வீட்டில் சிறிது இடம் இருந்தால் இதனை படியுங்கள் பயன்படும்..!

1 355

உங்கள் வீட்டுத்தோட்டத்தில் இடத்திற்கு தகுந்தாற்போல் (இரண்டுக்கு இரண்டு அடி என்றோ,மூன்றுக்கு மூன்று அடி என்றோ அல்லது இரண்டு அல்லது மூன்றுஅடி  அகலத்தில், தேவையான நீளத்திற்கோ) சிறு சிறு மேட்டுப்பாத்திகளாக (தரையிலிருந்து சுமார் அரை அடி உயரத்தில்) அமைத்துக்கொள்ளவேண்டும்.

உங்கள் விருப்பத்திற்கிணங்க இதில் நீங்கள், தண்டுக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணிகீரை, பாலாக்கீரை, வெந்தயக்கீரை, பசலைக்கீரை போன்ற ரகங்களில் எதனை வேண்டுமானாலும் பயிரிட்டுக்கொள்ளுங்கள். ஒவ்வொரு பாத்தியிலும் ஒவ்வொரு ரகங்களையும் பயிரிடலாம்.

கீரைத்தோட்டத்தை சுற்றிலும் வரப்பு ஓரங்களில் அகத்திகீரை செடிகள்  நடவும். பாத்திகளின் வரப்புகளில் கொத்தமல்லி செடியின் விதைகளை ஊடுபயிராக பயிர் செய்யலாம்.

கீரைத்தோட்டத்தின் வெளிப்புறம் சுற்றிலும் சாமாந்திப்பூ செடியினை பயிரிடுங்கள் (இது பூச்சிகளை கீரை பயிரிட்ட பாத்திகளுக்குள் வரவிடாமல் தடுத்து வேலி போல் செயல்படும்).

கீரை விதைகளை சலித்த மணலுடன் கலந்து, பாத்திகளின் மேல் சீராக தூவி விடவும். பின்னர் கைகளால், மேல் மண்ணை மூடிவிடவும். பூவாளி கொண்டு தண்ணீரை பாத்திகளின் மீது மெதுவாக தெளிக்கவும்.

மூன்றாம் நாள் மீண்டும் பாத்திகளில் நீர் தெளித்து விடவும். ஒரு வாரம் கழித்து, கீரைகள் முளைத்து வந்திருக்கும். கூடவே ஒரு சில களைகளும் முளைத்திருக்கும். தேவையில்லாமல் முளைத்திருக்கும் அவ்வகை களைகளை கைகளால் பறித்து அகற்றிவிடவும். தொடர்ந்து, இரண்டு அல்லது மூன்று நாள் இடைவெளியில் மண்ணின் ஈரப்பதத்தை பொறுத்து, நீர் தெளித்து வரவும். இருபத்தி ஐந்து நாள் முதல் முப்பது நாட்களுக்குள் கீரைகள் அறுவடைக்கு தயாராகிவிடும்.

வெந்தயக்கீரை, தண்டுக்கீரை ஆகியவை ஒருமுறை மட்டுமே அறுவடை செய்யக்கூடியது. அறுவடைக்குப்பின் விதைகளை  மீண்டும் தூவி பயிர் செய்திடலாம். மற்ற கீரை ரகங்களை, இருபத்தி ஐந்து நாள் இடைவெளியில் தொடர்ந்து அறுவடை செய்து வரலாம். (பத்து மாதங்கள் கழித்து தோட்டம் முழுதும் சுத்தப்படுத்தி, மீண்டும் இதே போல் விதைகள் விதைத்து அறுவடை செய்து வரலாம்

You might also like
1 Comment
  1. Logamuhilan Subramaniyam says

    ஆடு, கோழிகள் அதனை நாசம் செய்யாமல் இருக்க ஏதேனும் வழி உள்ளதா

Leave A Reply

Your email address will not be published.