Use and throw என்று ‘பயன்படுத்தி விட்டு தூக்கியெறியும்’ இன்றைய காலக்கட்டத்தில் நான் இதைப் பதிவு செய்கிறேன்…!

0 310

இங்கு மண்பானைகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளைக் குறித்து எழுதி ஒன்றும் ஆகப் போவதில்லை என்று எனக்குத் தெரியும் .

இந்தக் கலைஞர்களை அருகில் இருந்து கவனித்த என்னுடைய அனுபவத்தை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

அந்தக் கலைஞன் மனதால் ஒன்றி களிமண்ணைப் பிசைந்து கொண்டிருக்கும் காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அழுத்தம் கொடுத்து அவர் அந்த மண்ணை பிசைந்து பிட்டு, உருட்டி கைகளில் ஏந்திக் கொள்கிறார். மின் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கரத்தில் அதை வைக்கிறார்.

சக்கரம் சுழல ஆரம்பிக்கிறது. கைகளை லேசாக ஈரத்தில் நனைத்துக் கொண்டு களிமண்ணை தடவிக் கொடுத்தபடி இருக்கிறார் அல்லது அவர் வெறுமனே தடவிக் கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

இப்போது களிமண்ணின் மேல் பக்கம் விரல்களால் அழுத்திப் பிடிக்கிறார். அந்த மண் ,மெல்லக் குழிந்து மேலழுகிறது. இப்போது வலக் கையை அந்தக் குழியில் அழுத்திய படியே இடக் கையால் ஒரு குழந்தையை அணைப்பது போல மேலழுந்த மண்ணின் மீது ஆரத் தழுவுகிறார்.

களிமண் தண்ணீர் குவளையாக உயிர்பெறும் அந்தக் காட்சி, ஒரு உள்ளார்ந்த அனுபவமாக என்னுள் விரிகிறது. ஈரப் பிசுக்கு மின்னும் அந்தக் குவளையை கவனமாக சக்கரத்தில் இருந்து எடுத்து மெதுவாகத் தரையில் வைக்கிறார்.

‘ கண் பார்த்துக் கை செய்யும் கலை ‘ என்று இதை வர்ணிப்பார்கள். அது உண்மை தான்!

இது எங்கும் பொறுமையாக நின்று, நிதானித்துக் கொண்டிருக்க நேரமில்லாத அவசர யுகம். மிகக் கவனமாகக் கையாள வேண்டிய மண் பாண்டத்தை பயன்படுத்தும் பொறுமை யாருக்கும் இருக்க வாய்ப்பில்லை.

ஆனால் என்னைப் பொறுத்தவரை மண்பாண்டம் பயன்படுத்துவது என்பது ஒரு வித மனப் பயிற்சி என்று நினைக்கிறேன். கொஞ்சம் வேகமாகக் கீழே வைத்தாலே உடைந்து போகும் மண்பானைகளை பொறுமையாகவும், கவனமாகவும் கையாளப் பழகிக் கொண்டுவிட்டால் மனம் பொறுமையைப் பழகி கொள்ளும். இது உடல் நலத்துடன் , மனநலமும் சார்ந்த பயிற்சி !

மிகவும் விரிவாகப் பேச வேண்டிய இந்தப் பதிவை இந்த இடத்தில் முடித்துவிட வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். என்றாலும் மனது கேட்கவில்லை.

ஒரேயொரு செய்தியை மட்டும் உங்களுக்குச் சொல்லியாக வேண்டும்.

ஒரு மண்பானையை வனைந்து முடித்தால் அந்தத் தொழிலாளிக்கு கிடைக்கும் விலை என்ன தெரியுமா?

வெறும் பதினைந்து ரூபாய்!

நீங்கள் அருகில் உள்ள மார்க்கெட்டுக்குச் சென்று ஒரு மண் பானையின் விலை என்ன என்று விசாரித்துப் பாருங்கள்!

அதிர்ந்து போவீர்கள்!!

ஆக்கம் : புகைப்படம்: இரா.குண அமுதன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.