மழையில் குழைந்த வரிகள்!

0 418

ஈரெழுத்தில் கவிதையெழுது என என்னிடம் சொன்னால் மழை! என்றுதான் சொல்வேன். (என்னிடம் இதை சாக்காக கொண்டு கவிதை ப்ளீஸ்-னு யாரும் வர வேண்டாம்!!) என்னடா! எங்கோ படித்த ஞாபகம் இருக்கிறதே என்று எண்ணுபவர்களுக்காக:

வருடாவருடம் காலம் மாறிக்கொண்டேதான் இருக்கிறது, பூமி சுற்றிக்கொண்டேதான் இருக்கிறது. நாட்கள் கடந்துகொண்டேதான் இருக்கிறது. பருவங்கள் மாறிக்கொண்டேதான் இருக்கிறது. மற்ற பருவங்களில் இல்லாத ஏதோ ஒன்று இப்போது இருக்கிறது. காற்றும், மழையும், குளிரும் சேர்ந்து அழைக்கிறது என்னை. என்னை மட்டுமல்ல, உங்களையும் கூட!

உள்ளுக்குள் ஏதோ சிலிர்ப்பு, இன்னும் அழுத்தமாய்ச் சொன்னால் ஜிலிர்ப்பு! மழைபெய்த சாலை வழியே, சரியாகச் சொன்னால் மழைபெய்து கொண்டிருக்கக் கூடிய, (தூறிக் கொண்டிருக்கக் கூடிய) சாலை வழியே நான் மட்டும் செல்கிறேன். எனது மழையில் கரைந்த வரிகள்தான் இங்கே!

சாலை முழுதும் நல்ல ஈரம். சாலையோர மண்ணும் கொஞ்சம் கொஞ்சமாய் சகதியாகிறது. உடல் கொஞ்சம் கொஞ்சமாய் ஈரமாகியது. அதைத் தவிர்ப்பதற்காக நடையின் வேகம் கூடியது. ஒருவழியாக பேருந்தின் உள்ளே சென்று ஜன்னல் வழியே மழைத்துளிகளை ரசித்தேன். மழை சற்று அழுத்தம் குறைத்தது. காதினுள் இசை பரவ அனுமதித்தேன். வெளியே குளிர் என்னை நெருக்கியது. உள்ளே இளையராஜா இயக்கிக் கொண்டே இருந்தார். குளிரை வெல்ல இளையராஜா இசைவழியாக உதவினார்.

வழக்கமாக கணினியில் டைப் செய்கையில் எனது கைகள் மெதுவாக ’டைப்’பும். ஆனால் இன்றோ என் பற்கள் ‘லோயரை’த் (Lower)தாண்டி ‘ஹையரில்’(Higher) போய்க் கொண்டிருந்தது. சிந்தனையை வேறுபக்கம் திருப்பிட முனைந்தேன். சாலைகளைக் கவனித்தேன். மழை இன்னும் தூறிக் கொண்டேயிருந்தது.

சாலையோரத்திலேயே வழக்கமாக நான் கவனிக்கும் ஒரு பெண்மணி இருந்தார். இரண்டு குழந்தைகள் பள்ளி செல்ல தயாராய் அவரின் அருகே நின்றிருந்தனர். கையில் (மடியில்) இன்னுமோர் கைக் குழந்தை. அதுவும் மழையில் அனைவருக்குமாய் குடைபிடித்தபடி, சாலையை நோக்கியிருந்தார். என்னால் அவர்களைச் சாதாரணமாய்க் கடக்க முடியவில்லை. ஆனால் எனது பேருந்து அவர்களை எளிதாகவே கடந்துவிட்டது. எத்தனை எளிய மனிதர்களையும் மழை நாசம் செய்து விடும். ஆனாலும் மழை இன்பம் செய்யக்கூடியதுதான். மறுப்பதற்கேயில்லை. வழக்கம்போல் பாடல் ஒன்றையும்  பகிர ஆசை.

வான் மேகம்!

பூப்பூவாய்த் தூறும்!

தேகம் என்னவாகும்?

இன்பமாக நோகும்!

மழைத்துளி தெறித்தது!

எனக்குள்ளே குளிர்த்தது

வானம் முத்துக்கள் சிந்தி வாழ்கவென்றது!

அப்புறம் இன்னும் சில வரிகள்:

இன்னும் நிறைய மழைப்பாடல்கள், குளிர்ப்பாடல்கள் இருக்கின்றன. மகிழ்ச்சியோடு கேளுங்கள். மழையை ரசியுங்கள். நம்மிடையே அன்பும், நேசமும் மழைபோல் நிறையட்டும். அண்ணன் ஓஜஸ் அவர்கள் நாற்சந்தியில் கலக்கிவருகிறார்… கொண்டாட்டத்தில் திளைக்க அவரது தளத்திற்கு செல்க. அண்ணன் தளத்திற்கு லிங்க் தருவதென்பது சூரியனை அடையாளம் காட்டுவது போலாகும். இருந்தாலும் தருகிறேன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.