ஒரு நதியின் மரணம்..! உண்மை சம்பவம்..! காரணம் யார்..?

0 304

ஒரு நதியின் மரணம்…

நதிகளில்தான் மனித நாகரீகம் வளர்ந்தது…
நதி மரணித்தால்.,
மனிதர்களின்நாகரீகம், கலாச்சாரம், வாழ்வியல் எல்லாமே மரணிக்கும்…

ஒருகாலத்தில் அனைவராலும் நேசித்த ஒரு நதியின் பெயர்,இன்று
எமது பகுதியில் வெறுக்கப்படும் பெயராகவும் இருக்கிறது அதுதான் நொய்யல்…

நதி என்ன செய்தது?
நாம்தான் சீரழித்தோம்.சீராக்கும் பொறுப்பும் நமக்கேதான் உள்ளது.உணர்வோம் காப்போம்.நொய்யலின் குரல்வளையை இறுக்கியிருக்கும் மதங்களின் பெயரில் ஏமாற்றிக் கொண்டிருக்கும் போலி மத வியாபாரிகளையும் அவர்களுக்கு முட்டுக் கொடுப்பவர்களையும் முதலில் விலக்குவோம்…

நதி மீளட்டும்…

சகோதர் மு ஆனந்தன் அவர்களின் தெளிவான பதிவு தொடருங்கள்…

கோவை மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில், மத்துவராயபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட நல்லூர்பதி பழங்குடி கிராமம் அருகில்தான் காருண்யா பல்கலைக்கழகம், சின்மாய பள்ளிக்கூடம் போன்றவை நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சட்டவிரோத கட்டிடங்களை கட்டியுள்ளது. அவை ஏற்கனவே நல்லூர்பதி பழங்குடி மக்கள் தங்கள் குலதெய்வமான சடையாண்டி கோவிலுக்குச் செல்லும் வழித்தடத்தையும் நூறு ஏக்கருக்கும் மேலான புறம்போக்கு நிலங்களையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளன. அதை எதிர்த்து அந்த பழங்குடி மக்களுடன் இணைந்து தொடர்ந்து பல போராட்டங்கள் நடத்தி வருகிறோம். காருண்யாவுக்கு எதிரான வழித்தட ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு ஆர்.டி.ஓ. விடமும் உயர்நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது.

காருண்யாவுக்கும் சின்மயாவுக்கும் கிழக்கே மேற்கு மலைத் தொடரிலில் உற்பத்தியாகி பாய்ந்து வருகிற காட்டாறுதான் மசையெறும்பு ஆறு எனப்படுகிற வள்ளத்து ஓடை.

ஏற்கனவே இந்த ஆற்றை ஆக்கிரமித்து ஆற்றின் நடுவில் சின்மயா பள்ளி நிர்வாகம் கருங்கல் மதில் சுவர் அமைத்து ஆற்றின் மீது பெரும் வன்மத்தை நடத்தியுள்ளது.
தற்போது இந்த ஆற்றின் மேற்கு கரையோராப் பகுதியில் காருண்யா காண்கிரிட் மதில் சுவர் எழுப்பி வருகிறது. அதற்காக அந்தப்பகுதியை சீர் செய்வதற்காக ஜே.சி.பி இயந்திரம் மூலம் நிலத்தை சமப்படுத்தி மிகுதி மண்ணையும் மரம் செடி கொடிகளையெல்லாம் ஆற்றில் தள்ளி ஆற்றையே நாசப்படுத்தியுள்ளது. ஆறு மற்றும் இரு கரைகளில் உள்ள பள்ளவாரி நிலம் சேர்த்து மொத்த அகலம் 126 அடி. இது அரசு ஆவணங்களில் உள்ளது. ஆனால் இப்போது இந்த 126 அடி ஆறு கூணிக்குறுகி நாலைந்து அடிகள் கூட இல்லாமல் இருந்த இடம் தெரியாமல் புதையுண்டு கிடக்கிறது.

பழங்குடி மக்களின் வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ளதால் புதிய வழித்தடம் ஏற்படுத்தித் தருகிறேன் என்கிற பெயரில் ஆற்றில் மண்ணைக் கொட்டி ஆற்றின் மீது வழித்தடத்தை உருவாக்கியுள்ளது.

பல நூற்றாண்டுகளாக நுங்கும் நுரையுமாக செழிப்போடு வாழ்ந்த இந்த ஆறு இன்று நம் கண் முன்னே கொலை செய்யப்பட்டு சின்னாபின்னமாகக் கிடக்கிறது. இது நொய்யலின் முக்கிய நீராதாரம். ஆறேழு மாதங்கள் தண்ணீர் வரத்துள்ள ஆறு. நல்லூர்பதி பழங்குடி மக்கள் குளிப்பதற்கும், துணிகள் துவைப்பதற்கும் பரம்பரையாக இந்த ஆற்றை பயன்படுத்துவதாக நல்லூர்பதி மக்கள் சொல்கிறார்கள். அப்படியாப்பட்ட ஆறு இன்று உயிரோடு இல்லை.
வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் நீலியாற்றின் மீது வன்முறை செலுத்துகிறது ஈஷா. இங்கு மசையெறும்பு ஆற்றின் மீது காருண்யாவும், சின்மயாவும் வன்முறை செலுத்துகிறார்கள். இப்படி நெய்யலின் நீராதார நதிகள் கல்வி, ஆன்மீகம், யோகா என்ற பெயரில் ஒவ்வொன்றாக கொலை செய்யப்பட்டு வருகிறது. யானை வழித்தடங்கள், காணுயிர் வாழ்விடங்களும் அழிக்கப்பட்டு வருகிறது.

நல்லூர்பதி பழங்குடி மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று அவர்களைக் கேட்டோம். அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா ?. இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பிஜேபி கட்சிக்காரங்கதான் காருண்யாவுக்கு ஆதரவாக இருக்கிறாங்க. காருண்யாகிட்ட பணம் வாங்கிக் கிட்டு நாங்க போராடுனா எங்கள மிரட்டுறாங்க. எங்க உயிருக்கு உத்தரவாதமில்ல. எந்த நேரத்துல என்ன நடக்குமோன்னு பயமா இருக்கு என்கிறார்கள். சங் பரிவாரங்கள் காருண்யாவை எதிர்ப்பதெல்லாம் வெளிவேசம். அவர்கள் பொழப்பு ஓட வேண்டும். வனங்களை, நீராதாரங்களை சூறையாடுவதில் ஈஷாவும் காருண்யாவும் ஒன்றுதான். இதில் மதத்தைத் திணித்து அவர்கள் நம்மளை திசை திருப்புகிறார்கள்.

கோவை மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாச்சியர், பேரூர் வட்டாச்சியர் ஆகியோர் உடனே தலையிட்டு செத்துக்கிடக்கிற மசையெறும்பு ஆற்றை மீட்டெடுக்க வேண்டும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பழங்குடிகளின் வழித்தடங்களை, நீராதாரங்களை அழித்த குற்றத்திற்காக காருண்யா, சின்மயா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தக்க கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காருண்யா, சின்மயா, ஈஷா, தாமிரா, ரேக்கண்டோ, அமிர்தா, காரல்கியூப்ஸ், போன்ற மேற்கு மலைத் தொடர்ச்சி அடிவார பகுதியில் வனச்சூழலை, காணுயிர் வாழ்விடங்களை, நீராதாரங்களை, வயல்களை அழித்து வருகிற அனைத்து வணிக, கல்வி, ஆன்மீக நிறுவங்களை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் இதற்கெல்லாம் நிரந்தரத் தீர்வு ஏற்படும்.

கீழே படத்தில் நீங்கள் பார்ப்பது எல்லாம் மசையெறும்பு ஆறு ஓடிய இடம்.. இப்போது எப்படி இருக்கிறது….

.. மு.ஆனந்தன் …
(ஓசை பதிவிலிருந்து)

You might also like

Leave A Reply

Your email address will not be published.