ஒருவேளை நான் அவனைக் கொல்லாமல் போலீஸில் ஒப்படைத்து அந்த வழக்கு உங்களிடம் வந்தால் உங்களது தீர்ப்பு என்னவாக இருக்கும்..?

0 178

அந்த கோர்ட் வளாகம் ஸ்தம்பித்து நின்றது அன்று.

தன் கணவனை அரிவாள் மனையால் வெட்டிக் கொன்ற ஒரு மனைவிக்கு தீர்ப்பு வழங்கிய நாள் அது.

குடிபோதையில் தனது இரண்டு குழந்தைகளை ( 7 வயது மற்றும் 5 வயது ) காலால் மிதித்துக் கொன்ற கணவனை ஆவேசத்தோடு அரிவாள் மனையால் வெட்டிக் கொன்ற அந்தப் பெண்ணுக்கு தண்டனை வழங்கி தீர்ப்புச் சொல்லும் நாள்.

அனைவரின் எதிர்பார்ப்புக்கும் இடையில் தனது ஆசனத்தில் வந்து அமர்ந்த நீதிபதி தனது தீர்ப்பினை வாசித்தார்.

இந்த வழக்கு கொஞ்சம் சிக்கலானது. என்றாலும் சந்தர்ப்ப சாட்சியங்கள் மற்றும் குற்றவாளியின்

வாக்குமூலங்களை வைத்துப் பார்க்கும் போது குடிகாரக் கணவனிடம் அவனது கொடுமைகளைச் சகித்து வந்த இந்த பெண்மணியின் பொறுமையின் மேல் கேள்வி எழுகிறது.

தனது கணவன் குடித்து விட்டு பலநாட்கள்

பல வகைகளில் சித்திரவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இங்கே ஒரு விடயம் யோசிக்கச் செய்கிறது. தனது கணவனின் அளவில்லாத குடிவெறித்தனங்களைச் சகித்திராமல் காவல் துறையில் புகார் செய்திருக்கலாம் இந்தப் பெண்மணி. அவ்விதம் செய்யாமல் பொறுத்துச் சகித்துக் கொண்டது முதல் குற்றம்.

சம்பவ தினத்தன்று தன்னை அடிக்க வந்த கணவனிடம் இருந்து குழந்தைகளோடு தப்பித்துச் செல்ல வாய்ப்பிருந்தும் இந்த பெண்மணி அதை ஏன் செய்யவில்லை என்று கேள்வி எழுகிறது. குடிபோதையில் தனது இரண்டு குழந்தைகளையும் மிதித்தேக் கொன்ற கணவனது செயல் கண்டு பொறுக்க இயலாமல் ஆத்திரத்தில்

அரிவாள் மனையால் வெட்டியதாக இந்தப் பெண் சொல்கிறார்.

கணவன் குடிபோதையில் அந்த இரண்டு குழந்தைகளைக் கொன்றதால் அவன் அப்போது தன்னிலையில் இல்லாத நிலையில் மதுவின் பிடியில் இருந்து அந்த கொலைகளைச் செய்தான் என்றும் அவன் திட்டமிட்டுத் தனது குழந்தைகளைக் கொன்றான் என்று எடுக்க இயலாத நிலையிலும் சந்தர்ப்ப சாட்சியங்கள் அமைந்திருக்கின்றன.

ஆனால் ஆத்திரத்தில் கணவனை வெட்டிய இந்தப் பெண்மணியின் செய்கை தனது செயலால் அவன் உயிர் போகுமென்று நன்கு அறிந்திருந்த நிலையில் எந்த போதைக்கும் ஆளாகாமல் சுய அறிவோடு எடுத்த செயல் என்றே எடுத்துக் கொள்ளப்படுகிறது. அவன் குழந்தைகளைக் கொன்றதைப் பார்த்த இந்தப் பெண்மணி அங்கிருந்து தப்பித்துச் சென்று காவல் துறையிடம் புகார் செய்து அவனைக் கைது செய்து கோர்ட்டில் கொண்டு வந்து அவனுக்கு தக்க தண்டனை பெற்றுத் தந்திருக்கலாம். அதைச் செய்யாமல் சட்டத்தைத் தனது கையில் எடுத்துக் கொண்டு கொலை செய்த இந்தப் பெண்மணியின் குற்றத்தை சட்டரீதியாகப் பார்க்கும் போது தண்டனைக்குரிய குற்றமாகத் தான் கருத முடிகிறது.

ஆகவே இபிகோ 301 . 302 மற்றும் 306 பிரிவுகளின் கீழ் இந்தப் பெண்மணிக்கு தூக்குதண்டனை வழங்க சட்டம் இருக்கும் நிலையில் கொலை நடந்தது ஆவேசத்தின் பேரிலும் கொலை செய்தவர் பெண் என்ற காரணத்தாலும் இந்தப் பெண்மணிக்கு ஆயுள் தண்டனை அளித்துத் தீர்ப்பு வழங்குகிறேன். ‘’

தீர்ப்பினை வாசித்து விட்டு தனது இருக்கையில் இருந்து எழத் தொடங்கினார் நீதிபதி.

அப்போது அந்தப் பெண்மணி நீதிபதியிடம் கூறினார்.

ஐயா நான் ஓர் ஐந்து நிமிடம் எனது கடைசிக் கருத்தைக் கூற வேண்டும் கேட்பீர்களா ..? ‘’

ஒரு கணம் தயங்கிய நீதிபதி மீண்டும் தனது ஆசனத்தில் அமர்ந்து பேச அனுமதி கொடுத்து கூர்ந்து கேட்கலானார்.

அந்தப் பெண்மணி கூறத் தொடங்கினாள்.:

’’ ஐயா நீங்கள் நீதிமான். நன்கு கற்றறிந்தவர். எனது சில கேள்விகளுக்கு மட்டும் பதிலளிக்க வேண்டும். கொடுப்பீர்களா..?

ஒருவேளை நான் அவனைக் கொல்லாமல் போலீஸில் ஒப்படைத்து அந்த வழக்கு உங்களிடம் வந்தால் உங்களது தீர்ப்பு என்னவாக இருக்கும்..? குடிபோதையில் அறியாது செய்த அவனது கொலைகள் ஒரு விபத்தாகக் கருதி சுயநினைவின்றிச் செய்த செயலால் அவனது தண்டனை ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடமோ இருக்கும். அவ்வளவு தானே..?

நான் அவனது குடியையும் கொடுமைகளையும் கடந்த பல வருடங்களாகச் சகித்துக் கொண்டேன். காரணம்..? அவனைத் துரத்தி விட்டாலோ காவல் துறையில் பிடித்துக் கொடுத்தாலோ நான் தனியாய் குழந்தைகளுடன் வாழ வேண்டி இருக்கும். அப்போது இந்த சமூகம் என்னை நிம்மதியாக வாழ விட்டிருக்கும் என்று கருதுகிறீர்களா..?

சம்பவத்தன்று குடிபோதையில் மாதவிலக்காகி இருந்த என்னைப் புணரக் கட்டாயப்படுத்திய அவனைத் தள்ளி விட்டு விலக்கிக் கொண்டிருக்கையில் என்னை அவன் மோசமாக அடிக்கத் தொடங்க அதைக் காணச் சகிக்காமல் என் குழந்தைகள் அவனது காலைக் கட்டிக் கொண்டு அப்பா அம்மாவை அடிக்காதீங்க என்று அழும் போது வெறியில் இரண்டு குழந்தைகளையும் தள்ளி விட்டு சரியாக அவர்கள் கழுத்தில் மாறி மாறிக் காலால் மிதித்துக் கொல்லும் போது நான் ரசித்துக் கொண்டிருக்கவில்லை. பதைத்துக் கொண்டிருந்தேன். அவனைத் தடுக்க முயன்று கொண்டிருந்தேன். ஆனால் அவனது வெறித்தனமான மிதிகளைத் தாங்க இயலாமல் என் கண் முன்னே என் முலைப்பாலருந்தி அந்த மணம் கூட இன்னும் விட்டு விலகாமல் மாசற்ற என் இரண்டு குழந்தைகளும் சாகும் போது என் பதைபதைப்பு எத்தனை இருந்திருக்கும் என்பதை கருப்பையே இல்லாத உங்களால் உணர முடியாது.

அந்த நேரத்தில் என் மனம் அனுபவித்த கொடுமைகளைச் சகித்துக் கொண்டு அவனிடமிருந்து தப்பி ஓடி இரண்டு மைல் தொலைவில் இருக்கும் காவல் நிலையத்திற்கு ஓடி அந்த இரவு நேரத்தில் குடிபோதையில் இரவுப் பணியில் இருக்கும் காவல்துறையின் அதிகாரியிடம் முறையிடப் போயிருக்க வேண்டும். குடிபோதையும் காமவெறியும் மிகுந்த அந்தக் காவலனின் காம வெறிக்கு நான் ஆளான பின்னர் அவனைக் கெஞ்சிக் கூத்தாடி அழைத்து வந்து என் குழந்தைகளைக் கொன்ற அந்த ராட்சதனைக் கைது செய்ய வைத்து உங்கள் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்க வேண்டும்.

அந்த செயலைச் செய்யாத எனக்கு நீங்கள் தருகின்ற தண்டனையை நான் ஏற்கும் முன் எனது இறுதிக் கேள்வி ஒன்று.

நடந்த அந்த மூன்று கொலைகளுக்கும் காரணகர்த்தா யாரென்று நான் சொன்னால் அவருக்கு தண்டனை தர உங்களுக்குத் துணிவு இருக்கிறதா..?

அப்படி இருக்குமெனில் அந்த மூன்று கொலைகளுக்கும் காரணமான குடிக்குக் காரணமான நமது மாநில முதலமைச்சரைக் கைது செய்து தண்டனை தாருங்கள். வழக்கை சரியாக நடத்தினால் மூன்று கொலைகள் அல்ல மூன்று லட்சம் கொலைகளுக்குக் காரணமானவர் அவர்தானென்று உணர்ந்து தண்டனை தாருங்கள்..

துணிவு இருக்கிறதா உங்களுக்கு…? ‘’

அந்த நீதிபதி ஸ்தம்பித்துப் போனார்.

இந்த பதிவைப் படிக்கும் போது என் கண்கள் கலங்கியது. இந்த வேதனை ஒவ்வொரு குடிகார குடும்பத் தலைவனிடம் அடிபட்டு, மிதிபட்டு வாழும் இல்லதரசிகளின் வேதனை.

இதனால் தான் தமிழ்நாட்டுக்கு பூரண மதுவிலக்கு வேண்டும். சிந்தியுங்கள் மக்களே.

You might also like

Leave A Reply

Your email address will not be published.