சித்தனவாசல் ஓவியங்களை மிகச் சாதாரணமாக கடந்து போய்விட முடியாது. கி.பி 7ஆம்நூற்றாண்டில் பெயின்ட்

0 662

பள்ளி பருவத்தில் இருந்தே சித்தனவாசல் என்ற ஊரும், அங்கிருக்கிற குடைவரைக் கோயில்கள், ஓவியங்கள் என அனைத்தும் வாசிப்பின் வழியே அறிமுகம் ஆனவையே.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து அன்னவாசல் செல்கிற வழியில் 16 வது கி.மீ தூரத்தில் இருக்கிறது சித்தனவாசல். இங்கிருக்கிற குடைவரை கோயில்கள் பாண்டிய மன்னர்களின் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டவை.

இங்கு வரையப்பட்டு இருக்கிற ஓவியங்கள் கி்.பி.7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. சுமார் 1200 வருடங்கள் பழமையானவை. சமணர்களால் வரையப்பட்ட ஓவியங்கள் அவை.

ஓவியங்கள் என்றால் சாதாரணமான ஓவியங்கள் அல்ல. தாவர இலைகளால் வரையப்பட்ட ஓவியங்கள். இன்றும் நிறம் மாறாமல் அதன் கம்பீரத்துடன் இருக்கிற ஓவியங்களை உற்றுப் பார்த்துக் கொண்டே நின்றேன்.

கி.பி. 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அஜந்தா எல்லோரா ஓவியங்களுக்கு நிகரான தன்மை உடையவை சித்தனவாசல் ஓவியங்கள். தென்னிந்தியாவிற்கு குறப்பாக தமிழகத்திற்கே உலகப் புகழைத் தேடித்தந்த ஓவியங்கள் அவை.

எப்படி தான் வரைந்தார்களோ இந்த ஓவியங்களை என பிரம்மிப்பில் ஆழ்ந்து விட்டேன். இன்றைக்கு நம்மால் பார்க்க முடிகிற ஓவியங்கள் மொத்த ஓவியங்களில் 30% மட்டுமே. பழம்பெருமைகளின் மீதும், பண்பாட்டுச் சின்னங்களின் மீதும் விழிப்புணர்வு அற்ற தன்மையினால் சாதாரண மனிதர்களால் நிகழ்த்தப்பட்ட சேதாரங்களினால் உலகப் புகழ் பெற்ற ஓவியங்களை இழந்து நிற்கிறோம்.

நாடு விடுதலை அடைந்த பிறகு 1958 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தொல்லியல் சின்னங்களை பாதுகாத்தல் சட்டத்தின் வாயிலாகவே இன்றைக்கு மிச்சம் மீதி இருக்கிற ஓவியங்களையாவது பாதுகாத்து வைத்து இருக்கிறோம். 1980 களுக்கு பிறகே கம்பி சுவர் எழுப்பப்பட்டு தனி ஒரு பாதுகாவலரை நியமித்து குடைவரை கோவில் ஓவியங்களை பாதுகாத்து வருகிறோம்.

சமணர்களின் கலைத்திறனுக்கு அழியாத சான்றாக சித்தனவாசல் ஓவியங்கள் திகழ்கின்றன.

இளமை, இல்லறம், துறவு ஆகிய படிநிலைகளை நினைவூட்டுகிற வகையில் அங்கிருக்கிற ஓவியங்கள் தீட்டப்பட்டு உள்ளன.

14 வகையான மீன்கள் அந்த ஓவியங்களில் காணப்படுகின்றன. அன்னப்பறவைகள் சோகமாக குளத்தில் நிற்பது போன்ற ஓவியத்தை கண்டு திகைத்துப் போனேன். இப்படியுமா வரைய முடியும் என்ற கேள்வி மட்டும் தான் என்னுள் எஞ்சி நிற்கிறது. தத்ரூபமாக வரைந்திருக்கிறார்கள்.

அந்த குகையில் கடைசி நான்கு தீர்த்தங்கரர்களின் சிலைகள் வடிக்கப்பட்டு உள்ளன. கடைசி தீர்த்தங்கரரான மகாவீரரின் சிலையும் குகைக்கு வெளியே இடபக்க ஓரத்தில் இருக்கிறது.

குகைக்குள் நின்று தியானம் செய்தால் ஒருவித அதிர்வலைகளை நம்மால் உணர முடியும். குகையில் எந்த ஓரத்தில் நின்று தியானித்தாலும் அதிர்வலைகளை உணர முடியும். வியப்பாக இருந்தது.

உலகப் புகழ் பெற்ற சித்தனவாசல் ஓவியங்களையும், சமணர்களின் குடைவரைக் கோவில்களையும் வாய்ப்பிருக்கிற போது தவறாமல் சென்று பாருங்கள். வரலாற்றை சரியாக புரிந்து கொண்ட தலைமுறைகளால் தான் எதிர்காலத்தை சரியாக நிர்மாணிக்க முடியும்.

சமணர்களின் கலை திறனுக்கு சாட்சியாக இருக்கிற சித்தனவாசல் ஓவியங்களை மிகச் சாதாரணமாக கடந்து போய்விட முடியாது.

-பால.சசிகுமார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.