தமிழன் வெட்கி தலைகுணியவேண்டிய பல விசயங்கள் உள்ளது அதை மறைப்பதற்கு பெயர் அரசியல்..!

0 703

தமிழன் மட்டுமல்ல. மனித இனமே தலைகுனிய வேண்டிய அவலங்கள் நடப்பது வெகு தூரத்தில் அல்ல. நமக்கு நடுவே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

சாதியின் பெயரால் என்னென்னவெல்லாம் செய்கிறோம்?

ஒருவன் நம்மிடையே நம்மைப் போன்றே பிறந்தான். அவனைப் பிறப்பிலேயே வேறுபடுத்தி சிறுமைப்படுத்தினோம். ஆனால், வெளியில் சமத்துவம் பேசினோம்.

வறுமையைச் சுவாசித்து வளர்ந்தபோதும் நாம் கைகொடுக்க வில்லை. மேலும் வறுமை பரிசளித்தோம்.

கல்வியில் சமவுரிமை மறுத்தோம். கல்வியை வசதியானவனுக்கு விற்றுவிட்டு இடஒதுக்கீடு என்று கூறி பிச்சையிட்டோம். அதையும் பல வழிகளில் அபகரித்தோம்.

உலக அளவிலான அறிவாளிகள் எனக் காட்டிக்கொண்டு புறக்கடையில் தனிக் குவளைகள் வைத்தோம்.

சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பிவிட்டு இங்கே கையால் சக மனிதனை மலம் அல்ல வைத்தோம். பிரதமரை வைத்து அவர்களின் காலைக் கூடக் கழுவ வைத்தோம்.

வேட்டியை மடித்துக் கட்டினால் கூட தாக்கினோம். சிறுநீர் குடிக்க வைத்தோம்.

கோவிலைக் கட்டும் வேலையைச் செய்ய வைத்தோம். ஆனால், கோவிலுக்குள் நுழையாதே என்றோம். நீ ஜனாதிபதியாக இருந்தால் கூட.

காதலித்தால் ஆணவக்கொலை செய்தோம்.

என்ன உணவு அவன் உண்ண வேண்டும் என்பதையும் வரையறுத்தோம். மாட்டைக் காக்க விழைந்த நாம் மனிதனைக் கொல்ல சிறிதும் யோசிக்கவில்லை.

பெண்களை வன்புணர்வு செய்த பின்பும் அடங்காமல் அவர்கள் குடும்பத்தையும் கொல்ல விழைந்தோம். அரசியல் பலத்தால் ஆணவம் காட்டினோம்.

அயராமல் சமூக நீதி பேசினோம். தரையற்ற வீடுகள், தாகம் கொண்ட வீட்டு குடங்கள், படிக்காத குழந்தைகள், கசடுகளென நிறைந்து வழியும் குப்பைத் தொட்டிகள் மற்றும் அதை சுத்தம் செய்தே வாழ சில சாதிகள், மயிரிழையில் நிற்கும் மரணம் வளர்த்து சாதனை புரிந்துள்ளோம்.

செத்த பின்பும் விட்டோமா அவனை? அவன் பிணத்துடனும் விளையாடினோம். இதை விட மனித குலத்திற்கு என்ன அவலம் நேர முடியும்?

வேலூர் மாவட்டத்தில் அரசலாந்தபுரம் – நாராயணபுரம் இடையே பாலாற்றின் மீது பாலம் கட்டப்பட்டதால் பாலத்திற்கு செல்லும் வழியை, சில மேல்சாதியினர் ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு அந்த வழியே தலித் மக்கள் தங்கள் பிணங்களைக் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இந்த கொடுமை கடந்த 4 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இறந்த பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரின் சடலத்தை எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால் சடலத்தை பாலத்தின் மேல் இருந்து கயிறு கட்டி கீழே இறக்கப்பட்ட சம்பவம் நம் சாதி, மதப் பெருமையைப் பறை சாற்றும்.

கயிறு கட்டி இறக்கப்படுவது வெறும் பிணம் அல்ல. மனிதத்தின் மாண்பு. சிறிது மிஞ்சியிருக்குமெனில். நம் ஒவ்வொருவருக்கும் இதில் பங்குள்ளது. ஆனால் மற்றவர்களை நோக்கி கை காட்டுவோம்.

சாதி, மதப் பெருமை பேசுபவர்கள் தன் ——-யை எடுத்துத் தானே ———- கொள்ள வேண்டிய தருணம் இது. நீங்களே வெற்றிடத்தை நிரப்பிக் கொள்ளுங்கள்.

பதிவு: சண்முக சுந்தரம் துரைராசன்

Quora shared

You might also like

Leave A Reply

Your email address will not be published.