கண் தெரியமாட்டேங்குது… உன் வாய்ஸ் மட்டும்தாம்மா கேட்குது!” – கலங்கடித்த ப்ரீத்தி மரணம்…

0 515

கட்டில் முழுவதும் தூவப்பட்டிருந்த ரோஜா இதழ்களின்மேல் கிடத்தப்பட்டிருந்தது ப்ரீத்தியின் உடல். இதயம் நொறுங்கி, நெருங்கினோம். உயிரற்ற அவள் உடலும் உதிர்ந்த பூவைப்போலத்தான் கிடந்தது. இரவு முழுக்க அழுது ஓய்ந்திருந்த வீட்டில் நாம் நுழைந்ததும் திடீர் அலறல்… `

`அய்யோ தம்பி… எம் மகள பாருங்க தம்பி… போன வருஷம் எம் பொண்ணைப்பத்தி ஆனந்தவிகடன்’ல பெருமையா எழுதினீங்களே… உங்க பொண்ணு பெரிய ஆளா வருவா’னு சொல்லிட்டுப் போனீங்களே தம்பி… என்ன இப்படித் தவிக்கவிட்டுட்டுப் போயிட்டாளே…”

என்றபடி நம்மைப் பற்றிக்கொண்டு ப்ரீத்தியின் அம்மா எழுப்பிய பெருங்குரல் நம் நெஞ்சுக்குள் இடியாய் இறங்கியது. ஆறுதல் சொல்ல வார்த்தைகளின்றி சோகத்துடன் நின்றுகொண்டிருந்தோம்.

எலும்பு வளர்ச்சி குறைப்பாட்டால், உடல்ரீதியாக முடக்கப்பட்டிருந்த நிலையிலும்கூட ப்ரீத்தி கொண்டிருந்த நம்பிக்கை அசாதாரணமானது…! அவள் எவ்வளவு கனவுகளைச் சுமந்துகொண்டிருந்தாள்…

தன் நண்பர்களை எப்படியெல்லாம் நேசித்தாள்… படிப்பையும், ஆசிரியர்களையும் எந்த அளவுக்கு அவள் காதலித்தாள்… ப்ரீத்தியின் நினைவுகள் ஒவ்வொன்றும் நம் நெஞ்சை அறுத்தது!

கடந்த ஆண்டு, 28.6.2017 தேதியிட்ட ஆனந்த விகடனில், `ஜூலி டீச்சரும்… சரவணன் சாரும்…’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையை வாசகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.

கோயம்புத்தூர், சீரநாயக்கன் பாளையத்தில் உள்ள சா.பூல்சந்த்-வீர்சந்த் அரசு மேல்நிலைப்பள்ளியில், பதினொன்றாம் வகுப்புப் படித்துவந்த மாற்றுத்திறனாளி மாணவியான ப்ரீத்தியின் கல்வித் திறன் குறித்தும் அவளது முன்னேற்றத்தின் பின்னணியாக விளங்கும் பள்ளி ஆசிரியர்கள் குறித்தும் விரிவான கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

“ப்ரீத்தி எலும்பு வளர்ச்சி பாதிக்கப்பட்ட 16 வயதுப் பெண். அவளாள் எழுந்து நிற்க முடியாது. நடைபழகாத குழந்தைபோல தவழ்ந்த நிலையிலேயேதான் இருந்தாள். ஆனால், தன் குறைபாடு குறித்த எந்தவிதக் கவலையும் அவளுக்கு இருக்கவில்லை. படிப்பு… படிப்பு…

அதுமட்டும்தான் அவள் மனசுக்குள் நிறைந்திருந்தது. பள்ளியைவிட்டுச் செல்வது அவளுக்குப் பிடிக்காத ஒன்றாக இருந்தது. எப்போதும் பள்ளியிலேயே இருந்துவிடமாட்டோமா என்ற தவிப்பு அவள் குரலில் தெரிந்தது. கலெக்டர் ஆக வேண்டும் என்பதுதான் அவள் கனவு. பத்தாம் வகுப்பில் 468 மதிப்பெண் வாங்கி அசத்தியிருந்த அவளுக்கு 11-ம் வகுப்பு சேர்வதில் சிக்கல்!

படம் வரைய வேண்டிய அறிவியல், கணிதப் பாடப்பிரிவுகளில் பயில்வதற்கு அவளது ஊனம் தடையாக இருந்தது. ஆர்ட்ஸ் குரூப்தான் படிக்க முடியும் என்ற நிலை. அவளது துரதிர்ஷ்டவசம் அவள் படித்த பள்ளியில் ஆர்ட்ஸ் குரூப் இல்லை. பல கிலோ மீட்டர்கள் தாண்டி வேறு பள்ளியில் சேர்க்கலாம் என்பதும் ஆகாத காரியம்.

காரணம், அவளது உடல்நிலை! பத்தாவதுவரை ப்ரீத்தியை அவளது அம்மா புவனேஸ்வரிதான் தினமும் பள்ளிக்குத் தூக்கிக் கொண்டுவருவார். சிறுநீர் கழிப்பதற்குக்கூட யாரேனும் தூக்கிப்போகவேண்டும் என்பதால் பள்ளி முடியும் வரை அங்கேயே காத்திருந்து தன் மகளைத் தாங்கி வந்தார் புவனேஸ்வரி,

கடுமையான சிரமங்களுக்கு மத்தியிலும் தன் மகளைப் படிக்க வைத்துவிடத் துடிக்கும் தாய்க்கு உதவ நினைத்த அப்பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன், தன்னுடைய சம்பளத்திலிருந்து மாதம் 1,500 ரூபாய் கொடுத்து, “பள்ளியில், சின்னச்சின்ன வேலைகளைச் செஞ்சுகிட்டு… ப்ரீத்தியையும் பார்த்துக்கோம்மா’ என்று சொல்லியிருந்தார். பதினொன்றாவது வேறொரு பள்ளிக்குப் போகவேண்டுமென்றால், இது எதுவுமே சாத்தியமாகாது. ப்ரீத்தியும் புவனேஸ்வரியும் பயந்தார்கள்.

தலைமையாசிரியர் சரவணனிடம் போய் பேசினார்கள். `ப்ரீத்தி நல்லா படிக்கிற பொண்ணு அவளை நாங்க விட்ற மாட்டோம்’ என்று நம்பிக்கையோடு சொன்ன சரவணன், சி.இ.ஓ-விடம் ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி ப்ரீத்திக்காக பிசினஸ் மேத்ஸ் பாடப்பிரிவை கடைசி நேரத்தில் கொண்டுவந்தார். அதனால், ப்ரீத்தி… ப்ரீத்தியின் அம்மா புவனேஸ்வரி… தலைமை ஆசிரியர் சரவணன் மூன்றுபேரும் தமிழக அளவில் பேசுபொருளானார்கள்.

அப்போதுதான் நாம் ப்ரீத்தியைச் சந்தித்துப் பேசினோம், “ `இவ பள்ளிக்கூடத்துக்குப் போய் என்ன பண்ணப் போறா?’ன்னு என் அம்மாவும் அப்பாவும் யோசிச்சிருந்தாலோ…. `இவளெல்லாம் படிச்சு என்ன பண்ணப் போறா?’ன்னு என் ஆசிரியர்கள் என்னைப் புறக்கணிச்சிருந்தாலோ நான் வீட்லேயே முடங்கி செத்துப்போயிருப்பேன். நல்லா ஞாபகம் இருக்கு. இரண்டாம் வகுப்புப் படிக்கும்போது எனக்கு மஞ்சள்காமாலை வந்துடுச்சு. ஏற்கெனவே, நான் இப்படி இருக்கேன். கூடவே, மஞ்சள் காமாலை. அம்மாவும் அப்பாவும் பயந்துபோய் என்னைப் பள்ளிக்கூடத்தை விட்டு நிறுத்திடலாம்னு முடிவெடுத்துட்டாங்க.

ஜூலின்னு ஒரு டீச்சர். அவங்கதான், `எக்காரணத்தைக்கொண்டும் பிள்ளையோட படிப்பை நிறுத்திடாதீங்க. பாதி நேரமாவது அனுப்புங்க. நான் பாத்துக்குறேன்’னு சொன்னாங்க. ஆறு மாசம் பாதி நேரம்தான் பள்ளிக்கூடம் போனேன். ஜூலி டீச்சர்தான் என்னை அவங்க பொண்ணைப்போல பார்த்துக்கிட்டாங்க. அஞ்சாவது படிக்கிறவரைக்கும் அப்பாதான் ஸ்கூலுக்குத் தூக்கிக்கொண்டு போய் வருவார். அப்பா பேப்பர் போடுற வேலைதான் பார்க்கிறார். ஆனாலும், நான் எது கேட்டாலும் வாங்கிக் கொடுத்திடுவார்.

அவருக்கு நான்தான் எல்லாமே! ஆறாவதுல என்கூட படிக்கிற பொண்ணுங்க பெரிய பொண்ணுங்களா இருந்ததால, அம்மா என்னை ஸ்கூலுக்குத் தூக்கிட்டு வர ஆரம்பிச்சாங்க. பாத்ரூம் போகணும்னா, என்னைத் தூக்கிட்டுப் போறதுக்காக, அம்மா நாள் முழுக்க ஸ்கூல்லயே உட்கார்ந்திருப்பாங்க. எனக்காக இல்லைன்னாலும் எங்க அம்மாவுக்காக படிப்புல சாதிச்சுக் காட்டுவேன்.

எல்லா டீச்சர்ஸும் என்மேல அவ்வளவு அன்பா இருக்காங்க. ஸ்கூல்ல எனக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ். அதுல ஜெனிஃபர் மேரிதான் என் பெஸ்ட் ஃப்ரெண்ட். எனக்கு எல்லா உதவிகளையும் அவதான் செய்வா. இவங்க எல்லாருடைய ஒத்துழைப்பினாலதான் என்னால 468 மார்க் எடுக்க முடிஞ்சுது. கடைசி நேரத்துல ஆரம்பிச்சதால நான் மட்டும்தான் இந்த குரூப்ல இருக்கேன். என் ஒரு ஆளுக்காகத் தனியா பாடம் நடத்துறாங்க. கலெக்டர் ஆகணும்ங்கிறதுதான் என் லட்சியம். நிச்சயம் ஆவேன்!’’ என நம்பிக்கையுடன் சொன்ன ப்ரீத்தி பதினொன்றாவது தேர்வு முடிவைக்கூட பார்க்காமல், இறந்துபோய்விட்டார் என்றால் யாரால் ஜீரணிக்க முடியும்?

ப்ரீத்தியின் ஆம்மாவுக்கு ஆறுதல் சொல்லிப் பேசினோம். அடக்கமுடியாத அழுகையோடு பேசினார், “நல்லாதான் தம்பி இருந்தா… என்னால வீட்ல இருக்க முடியல. எப்ப ஸ்கூல் திறப்பாங்கனு இருக்கு என்று சொல்லிக்கிட்டே இருந்தா.

அவளோட க்ளாஸ் டீச்சர், வத்சலாதேவி டீச்சருன்னா அவளுக்கு உசுரு. 18 ம் தேதி காலையில அவங்களுக்குப் போன் பண்ணி, `லீவ்லயே பன்னிரண்டாவது பாடத்தைப் படிச்சிட்டு இருக்கேன் டீச்சர். ஏண்டா லீவ் விடுறாங்கனு இருக்கு. எப்போது உங்களப் பாப்போமுன்னு இருக்கு டீச்சர்’னு ஏக்கமா சொன்னா.

மதியத்துக்கு மேல உடம்பெல்லாம் ரொம்ப வலிக்குதும்மா ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப் போம்மானு கதற ஆரம்பிச்சிட்டா. ஹாஸ்பிட்டலே வேண்டாம்னு சொல்றவ இப்டி சொல்றாளேனு நாங்களும் பதறிஅடிச்சுட்டு ஹாஸ்பிட்டலுக்குத் தூக்கிக்கிட்டு ஓடினோம்.

எலும்பு வளர்ச்சி சுத்தமா ஸ்டாப் ஆகிருச்சும்மா. இதுக்குமேல எங்களால காப்பாத்த முடியாதும்மானு டாக்டருங்க கைவிரிச்சுட்டாங்க. இடிவிழுந்ததைப் போல இருந்துச்சு. உலகமே இருட்டிருச்சி. வீட்டுக்குத் தூக்கிட்டு வந்தோம். கொஞ்ச நேரத்துலயே, `கண்ணு தெரிய மாட்டேங்குதும்மா… உன் வாய்ஸ் மட்டும்தாம்மா கேட்குதுனு சொன்னா… எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் அவளோட கால்மாட்டுல உட்கார்ந்து கண்ணீர் வடிக்கிறத தவிர வேற வழி தெரியல. கும்பிட்ட சாமியெல்லாம் கைவிட்ருச்சு.

பொழுது சாய்ஞ்சதும் பொசுக்குனு உயிர் போயிடுச்சு. ஒருநாள்கூட ஸ்கூலுக்கு லீவ் போட மாட்டா தம்பி… இப்டி மொத்தமா லீவ் போட்டுட்டுப் போய்ட்டாளே…” என்ற புவனேஸ்வரி அதற்கு மேல் பேச முடியாமல் கதறியழ… அங்கே நிற்க தெம்பில்லாமல் வெளியேறினோம்.

ப்ரீத்தியைப் பார்க்க அவளுக்குப் பிரியமான டீச்சர்களும், பள்ளித் தோழிகளும் அவள் வீட்டு வாசலில் குவிந்திருந்தனர். இறந்துபோன ப்ரீத்தியிடம் யார் இதைச் சொல்வார்கள்?

விகடனிலிருந்து……மறு பதிவு…

Rip preethi ????????????????????????????????

You might also like

Leave A Reply

Your email address will not be published.