அரசியல்

இயற்கை வளங்களும், வணிக அரசியலும்…! இப்போது உங்களுக்கே புரியும் 8 வழிசாலை அரசியல்

By பாரதி

June 20, 2018

——————————– கவுத்தி-வேடியப்பன் மலையில் மட்டுமல்ல கஞ்ச மலை, கொடு மலை, ஜருகு மலை, நயினார் மலை, கல்ராயன் மலை, சேர்வராயன் மலை, அறநூத்து மலை, தீர்த்த மலை, சித்தேரி மலை, தல மலை என சேலம், தருமபுரி, நாமக்கல், திருவண்ணாமலை என பெரும்பாலான மலைகளில் இரும்பு தாதுவும், பாக்சைடும், மேட்டுப்பாளையம் முதல் நாமக்கல் வரை பிளாட்டினமும், காவிரி மற்றும் மன்னார் படுக்கையில் இயற்கை எரிவாயுவும், மற்ற பகுதிகளில் பிற இயற்கை வளங்கள் உள்ளதை, அரசு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களில் உள்ள புவியியல், புவி-அரசியல் படிக்கின்ற ஆய்வு மாணவர்களும் கடந்த பல ஆண்டுகளாகவே ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர்.

உலக அளவில் இரும்பு தாது ஏற்றுமதியில்

அஸ்திரேலியா 38%, பிரேசில் 29%, இந்தியா 9%, தென்னாப்பிரிக்கா 4%, கனடா 3% என்ற விழுக்காடு அளவில் ஏற்றுமதி செய்கிறது. இதில் இந்தியா 3-ஆம் இடத்தில் உள்ளது.

உலக அளவில் இரும்பு தாது இறக்குமதியில்

சீனா 59%, ஜப்பான் 13%, தென்கொரியா 5% விழுக்காடு என முதல் மூன்று இடங்களில் இந்நாடுகள் உள்ளன.

இதில் சீனா 66% விழுக்காடு ( US$76.2 billion- 2017)-ல் இறக்குமதி செய்துள்ளது. அஸ்திரேலியா , தென்னாபிரிக்கா, பிரேசில், இந்தியாவிலிருந்து, சீனா இறக்குமதி செய்துகொள்கிறது. உலகளவில் இந்தியாவில் எடுக்கப்படும் 9% விழுக்காடு இரும்பு தாதுவில், 8% விழுக்காடு சீனா இறக்குமதி செய்துகொள்கிறது.

கடந்த சில வருடங்களாக சட்டீஸ்கரில் உள்ள BAILADILA IRON ORE MINES. National Mineral Development Corporation Limited (NMDC)-லிருந்து தென்கொரியா, போசுகோ, ஜப்பான் போன்ற நாடுகளுக்கும், நிறுவனங்களுக்கும், இரும்பு தாது ஏற்றுமதியாகிறது. வரும் காலங்களில் கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டிலிருந்து இரும்புத்தாது ஏற்றுமதி விரிவுபடுத்தப்படும்.

இரும்பு தாது பிரித்தெடுத்தல் – தண்ணீரும்

இரும்புத் தாது பிரித்து எடுக்கும் பணிக்கு தண்ணீர் மிக முக்கியமானது. ஒரு நாளுக்கு 560 கன மீட்டர் (5,60,000 லிட்டர்) தண்ணீர் தேவை. இரும்புத் தாதுவை செறிவூட்ட 4 லட்சம் லிட்டர் தண்ணீரும், கழிவை பிரிக்க 1.35 லட்சம் லிட்டர் தண்ணீரும், மரங்களை வளர்க்க 3 ஆயிரம் லிட்டர் தண்ணீரும், தொழிலாளர்களின் குடிநீர் தேவைக்காக 2 ஆயிரம் லிட்டர் தண்ணீரும், இதர தேவைகளுக்கும் சேர்த்து மொத்தம் 5.60 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.

மலைகளிலுள்ள மரங்கள் முற்றிலும் அப்புறப்படுத்தப்படும். இரும்பு தாது பிரித்தெடுக்கப்படும் கழிவு இங்கேயே மலை மலையாய் குவிக்கப்படும். காற்று மற்றும் குடிநீர் மாசு ஏற்படும்.

காது கேட்கும் திறன் பாதிக்கும்

இரும்புத் தாது வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் சுகாதாரத்துக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இரும்புத் தாது வெட்டி எடுக்க பயன்படுத்தப்படும் ராட்சத இயந்திரங்களில் இருந்து 36.7 முதல் 56 டெசிபல் சத்தம் ஏற்படும். மலைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் 35.7 முதல் 52 டெசிபல் சத்தம் கேட்கும். அதாவது, பணியில் ஈடுபட் டுள்ளவர்களுக்கு காது கேட்கும் திறன் அடியோடு பாதிக்கப்படும். அதேநிலை மலைகளைச் சுற்றி வசிக்கும் கிராம மக்களுக்கும் ஏற்படும். மேலும், இந்த அதிர்வு 15 கி.மீ சுற்றளவில் உணர முடியும்.

நுரையீரல் பாதிப்பு

இரும்புத் தாது வெட்டி எடுக்கும்போது சிலிகா தூசிகள் காற்றில் கலக்கும். இதன் தாக்கம் 10 கி.மீ. சுற்றளவுக்கு இருக்கும் என்கின்றனர். சுற்றுச்சூழல் மட்டுமின்றி மனித இனத்தையும் மெல்ல மெல்ல அழிக்கிறது. தொழிலாளர்களுக்கு நுரையீரல் பாதிக்கப்படும். அவர்களைப் போன்று மலைகளைச் சுற்றி உள்ள கிராம மக்களும் பாதிக்கப்படுவர். அதனால், மூச்சுத் திணறல் ஏற்படும்

விவசாயம் நசுக்கப்படும்

இந்த மலைகள் சார்ந்த பகுதிகள், ஆறுகள், நீராதாரங்கள் முற்றிலும் பாதிக்கப்படும். இரும்பு தாது பிரித்தெடுக்கப்பட்டபின், வெளியேறும் கழிவு நீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, குடிநீரும் விவசாயமும் பாதிக்கப்படும். அருகில் உள்ள அணைகளிலிருந்து நீரை பயன்படுத்தும்போது, மக்களுக்கான குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும்.

உலகளவில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் 9% விழுக்காட்டில், 8% விழுக்காடு சீனாவிற்கும், தென்கொரியாவிற்கும், ஜப்பானுக்கும் ஏற்றுமதி செய்து கிடைக்கும் பணத்திற்காக, நம் மலையை, மண்ணை, மக்களை, நீரை, மரத்தை, பல்லுயிர்களை அழித்து இந்த நாடு அழியவேண்டுமா?, மக்கள் அழிக்கப்படவேண்டுமா? என்பதை உரியவர்கள் சிந்திக்கவேண்டும்…!

கடைசி மூன்று ஒளிப்படம்… பிரேசில் (கரஜஸ்), அஸ்திரேலியா (கூலன் தீவு), இந்தியா (பைலடிலா – சத்தீஸ்கர்) -வில் உள்ள இரும்பு தாது சுரங்கங்கள்.

இப்படிக்கு உங்கள் நண்பன்

HariBrothers Hari

வாழ்க தமிழ் தமிழர்!!!