நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை..? இந்த கேள்வியை ஒரு ஆண் எதிர்கொண்ட விதம் இது

0 968

எனக்கு தற்போது முப்பத்தேழு வயதாகிறது. இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. திருமணம் செய்து கொண்டே ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே இருந்ததில்லை, என் வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதையும் எனக்குக் கிட்டிய அனுபவங்களும் திருமணம் செய்துகொள்வதற்கு ஏதுவாக இல்லை. என் பின்கதையை கொஞ்சம் திரும்பிப்பார்த்தால் புரியும்.

அப்போது எனக்கு பதினேழு வயது, கல்லூரியில் சேர்ந்து நான்கு மாதங்கள் ஆகியிருந்தது. என் வகுப்பில் படித்த மாணவி ஒருத்தியின் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அவள் பார்த்த பார்வையும் சில சமிக்ஞைகளும் அதனால் என்னுள் ஏற்பட்ட குதூகலமும் “காதல் என்பது இதுதானோ?” என்று எனக்குள் நானே கேட்டுக் கொள்ள வைத்தது.

அதன் பின் அவளுடன் பழக ஆரம்பித்தேன், அந்த பழக்கம் ஒரு நல்ல நட்பாக வளர்ந்தது, பெரும்பாலும் தொலைபேசி உரையாடல்கள் மூலம் தான். ஒருநாள் அவளிடம், “இது வெறும் நட்பு தானா? இது காதலாக இருக்குமோ?” என்று கேட்டேன், அவள் ஆம் என்றும் சொல்லவில்லை, இல்லை என்றும் சொல்லவில்லை, ஏதேதோ சொல்லி குழப்பினாள். சரி, இதெல்லாம் அவளுக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது என்று சற்று விலகினேன். ஆனால் சில வாரங்கள் கழித்து அவள் மீண்டும் வந்தாள், மீண்டும் நெருக்கமான நட்பு, சில வாரங்கள் கழித்து மீண்டும் என்னிடமிருந்து அதே கேள்வி, மீண்டும் குழப்பமான பதில், மீண்டும் விலகல், மீண்டும் சேர்தல்… இது திரும்பத் திரும்ப நடந்தது.

இந்த பழகல் விலகல் விளையாட்டெல்லாம் கூட எனக்கு ஒரு பிரச்சனையாக இல்லை, வேறு ஒரு விஷயம் தான் எனக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது. அது என்னவென்றால் அந்தப் பெண்ணுடன் வேறு எந்த மாணவனோ ஆணோ பேசினால் எனக்குள் கோபமும் பொறாமையும் பொத்துக் கொண்டு வரும். இது எனக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது, ஏனென்றால் என் சிறு வயது முதலே, இன்று வரையிலும் கூட, தனிப்பட்ட முறையில் நான் யாரையுமே எதிரியாக பாவித்ததில்லை. அதிகம் பேசாதவனாயிருந்தாலும், அனைவரிடமும் நட்பு பூண்டு இனிமையாகப் பழகக்கூடிய ஆள் நான். புதிதாக முளைத்த அந்த கோபமும் பொறாமையும் என் மன நிம்மதியைக் கெடுத்தது, அதற்கு ஒரு மருந்தாக ஆன்மீகத்தை நாடத் துவங்கினேன்.

கல்லூரியின் மூன்றாம் வருடத்தின் போது ஒரு நாள் அவள் ஒரு சக மாணவனுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். பொறாமைத் தீ என்னுள் பற்றி எரிய ஆரம்பித்தது. அன்று மாலை என் வீட்டில் என் அறையில் தனியாக கட்டிலில் அமர்ந்திருந்தேன். கோபத்தை அடக்க முடியாமல் என் வலது முஷ்டியால் மெத்தையின் மீது ஓங்கிக் குத்தினேன், அப்போது “அவனைக் கொல்லனும்” என்ற வார்த்தை என் வாயிலிருந்த வெளிப்பட்டது. அது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி, திக்குமுக்காடிப் போனேன். ஒரு பெண்ணின் மீது கொண்ட மையல் என்னை இப்படி கீழ்த்தரமான மனிதனாக ஆக்கியதே என்று வியந்தேன்.

அந்த நாள் என் வாழ்வின் மிக முக்கியமான திருப்புமுனை. பெண்ணாசை வீழ்ச்சியைத்தரும் என்ற எண்ணம் என் மனதில் ஆழப் பதிந்தது. அதன் பின் ஆன்மீகத்தில் ஆழ இறங்கினேன், யோகம், பிராணாயாமம் கற்றேன், தியான பழக ஆரம்பித்தேன், பகவத் கீதையையும் விவேகானந்தரின் புத்தகங்களையும் படிக்கத் தொடங்கினேன்.

அதன் பின் அந்தப் பெண்ணிடம் “நட்பா காதலா?” பேச்சையெல்லாம் நிறுத்தினேன், அவள் எந்த அளவு விரும்புகிறாளோ அந்த அளவு நட்புடன் பழகிக்கொள்ளட்டும் என்று விட்டுவிட்டேன். ஆனால் அதன் பின் தான் அவள் முன் எப்போதும் இல்லாத அளவு நெருங்கிப் பழக ஆரம்பித்தாள், பல தனிப்பட்ட ரகசியங்களையெல்லாம் கூட என்னிடம் பகிர்ந்து கொள்வாள், “சரி, என்னை ஒரு நம்பிக்கையான ஆளாக பாவிக்கிறாள் போலிருக்கிறது” என்று நினைத்துக் கொண்டு ஒரு நண்பனாகவே அவளுடன் பழகினேன்.

கல்லூரி முடிவடைவதற்கு முன் கடைசியாக ஒருமுறை அவளிடம், “இந்த உறவு நம்மை எங்கே கொண்டு செல்கிறது?” என்பது போன்று ஏதோ கேட்டேன். மீண்டும் தெளிவான பதில் இல்லை. பாவம், அவள் தான் என்ன செய்வாள், அறியாச் சிறுமி தானே அவளும்? அல்லது ஒருவேளை அவள் தான் மிகவும் முதிர்ச்சியுடனும் தெளிவுடனும் இருந்தாளோ என்னவோ?

எது எப்படியோ, கல்லூரிக்குப் பின்பு தொடர்புகள் மங்கியது, உலகங்கள் வேறாகியது. சில வருடங்கள் கழித்து அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று கேள்விப்பட்டேன். ஆனால் அதைக் கேட்ட போது என் மனதில் சிறிதளவும் சலனம் இல்லை, அது நான் வெகுதூரம் வந்துவிட்டேன் என்று எனக்கு உணர்த்தியது. அதன் பின் சில வருடங்கள் கழித்து Facebook மூலம் மீண்டும் தொடர்பு ஏற்பட்டது, நட்பு இன்றும் தொடர்கிறது, முன்பிருந்த நெருக்கமோ குழப்பமோ இல்லை, அவ்விடத்தில் இன்று ஒரு பரஸ்பர மரியாதை இருக்கிறது.

இது தான் என் முதல் “காதல்” அனுபவம். இப்போது நினைத்தால் எனக்கு வந்தது காதலெல்லாம் இல்லை, வெறும் வயசுக் கோளாறு என்று தான் சொல்லத் தோன்றுகிறது. அது எப்படியிருந்தாலும் அந்த வருடங்களில் நான் கற்ற பாடங்கள் விலைமதிப்பல்லாதது.

அந்த அனுபவத்திற்கும் அவ்வனுபவம் கற்றுக் கொடுத்த பாடத்திற்கு பின்பும் கூட அவ்வப்பபோது யாராவது ஒரு பெண் மீது ஈர்ப்பு வரும், நானும் ஒரு சராசரி ஆண் தானே? அப்படித்தான் என் இருபத்து நான்காம் வயதில் உடன் பணிபுரிந்த ஒரு பெண்ணின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. நெருக்கமான பழக்கமாயில்லாவிட்டலும் நல்லதொரு நட்பு. தினமும் காலையில் அனைவருக்கும் முன்பே அவளும் அவள் தோழியும் பணியிடத்துக்கு வந்துவிடுவார்கள். அவர்களுக்கு முன்பே நான் சென்று என் இடத்தில் அமர்ந்து கொள்வேன். அவள் வந்ததும் என்னைப் பார்த்து அழகானதொரு புன்னகை பூப்பாள். அது ஒன்றே போதும், நாள் முழுவதும் என்னை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க. உண்மையில் அவ்விடத்தில் பணிபுரிய எனக்கு பிடிக்கவேயில்லை, அவளால் மட்டுமே பதிநான்கு மாதங்கள் அங்கே பணிபுரிந்தேன், இல்லையென்றால் மூன்றாம் மாதமே வெளியேறியிருப்பேன்.

அழகானவள், நல்ல குணம் கொண்டவள். அதனால் வேறு சில ஆண்களுக்கும் அவள் மீது ஒரு கண் இருந்தது. “சரி, மற்றவர்கள் போல் தானே நானும், அவளுக்குப் பிடித்திருந்தால் அவளே வந்து சொல்லட்டும், பிறகு பார்த்துக்கொள்ளலாம்” என்று என் மனதிலுள்ளதை அவளிடம் சொல்லவேயில்லை. பிறகு அவள் வேலை மாறினாள், நானும் வேறு இடத்திற்குச் சென்றேன். பின்னர் மீண்டும் தொடர்பு ஏற்பட்டபோது அவள் திருமணமாகி குழந்தையும் பெற்றிருந்தாள்.

அதன்பின் ஓரிரு வருடங்கள் கழித்து நான் யோகப்பயிற்சி செய்யச் செல்லும் இடத்தில் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது, எனக்கான பெண் இவள்தான் என்று தோன்றியது, ஒரு நான்கைந்து வாரங்களாக என் மனதில் அவள் பிம்பமே வந்து வந்து போனது. அவளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டி Facebookஇல் அவள் profileஐ தேடிக் கண்டுபிடித்தேன். ஆனால் அவள் நான் நினைத்து வைத்திருந்தது போல் அல்லாமல் முற்றிலும் வேறுமாதிரியான பெண் என்று தெரியவந்தது, “எல்லாமே மாயையோ?” என்று தான் நினைக்கத் தோன்றியது.

இதனிடையே ஒரு நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் வாழ்க்கை எனக்குப் பிடிக்கவில்லை, வேலையை விட்டு ஒன்றரை ஆண்டு ஊரெல்லாம் சுற்றினேன், இந்தியாவின் பல இடங்களை சுற்றி வந்தேன். ஒருசில ஆசிரமங்களிலெல்லாம் தங்கியிருந்தேன், தன்னார்வத் தொண்டனாக பணிபுரிந்தேன். பின் மீண்டும் வந்து Freelance முறையில் பணிபுரிய ஆரம்பித்தேன், அது அளித்த சுதந்திரமும் flexibilityயும் என் ஆன்மீக வளர்ச்சிக்கு மிகவும் தோதாக இருந்தது. நீண்ட நாட்களுக்கான தியான முகாம்களுக்கெல்லாம் அவ்வப்போது செல்ல ஆரம்பித்தேன்.

அப்படி இப்படி எனக்கு முப்பது வயதைத் தாண்டியது. வீட்டில் தொல்லை அதிகமாகியது, “சரி, பெண் பார்த்துத் தொலையுங்கள்” என்று சொன்னேன். யாராவது ஒரு பெண்ணை கொண்டுவந்து நிறுத்திவிடுவார்களோ என்று பயந்தேன், ஆனால் நான் நினைத்ததற்கு மாறாக பெண் கிடைப்பதெல்லாம் அவ்வளவு எளிதாக இல்லை. அதிலும் நான் ஒரு நிறுவனத்தின் கீழ் வேலை பார்க்காமல் சுயமாக பணிபுரிந்து வருவதெல்லாம் பெண்களுக்கு பிடிப்பதல்லை, குறிப்பாக பெண்களின் தகப்பன்களுக்கு பிடிப்பதேயில்லை. அவர்களுக்காக என் வாழ்க்கை முறையையைும் சுதந்திரத்தையும் விட்டுத்தர நான் தயாராக இல்லை. அவர்கள் என்னைப் பற்றி தெரிந்து கொள்வதை விட எண்களைப் பற்றி தெரிந்து கொள்வதில் தான் அதிக ஆர்வம் காட்டினார்கள், அதாவது என் வயது, என் வருமானம் ஆகிய எண்கள். அதெல்லாம் பத்தாதென்று ஜாதி, ஜாதகம் இத்யாதி வேறு.

இப்படி என்னை சற்றும் மதிக்காத கூட்டத்தின் முன்னால் என்னைக் கொண்டு போய் நிறுத்துவது எனக்கு சற்றும் பிடிக்கவில்லை. ஆகவே matrimony தளத்திலிருந்தெல்லாம் என் கணக்கை நீக்கினேன். இனிமேல் எனக்கு பெண்ணெல்லாம் பார்க்காதீர்கள் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டேன். கடந்த சில வருடங்களாக என் பெற்றோர் மற்றும் உறவினரின் கவனம் என் தம்பியின் மீது திரும்பியுள்ளது.

நான் முன்பே சொன்னது போல் திருமணம் செய்துகொண்டே ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே இருந்ததில்லை, அதில் இருந்த கொஞ்ச நஞ்ச ஆர்வமும் இப்போது அற்றுப் போய்விட்டது. கர்மத்தின் பிடியிலிருந்து முற்றிலுமாக விடுபட வேண்டும், நான் கற்றதையும் பெற்றதையும் வேண்டியவர்க்கு பகிர வேண்டும், சமூகத்தில் நிலவும் தவறான கருத்தாக்கங்களையெல்லாம் உடைத்தெறிய வேண்டும் என்ற எண்ணம் தான் தற்போது மேலோங்கியுள்ளது.

ஆக, இது தான் நான் திருமணம் செய்துகொள்ளாமலிருப்பதன் காரணம்.

நான் திருமணமாகாதவன் என்று சொன்னால் அதற்கான காரணமாக மக்கள் என்னென்னவோ கற்பனை செய்து கொள்கிறார்கள். ஆகவே இது பற்றி எங்காவது ஓரிடத்தில் தெளிவாக பதிவிட வேண்டும் என்று எண்ணியிருந்ததன் விளைவு தான் இந்த நீண்ட பதில். இவ்வளவு தூரம் பொறுமையாக என் கதையைப் படித்ததற்கு என் நன்றிகள்

பதிவு: சீனிவாசன் G

இந்த பதிவை படிக்கும் போதே பகிர நினைத்தேன் பகிர்கிறேன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.