உங்கள் பகுதியின் மரம் என்ன..? பாரம்பரிய மரங்களை பற்றி நீங்கள் அறிந்தது உண்டா..?

0 274

மரங்களுக்கும், மக்களுக்கும் ஒரு இணக்கமான பாசப்பிணைப்பு எப்போதுமே இருந்துள்ளது. ஆனால் இன்றைக்கு அப்படி ஒரு மரம் இருந்ததா என்று கேட்பது மாதிரி ஆகிலிட்டது. மரங்களை இழந்து நாம மழையையும் இழந்து விட்டோம்.

‘உசில்‘ மரங்கள் நிறைஞ்சு இருந்த இடம்தான் உசிலம்பட்டி. ‘இலுப்பை‘ மரங்கள் நிறைஞ்ச பகுதி இலுப்பையூர், ‘விளாமரம்‘ இருந்த இடம் விளாத்திகுளம், ‘வாகை‘ மரங்கள் செழித்த பகுதி வாகைகுளம். இன்னும் ஆலங்குளம், அத்தியூர், அரசம்பட்டி, தாண்டிக்குடி, வேப்பங்குளம், தாழையூத்து இப்படி பல ஊர்ப் பெயர்களில் மரங்கள் இருக்கின்றன. ஆனால், இன்றைக்கு அந்தந்த ஊர்களிலேயே அந்த மரங்களை காணோம்.

அதற்கு பதிலாக ‘தைல‘ மரம், ‘சீமைக் கருவேலம்‘, ‘தூங்கு மூஞ்சி‘ ன்னு விதவிதமா வெளிநாட்டு மரங்கள் ஆக்கிரமிப்பு. இந்த மரங்கள் சீக்கிரமே வளர்ந்து விடும். அதிக அளவு நீரையும் உறிஞ்சும். இதனால புல்வெளிகளுக்கு நீர் கிடைக்காமல் அழிய, அதை நம்பி வாழும் கால்நடைகளும் குறைந்து, உயிர் சுழற்சியே மொத்தமாக மாறிவிட்டது. பார்த்தீனியம் செடிகள் நீர்நிலைகளை அழித்து விட்டன. இப்படி வளரும் மரங்களில் காய்கள், பழங்கள் எதுவுமே வராது. அதனால் பறவைகளும் இல்லாமல் போய் விட்டன.

“உசில்“ மரம் வறட்சியை தாங்கி வளரும். எந்த வெப்பமான பூமியிலும் மனிதர்களுக்கு நல்ல நிழல் தரும். “வேங்கை“ மரம் இன்றைக்கு அரிதாகி விட்டது. இந்த மரத்தில் ஒரு குவளை செய்து, அதில் தண்ணீர் ஊற்றி வைத்தால் கொஞ்ச நேரத்தில் அது சிவப்பாகி விடும். இந்த தண்ணீரை குடித்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் என்கிறது, ஆயுர்வேதம். மருத மரத்தின் பாகங்களிலிருந்து புற்றுநோயை தடுக்கும் மருந்து தயாரிக்கும் ஆராய்ச்சி நடக்கிறது.

“இலுப்பை“ மரத்திலிருந்து எடுக்குற இலுப்பை எண்ணெய், தமிழர் கலாசாரத்தில் ரொம்பக் காலமாக விளக்கேற்ற பயன்பட்டிருக்கிறது. இடுப்பு வலிக்கும் ஏற்ற மருந்து இது. “தோதகத்தி“ மரத்தில் எந்தப் பொருள் செய்தாலும் அது காலத்துக்கும் அழியாது. குஜராத் பக்கம் கடலுக்குள்ள மூழ்கிப்போன ஒரு நகரத்தை சமீபத்துல கண்டுபிடித்தனர். அங்கு தோதகத்தி மரத்துண்டு கிடைத்திருக்கிறது. 4 ஆயிரம் வருடத்துக்கு முன்னாடியே இங்கிருந்து அந்த மரங்களை கொண்டு போயிருக்கிறார்கள்.

உசில் மரத்தின் இலையை பொடி செய்து தலைக்கு ஷாம்புவாக பயன்படுத்தலாம். ‘வழுக்கை மரம்‘ எனப்படுகிற ‘தடசு‘ மரத்தின் பட்டையை சுடுநீரில் போட்டால் ஷாம்பு ரெடி. இந்த இரண்டு ஷாம்புகளுக்கும் மருத்துவ குணங்கள் உண்டு. மருத மரத்தின் பட்டையை காய வைத்து, கசாயம் பண்ணிக் குடித்தால், உடலில் கொழுப்புச் சத்து குறையும். தாண்டி மரத்தில் காய்க்கிற தாண்டிப் பழம், மூலத்தைக் குணப்படுத்தக் கூடியது. சளி, வயிற்றுப்போக்கையும் இது கட்டுப்படுத்தும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.