சருகுகளின் ஒலி,யானைகளின் பிளிரல், பறவைகளின் சப்தம், யானை மேலிருந்து வீசும் வாசனை இவைகளை வைத்தே அவர்களை சுற்றியுள்ள தட்பவெட்பங்களை கணிக்கும் மனிதர்கள்..

0 463

காடுகளை உருவாக்குவதில் அங்குள்ள விலங்குகளுக்கு எவ்வளவு பங்குண்டோ அதே பங்கு பழங்குடி மக்களுக்கும் உண்டு..

காடுகளின் மொழி அறிந்தவர்கள் அந்த மக்களே..

சருகுகளின் ஒலி,யானைகளின் பிளிரல், பறவைகளின் சப்தம், யானை மேலிருந்து வீசும் வாசனை இவைகளை வைத்தே அவர்களை சுற்றியுள்ள தட்பவெட்பங்களை கணிக்கும் மனிதர்கள்..

நான் சென்ற வன பயணங்களில் வன அதிகாரிகளோடும் பயணித்திருக்கிறேன், பழங்குடி மனிதர்களோடும் பயணித்திருக்கிறேன்.

தமிழக வனத்துறையை பொருத்தவரை அந்த அலுவலர்கள் அற்பணிப்பு உள்ளவர்களாகவே இருக்கின்றனர்.
வனம் சார்ந்த நேசிப்பு அவர்களின் ஆழ் மனதிலேயே இருக்கிறது.

ஒருமுறை வனத்தின் உள்ளே உள்ள நீரோடையை சீர் செய்ய JCB இயந்திரம் வரும் பொழுது ஒரு சில மர கன்றுகளின் மீதேறி அவைகள் ஏறக்குறைய மடிந்து விட்டன.
அதற்காக அந்த அதிகாரி அந்த ஓட்டுனரை கடுமையாக கடிந்ததில் இருந்தே அவரின் வனம் சேர்ந்த நேசிப்பை உணர முடிந்தது.

அப்படி வனத்தை நேசிக்கும் அனைத்து அதிகாரிகளும் சொல்லும் ஒரே வார்த்தை, தம்பி நாங்களும் இந்த அரசாங்கமும் இந்த காட்ட காப்பத்தரது இல்லப்பா, இங்குள்ள விலங்குகளும், பழங்குடி மக்களும் தான் இந்த காட்ட காப்பாத்தராங்க என்று பல முறை கூற கேட்டிருக்கிறேன்.

குறிப்பாக வனப்பரப்பிற்க்கு ஏற்ற அதிகாரிகள் பணியில் இல்லை என்பதே உண்மை.
காட்டுத்தீ வரும் காலங்களில் பழங்குடி மக்களே அந்த தீயை அணைக்க பேருதவியாக இருப்பார்கள் எனபது அந்த அதிகாரிகளின் உண்மை மொழி..

பழங்குடியினர் காட்டுத்தீயை அவ்வளவு இலாவகமாக அணைத்து விடுவர்.
அவர்கள் எதிர் தீயை மூட்டி தீயை வைத்தே தூயை அணைத்து விடுவர்.

இதில் அதிகாரிகளை குறை கூறவே முடியாது.

இந்தியாவில் காட்டு தீயை அணைக்க என்று பெரிய அளவில் வனத்துறைக்கு எந்த உபகரணமும் கொடுப்பதில்லை இந்த அரசாங்கம்..

பின் என்ன இந்த அரசிற்க்கு இப்பொழுது இவ்வளவு அக்கரை என்று யோசிக்க வைக்கிறது.

பழங்குடி மக்களை வெளியேற்றி காட்டை காப்பாற்ற வேண்டும் என்ற அக்கரை..

இதற்கான விளக்கம் கீழே பூ உலகின் நணபர்கள் கூறியுள்ளனர்.

பழங்குடிகள் இல்லாமல் காடுகளை பாதுகாக்க முடியாது. ஆங்கிலேய காலனிய காலத்தில், வனத்தின் மீதிருந்த பழங்குடிகளின் உரிமைகள் பறிக்கப்பட்டன. ‘சுதந்திர’ இந்தியாவிலும் பழங்குடிகளின் வன உரிமை மறுக்கப்படுகிறது.

காடுகளை அழித்து கனிமவளங்களை சுரண்டி எடுக்க தனியார் நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக அரசுகள் அனுமதி அளித்து வருகின்றனர். இவற்றை எதிர்க்கும் பழங்குடிகள் வனத்தில் இருந்து துரத்தப்படுகிறார்கள்.

வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடிகள், வன உரிமை சட்டத்தின் கீழ் தங்கள் நிலங்களுக்கு பட்டா கோரிய மனுக்கள் பெரும்பாலும் மறுக்கப்படுகின்றன.

இவ்வாறு, இந்தியா முழுவதும் வனப்பகுதியில் வசிக்கும் 1,127,446 பழங்குடிகளின் பட்டா மனுக்கள் மறுக்கப்பட்டுள்ளன.

Wildlife First என்னும் அரசு சாரா அமைப்பு பதிவு செய்துள்ள வழக்கில், உச்ச நீதிமன்றம் மேற்கூறிய பழங்குடிகளை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு தமிழகத்தில், 7148 குடியிருப்புகளைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியினரை வனத்தில் இருந்து வெளியேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணையின்போது மத்திய அரசு தனது வழக்கறிஞரைக்கூட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை என்பது உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது.

பழங்குடிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கை வன அழிவிற்கே வழி வகுக்கும் . இதேநேரத்தில், அதிவிரைவு புல்லட் இரயில் திட்டம் போன்ற ‘வளர்ச்சி’ திட்டங்களுக்கான அனுமதி தொடர்ச்சியாக வழங்கப்படுகின்றன.

2014 – 2019 வரை இவ்வாறு நாடு முழுவதும் வனப்பகுதியில் 682 வளர்ச்சி திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது வனங்களை அழித்து கனிமவளங்களை எடுக்கவும், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கட்டுமானம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

இப்படியான அரசு செயல்பாடுகள் தான் சின்னதம்பி போன்ற யானைகள் தம் தாய்நிலத்தை விட்டு வெளியேற காரணமாக அமைகின்றன.

காலநிலை தன்னிலை மாறி வரும் நிலையில் வனங்களை பாதுகாக்க வேண்டியது மிகவும் தேவையானது.

வனங்களை பாதுகாக்க காடுகள் குறித்த மரபு அறிவுபெற்ற பழங்குடிகளை பாதுகாக்க வேண்டியது அடிப்படையானது.

எனவே தமிழக அரசு மறுக்கப்பட்ட பழங்குடிகளின் மனுக்களை மறுபரிசீலனை செய்து அவர்களை பூர்விக வனப்பகுதியிலேயே இருக்க அனுமதிக்க வேண்டும். இதற்கு தேவையான உத்தரவுகளை உச்சநீதிமன்றத்தில் பெறவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.