பாரம்பர்ய நெல் ரகத்தை விற்க மனசில்லாம அடகு வச்சிருக்கேன்!” – 170 நெல் ரகங்களைச் சேகரித்த விஜயலட்சுமி

0 344

ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் பைக் தொடங்கி விமானம் வரை ஓட்டிவிட்டார்கள். வயல் வேலைகள் தொடங்கி விஞ்ஞானம் வரையில் அனைத்துத் துறையிலும், ‘ஆணுக்கு பெண் இளைப்பில்லை காண்’ என்று பலம் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி செய்வது அதையும் தாண்டிய புனிதமான அருஞ்சாதனை புரிந்திருக்கிறார். விவசாயிகள் பெரும்பாலோனோர் ஹைபிரிட் விதைகளில் உழன்றுகொண்டிருக்க, விஜயலட்சுமியோ நமது பாட்டன் பூட்டன் பயன்படுத்திய 170 பாரம்பர்ய நெல் ரகங்களைத் தேடித் தேடிச் சேகரித்திருக்கிறார்.

தமிழ்நாடு முழுக்க நடக்கும் போராட்டங்கள், விவசாயம் சார்ந்த நிகழ்வுகளில் அந்த விதைகளை வைத்துக் கண்காட்சி நடத்துகிறார். தனது கணவர், மகள் மற்றும் மருமகன் ஆகியோர் துணையோடு இன்னும் பல பாரம்பர்ய ரகங்களைச் சேர்க்கும் வேட்கையோடு அலைந்துகொண்டிருக்கிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாகக் கடந்த பத்து வருடங்களாகப் பாரம்பர்ய ரகங்களை மட்டுமே தனது வயலில் சாகுபடி செய்து கொண்டிருக்கிறார். அதில் கிடைக்கும் விளைச்சலை டி.என்.சி-யிலோ, தனியார் வியாபாரிகளிடமோ விற்காமல், இயற்கை விவசாயம் செய்யத் துடிக்கும் விவசாயிகளைத் தேடித்தேடிக் கண்டுபிடித்து, விதைகளைக் கொடுத்து சாகுபடி செய்யச் சொல்கிறார். தான் சேகரித்த 170 பாரம்பர்ய நெல் விதைகளைப் பெருக்க, தனது வயலில் சொந்த கைக்காசைப் போட்டு செலவழித்து, விதை நேர்த்தி செய்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவருக்குப் பணமுடை ஏற்பட, கையில் இருந்த இரு டன் சிகப்பு கவுனி ரகத்தை விற்றால், உணவுக்கு பயன்படுத்தக்கூடும், விதையாக விவசாயிகளிடம் சேர்ப்பிக்க முடியாது என்ற எண்ணத்தில் தனது ஊர் சொஸைட்டியில் 22 ஆயிரத்திற்கு அடகு வைத்திருக்கிறாராம்.

சமீபத்தில், கரூர் மாவட்டம், கடவூரில் உள்ள வானகத்தில் நடந்த ஒரு விழாவில் தனது கணவர் சகிதம் வந்து பாரம்பர்ய நெல் ரகங்கள் கண்காட்சியை நடத்தினார் விஜயலட்சுமி. அவருக்கு விழாவில், ‘சிறந்த பாரம்பர்ய விதை காப்பாளர்’ என்ற விருதும் வானகம் சார்பாக வழங்கப்பட்டது. அவரது கணவரோடு விருதை பெற்றுக்கொண்டார். அங்கே வந்த பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், கல்லூரி இளைஞர்கள், பெண்கள் என்று பலரும் இவர் காட்சிப்படுத்திய பாரம்பர்ய நெல் ரகங்கள் பற்றி விசாரிக்க, முகம் நிறைய ஜனித்த சந்தோஷத் துள்ளலோடு விளக்கினார்.

அங்கே வைத்து விஜயலட்சுமியிடம் பேசினோம். “எங்களுக்கு சொந்த ஊர், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் ஒன்றியத்தில் உள்ள கருப்பம்புலம். நான் ரெண்டாப்பு வரை படிச்சிருக்கேன். எனக்கு ஒரு பெண், இரண்டு பசங்க. எங்க குலத்தொழிலே விவசாயம்தான். எங்களுக்கு இரண்டு ஏக்கர் நிலமிருக்கு. எங்க பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் எல்லோரும் செயற்கை விவசாயம் மட்டுமே செஞ்சாங்க. நாங்களும்தான். அதுவும், எல்லோரும் புகையிலை சாகுபடி செஞ்சாங்க. இந்தப் பயிரால் ஊருக்கு பத்துப் பேருக்கு கேன்சர் வந்தது. இதனால்,’விவசாயத்தை மாற்றி, மனித உயிர்களை மீட்கணும்’னுதான் ஆரம்பத்துல நினைச்சேன்.

அப்போதான், 2004-ம் வருஷம் சுனாமி பேரலை வந்து, எங்க பகுதி மக்கள் பல பேர்களை மட்டுமல்லாது, புகையிலை விவசாயத்தையும் அழிச்சுட்டு. பலர் சேகரித்து வைத்திருந்த ஹைபிரிட் விதைகள் அனைத்தும் அழிஞ்சுட்டு. அப்போதான், வேலு கோனார்ங்கிறவர் மூலமா நமது பாரம்பரிய நெல் ரகமான கறுப்பு நெல் கொஞ்சம் கிடைச்சுச்சு. அப்போதான்,மனசுல பளீர்னு ஒரு யோசனை மின்னுச்சு. பாரம்பரிய நெல் ரகத்தைச் சேகரித்து, புகையிலை விவசாயம் செய்து புற்றுநோயை விளைவித்துக்கொண்டிருக்கும் இந்தப் பகுதி விவசாயிகளை மாற்றினால் என்னன்னு தோணுச்சு. என் கணவர், என் மகள் சிவரஞ்சனி, மருமகனும், சென்னையில் மருத்துவராக இருப்பவருமான சரவணகுமரனும் பாரம்பர்ய நெல் ரகங்களைச் சேகரிப்பதில் எனக்குப் பெரும் உதவி பண்ணினாங்க.


ஆனால், 2007-ம் வருடம் வரை மாப்பிள்ளை சம்பா, குழியடிச்சான்னு இருபது ரகங்களை மட்டுமே சேகரிக்க முடிஞ்சது. ஆனால், 2007-ம் வருடம் நம்மாழ்வார் அய்யாவைச் சந்திக்கும் பெரும் பாக்கியம் பெற்றேன். அதன்பிறகு, எனது விதை சேகரிப்பு ஆர்வம் வெறியாச்சு. எனது மகளுக்கும், மருமகனுக்கும் அதே நிலைதான். வேட்கையோடு அலைந்து, ஒவ்வொரு ரகமா சேகரித்து, இப்போ 170 ரகங்களுக்கு வந்திருக்கிறோம். எங்ககிட்ட சூரக்குடுவை, குழி அடிச்சான், காட்டுயானம், சிகப்புக் குருவிக்கார், மாப்பிள்ளை சம்பா, சிகப்பு கவுனி, கறுப்பு கவுனி, இலுப்பைப்பூ சம்பா, கைவிர சம்பான்னு வீடு முழுக்க பாரம்பர்ய ரகங்களை சேகரித்து வெச்சு அழகு பார்த்துகிட்டு இருக்கோம்.

அதோடு, எங்க ரெண்டு ஏக்கர் நிலத்துல அந்தப் பாரம்பர்ய ரகங்களை மாத்தி மாத்தி இயற்கை முறையில் விளைவிச்சு விதை நேர்த்தி பண்ணி வெச்சுருக்கோம். அதை விவசாயிகளைத் தேடிப் பிடித்து பண்டமாற்று முறையில், ஒரு கிலோ பாரம்பர்ய விதைகளைக் கொடுத்தால், அதை அவர்கள் விளைவித்து இரண்டு கிலோவாகத் திருப்பித் தரணும்ங்கிற அடிப்படையில கொடுக்கிறோம். அதோட, தமிழ்நாடு முழுக்க நடந்த மீத்தேனுக்கு எதிரான போராட்டம், ஜல்லிக்கட்டுப் போராட்டம், நெடுவாசல் போராட்டம் என்று பல போராட்டக் களங்களில் இந்தப் பாரம்பரிய நெல் ரகங்களை வைத்துக் கண்காட்சி நடத்த ஆரம்பித்தோம். இதுவரை ஆயிரம் இடங்களில் கண்காட்சி நடத்தி இருக்கிறோம்.

நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.டி பீல்டில் உள்ள இளைஞர்கள் எங்களிடம் விவசாயம் செய்ய பாரம்பர்ய நெல் ரக விதைகளை வாங்கிக்கிட்டுப் போனதுதான் எங்க சாதனைனு நினைக்கிறேன். அதோடு, எங்க பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகளை எங்கள் விதை மூலமா இயற்கை விவசாயத்திற்கு திருப்பி விட்டிருக்கோம். எங்க ஊரைச் சேர்ந்த வேலு கோனார் என்பவரை வைத்துதான் பல ரகங்களின் பெயர்களையே கண்டுபிடித்தோம்.

எங்ககிட்ட ராஜபோதை தரும் கவுனி, மருத்துவ குணம் கொண்ட உயர் வகையைச் சேர்ந்த கருங்குறுவை, நல்ல வாசம் தரும் தூயமல்லி, எவ்வளவு வெள்ளம் வந்தாலும் அதைத் தாண்டி வளரும் மடுமுழுங்கின்னு பல அரிய வகை பாரம்பரிய நெல் ரகங்களும் எங்ககிட்ட இருக்கு. நாங்க பயிரிடும் பாரம்பரிய நெல் ரகங்களை விற்றால்,உணவுக்காகப் பயன்படுத்தக்கூடும் என்பதால்,விதையாகவே கொடுக்கிறோம்.

சமீபத்தில், எங்களுக்கு திடீர் பணமுடை வந்துட்டு. வீட்டில் இருந்த இரண்டு டன் சிகப்பு கவுனி, ஒரு டன் மாப்பிள்ளை சம்பா,18 மரக்கால் தூயமல்லி ரகங்கள்ல ஏதோ ஒண்ணை விற்கலாம்னு சொந்தக்காரங்க சொன்னாங்க. ஆனால்,விதையாக மட்டுமே, அதுவும் பண்டமாற்று முறையில் மட்டுமே பாரம்பர்ய ரகங்களை விவசாயிகளுக்குக் கொடுக்கணும்ங்கிற உறுதியில இருக்கும் நான், என்கிட்ட இருந்த இரண்டு டன் சிகப்பு கவுனி நெல் ரகத்தை கருப்பம்புலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில 22 ஆயிரத்திற்கு அடகு வெச்சு சமாளிச்சேன்.

பாரம்பர்ய நெல் கண்காட்சி

வர்ற ஆடிக்குள்ள அதை திருப்பி,விவசாயிகளுக்கு ஆடி, ஆவணி பட்டத்துல விதைக்க விதை தரணும். நான் எங்க வயல்ல பத்து வருஷமா இயற்கை விவசாயம் மட்டுமே செய்றதால, எங்க வயல் ரெண்டு ஏக்கர்ல எங்கே தோண்டினாலும் மண்புழு இருக்கும். எனக்கு இப்போ வயசு ஐம்பது. எனது இறுதிக்காலத்துக்குள்ள முந்நூறு வகை பாரம்பர்ய வகை நெல் ரகங்களையாவது சேகரித்து, விதை நேர்த்தி செய்து, செயற்கை விவசாயத்தால் நோய்களை உற்பத்தி செய்துகொண்டிருக்கும் விவசாயிகளுக்குக் கொடுத்து, நம்மாழ்வார் விரும்பிய இயற்கை வேளாண்மையைக் கொண்டு வரனும்கிறதுதான் என் லட்சியம். அந்தப் பாதையில் சரியாகப் பயணிக்கிறேன்னு நினைக்கிறேன்” என்றார்.

அவருடைய கணவர் சிவாஜியிடம் பேசினோம்.

“நான் கல்லூரி படிப்பு படித்திருக்கிறேன். ஆனால், ரெண்டாவது படிச்ச என் மனைவி எனக்கு யோசனை சொல்வாங்க. பாரம்பர்ய நெல் ரகங்களைச் சேகரித்து நம்மாழ்வார் காட்டிய வழியில் போய், ‘எல்லோரும் இயற்கை விவசாயத்திற்கு மாறுங்க. பாரம்பரிய நெல் ரகங்களைப் போடுங்க’ன்னு ஊர் உலகத்திற்கே இப்போ யோசனை சொல்றாங்க. அதற்கு, என் மகளும், மருமகனும் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறாங்க. நான் என் பங்குக்கு சிறு சப்போர்ட் பண்றேன். என் மனைவி எனக்குக் கிடைத்த பெருமை” என பூரிக்கிறார் சிவாஜி.

பயணம் தொடரட்டும்!

நன்றி
துரை.வேம்பையன்
ராஜாமுருகன்
பசுமை விகடன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.