டமின் C நிறைந்த பழமாகும். புளிப்பு சுவை இல்லாத குழம்பு, சட்னி ருசிப்பதில்லை. அதே சமயத்தில் புளி நமக்கு மலமிளக்கியாக உடலில் பணியாற்றுகிறது.
தனித்த புளி மூன்று பாகமும் உப்பு ஒரு பாகமும் சேர்ந்த கூழை பற்றுப் போட்டால் இரத்தக் கட்டு, உள் காயம் போன்றவை குணமாகும்.புதுப் புளி ஒரு தேக்கரண்டி சுண்ணாம்பு ஒரு தேக்கரண்டி அளவு பிசைந்து தேள்கடி மீது தடவிப் பற்றுப் போட்டால் விஷத்தை இறக்கிவிடும்.புளிச் சாறை பலமுறை கொப்புளிக்க தொண்டைப் புண் குணமாகும்.

புளியம்பழத்தின் மேலோடு:
புளியம் பழ மேலோட்டின் சாம்பலால் தயாரிக்கப்படும் மருந்து கல்லீரல் நோய்களை குணப்படுத்துகிறது.

புளியங் கொட்டை:
புளியங்கொட்டைகளை உடைத்துப் பெறப்படும் கரிய நிற மேல் தோலைப் பொடியாக்கித் தேனில் குழைத்து உண்டால் பேதி, சீத பேதி, காலரா போன்றவை உடனடியாக குணமடையும்.தோல் நீக்கிய பருப்பை நன்கு வறுத்துப் பொடியாக்கிப் பாலுடன் கலந்து குடித்துவர ஆண்மை விருத்தியாகும். தோல் நீக்கிய புளியம் பருப்பு அதிக அளவில் கிடைத்தால் அவற்றை ஊற வைத்து கால்நடைகளுக்கு உண்ண அளிக்கலாம். பால் அதிகம் சுரக்க இது எளிய, நல்ல முறையாகும்.

புளிய மரப் பட்டை:
எண்ணெய் அல்லது சுடுநீரால் ஏற்பட்ட காயங்களின் மீது தேங்காய் எண்ணெய் தடவி புளியமரப் பட்டையின் பொடியைத்தூவி வர ஒரு வாரத்தில் குணமாகும்.

புளியமரம்:
ஒரு வருடத்திற்கு சுமார் 150 கிலோ புளியை ஒரு மரம் தரவல்லது. புளியின் விலையைக் கணக்கிட்டுப் பார்க்கவும். தரிசான, வறண்ட நிலங்களிலும் வளரும். நீர்ப் பாசனம் தேவையில்லை.உறுதியான மரமாகும். எளிதில் பூச்சி அரிக்காதது. மரச் சாமான்கள் செய்யப் பயன்படுகிறது.
புளிய மரம் அதிகப்படியான கரியமில வாயுவை வெளியிடுகிறது. எனவே கால்நடைகளும் மனிதர்களும் இதனடியில் தங்குவதைத் தவிர்க்க வேண்டும். புளிய மரத்தின் அடியில் வேறு தாவரங்கள் வளராது.
எனவே இம்மரங்களைக் தரிசான பகுதிகளில் வளர்ப்பது நல்ல இலாபமானது.

பேய் பிசாசு புளியமரத்தில் இருக்கும் என்று பயமுறுத்துவது நாம் அதனடியில் அதிகநேரம் தங்கக் கூடாது என்பதற்காகவே. சில மருந்துகள் உண்ணும்போது மருத்துவர்கள் புளியைத் தவிர்க்கச் சொன்னால் தவிர்ப்பது நல்லதே.மற்றபடி இலை,பூ முதல் பட்டை, கொட்டை வரை மருந்து என்பதில் ஐயமில்லை. இலாபகரமானது என்பதும் உண்மையே.ஷேர் செய்து உங்கள் நட்புகளுக்கும் பயனுள்ளதாக ஆக்கிடலாமே! உணவே மருந்தாகட்டுமே!

உணவே மருந்து- புளி
ஆய்வுக்கட்டுரை: அக்னி சிறகு முடியரசு

You might also like

Leave A Reply

Your email address will not be published.