கணவரும், மகளும் அடுத்தத்தடுக்க இறக்க, தொடங்கிய தொழில் இருந்த இடம் தெரியாமல் அழிய நேர்ந்த ஒரு பெண் என்ன செய்வாள்?

0 930

கணவரும், மகளும் அடுத்தத்தடுக்க இறக்க, தொடங்கிய தொழில் இருந்த இடம் தெரியாமல் அழிய நேர்ந்த ஒரு பெண் என்ன செய்வாள்? பதறிஅடித்து தீராத்துயருக்குள் தன்னை கொண்டுச் சென்று முடங்கிவிடுவாள்…! உண்மையில் ஜோஸ்பின் ஆரோக்கிய மேரி அதைத் தான் செய்தார். ஆனால், அவரை மீட்டெடுத்து வந்தன அவர் ஆசையாய் வளர்த்த தேவதை எனும் தேனீக்கள்!

ஆம், பத்து ஆண்டுகளாய் தேனீ வளர்ப்பில், திகட்டாத வருமானம் ஈட்டிவரும் ஜோஸ்பின், 1800 பேரை தொழில் முனைவோர்களாக்கி, ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்கிறார்.

பிறந்த ஊர் சிவகங்கையில் உள்ள முத்துப்பட்டி. வாக்கப்பட்ட ஊர் மதுரை கடச்சனேந்தல் கிராமம். பிளஸ் டூ படிச்சுமுடித்தவுடனே எனக்கு கல்யாணம் ஆகிருச்சு. புகுந்த வீட்டுக்கு வந்தபிறகு தான், பி.ஏ படித்தேன். கணவர் வீட்டில் பொருளாதார நெருக்கடி. பய்யன், பொண்ணு இரண்டுபேருமே வளர்ந்துட்டாங்க எதாச்சும் வேலை வாய்ப்பு இருக்கானு நியூஸ் பேப்பரில் தேடி பாத்திட்டு இருந்தப்ப தான், மதுரை வேளாண் அறிவியல் மையத்தில் தேனீ வளர்ப்பு இலவச பயிற்சி கொடுக்கிறதா செய்தி இருந்தது. நானும் பயிற்சியில் கலந்துகிட்டேன். பத்துப் பெட்டிகளை கொண்டு தேனீ வளர்க்க ஆரம் பித்தேன், எனும் அவர் வசம், அச்சமயத்தில் சொந்தத்தோட்டம் இல்லாதக்காரணத்தால், ஊரில் உள்ள அப்பாவின் தோட்டத்தில் பெட்டிகளை வைத்திருக்கிறார்.

ஜோஸ்பினின் தந்தை ரிட்டெயர்ட் தலைமை ஆசிரியரும், இயற்கை விவசாயியும். 100 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்துவந்துள்ளார். அங்கே பெட்டிகளை வைத்துவிட்டு வாரம் ஒரு முறை மட்டும் சென்று தேன் சேகரித்து வந்துள்ளார். முதல் முறையிலே 8 கிலோ தேன் கிடைத்தது, புது ஊக்கத்தை தந்ததுடன் ஜோஸ்பின் தேனீ வளர்க்கும் சேதி ஊர் முழுக்க பரவியுள்ளது.

தேசிய வேளாண் இயக்கம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் தேனீ பெட்டிகள் வழங்குவதற்கு ஜோஸ்பினிடம் கேட்டுள்ளனர். அவரும் ராணித் தேனீக்களை பிரித்தெடுத்து, தேனீ பெட்டிகளை உருவாக்கி 62 பெட்டிகளை வழங்கியுள்ளார்.

தேன் சேகரித்து விற்பனை செய்வதை காட்டிலும், தேனீக்களாகவே வணிகம் செய்தால் வருமானம் ஈட்டாலம் என்பதை உணர்ந்த அவர், ஒரு லட்சம் ரூபாய் கடன்பெற்று பெட்டிகளை தயாரித்துள்ளார். அச்சமயத்தில், அவருடைய மகளது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ஓடியாடி விளையாடுக் கொண்டிருந்த குழந்தையின் கால் எலும்பில் ஏற்பட்ட முறிவுக்கு சிகிச்சை எடுக்கும் போது தான், எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளாள் என்பதை தெரிந்துள்ளனர்.

“ரொம்ப கஷ்டமான காலம் அது. நல்லா இருந்த பிள்ளைக்கு திடீர்னு இப்படி ஒரு வியாதினா எப்படி ஏத்துக்கொள்வது. இருக்க நகைய அடகு வைத்து, கடன் வாங்கி 3 லட்சம் வரைக்கும் செலவு செய்தோம். ஆனால், பிழைப்பது சிரமம்னு முன்பே கூறிவிட்டனர். அவளும் எங்களை விட்டு போயிட்டாள். சில மாதங்களுக்கு பிறகு, தேனீப்பெட்டிகளை சென்று பார்த்தால் எறும்புகள் மோய்த்து வீணாய் போகிவிட்டன. என் கணவரும் உடல்நலம் பாதித்து இறந்துவிட்டார். வாழ்க்கையே முடிந்துவிட்டது, இனி என்னயிருக்கு… யாருக்காக உழைக்கணும்னு வாழ்க்கையே வெறுத்து போயிருச்சு…”

எனும் ஜோஸ்பின் பேசுகையிலே, சோகம் நம்மை ஆட்கொள்கிறது. கணவனும், மகளும் பிரிந்த துயரத்தில் வீட்டின் மூலையிலே அடைந்துகிடந்த அவரை, தோட்டக்கலை அதிகாரிகளும், உறவுக்காரர்களும் ஊக்கம் தந்து மீண்டு வருவதற்கு தேனீ வளர்ப்பினை மீண்டும் முயற்சிக்க வலியுறுத்தியுள்ளனர். மற்றவர்களின் வாழ்க்கையில் முன்னேற வழிவகுத்து கொடுப்பதுடன், அழிந்து வரும் தேனீக்களை காக்க களமிறங்கியுள்ளார்.

10 லட்ச ரூபாய் வங்கியில் லோன் பெற்று 1000 தேனீ பெட்டிகளுடன் “விபிஸ் இயற்கை தேனீ பண்ணையை” அமைத்துள்ளார். சிவகங்கை கண்மாய்களில் வளர்ந்துகிடந்த நாவல் மரங்களுக்கு மத்தியில் பெட்டியினை வைத்து, நாவல்தேனை சேகரித்துள்ளார். கசப்பும், இனிப்புமாய் இருந்த நாவல் தேன் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது என்று ஆய்வுகள் கூறியதால், நாவல்தேன் விற்பனை நன்கு நடந்துள்ளது. அதிலிருந்து வேம்புத்தேன், காப்பித்தேன், நாவல்தேன், முருங்கைத்தேன் என பத்துவிதமான தனிமலர்த் தேனை உற்பத்தி செய்துள்ளார். அதாவது, 2 கி.மீ பரப்புக்கு முருங்கை மரங்கள் வளர்ந்து கிடந்தால், அவ்விடத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் இருந்து சுத்த முருங்கைத்தேனை பெறலாம்.

“விறுவிறுக்க சுறுசுறுப்பாய் தேனீக்கள் வேலை செய்து, தேனை சேகரித்தாலும் நாம் அதை அலுங்காமல், குலுங்காமல் அரைமணி நேரத்தில் சேகரித்துவிடலாம். அதிக நேரம் செலவு செய்யத் தேவையில்லை. பெரும் இடம் தேவையில்லை. முதலீடும் அதிகம் தேவையில்லை.”

ஜோஸ்பின் 7,000 தேனீ பெட்டியிலிருந்து மாதம் 5,000 கிலோ முதல் 7,000 வரை தேன்களை சேகரித்து வருகிறார். இன்று அவருடைய விபிஸ் இயற்கை தேனீ பண்ணையில் 50 பேர் பணிபுரிகின்றனர்.

ஆனால், தேன் உற்பத்தியில் சிறந்து விளங்கினாலும், அவற்றை சந்தைப்படுத்துதலில் சவால்களை சந்தித்துள்ளார் அவர். கடைகளில் பல பிராண்ட் தேன்களை சுட்டிக்காட்டி, விபிஸ் தேனை நிராகரித்துள்ளனர். அதற்காகவே, துளசித்தேன், பூண்டுத்தேன், மாம்பழம் தேன், நெல்லிக்கனி தேன், அத்திப்பழ தேன், பலாப்பழத்தேன் என மதிப்புக்கூட்டிய 25 வகையான தேன்களாவும் மாற்றத் தொடங்கி விற்பனையை அதிகரித்துள்ளார்.

தேன் மட்டுமின்றி, தேனீக்கள் பூக்களில் இருந்து சேகரித்து கால்களில் ஏந்திவரும் மகரந்தத்தை பிரித்தெடுத்து, விற்பனை செய்கிறார். ராணித் தேனீயின் உணவுக்காக வேலைக்காரத் தேனீக்கள் உற்பத்தி செய்யும் ராயல் ஜெல்லை சேகரித்து 10கிராம் 1000 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார். ஒரு கிலோ ராயல் ஜெல்லின் விலை ஒரு லட்ச ரூபாயாம். தவிர, தேன் மெழுகு ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்கிறார்.

விற்பனை ஒரு புறம் இருக்க, அழிந்து வரும் தேனீக்களை காக்க, “வீட்டுக்கொரு தேனீ பெட்டி, வீட்டுக்கு ஆயுள் கெட்டி” என்ற கோஷத்தை முன்னுறுத்தி ‘பழுப்பு புரட்சி’யை செய்து வருகிறார் ஜோஸ்பின். தேனீ வளர்ப்பு குறித்து இரு புத்தகங்களும் வெளியிட்டிருக்கிறார். மூன்றாவது புத்தகம் விரைவில் வெளிவரவிருக்கிறது.

மலருக்கும் மலருக்கும் மணமுடிக்கும் வேலையைத் தான் தேனீக்கள் செய்கின்றன. தேனீக்கள் மூலம் நடக்கும் அயல்மகரந்தச் சேர்க்கையினால், விளைச்சல் அதிகரிக்கும். எங்க வீட்டில் தேனீ பெட்டி இருப்பதால், அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ள முருங்கை மரம், எலுமிச்சை மரங்களில் காய்கள் அதிகம் கிடைக்கிறது. விவசாயிகளும் இதை உணர்ந்து தேனீ பெட்டிகளை வாங்கிச் செல்கின்றனர்.

தேனீக்கள் பூக்களில் இருந்து மட்டுமில்லை, கனிகளிலிருந்தும் தேன் எடுக்கும். அயல்நாடுகளில் ஆப்பிள் தேன், ஆரஞ்சு தேன் என பழத்தேன்கள் விற்பனை செய்கின்றனர். வீட்டு பயன்பாட்டுக்காக சப்போட்டா, வாழைப்பழத்தேன்களை தயாரித்துக் கொள்கிறேன். பழத்தோட்டங்கள் வைத்திருக்கும் விவசாயிகள் தேனீ பெட்டி வைத்து பயன் பெற்றுவருகின்றனர். இவர் 8000 தேனீ வளர்ப்பாளர்களை உருவாக்கியுள்ளார்.

அவரது வீட்டிலே மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் இலவசப் பயிற்சியும் வழங்குகிறார். தேனீ வளர்க்க விரும்புபவர்களுக்கு, ஸ்டாண்டு, தேன் எடுக்கும் மெஷின், பெட்டி, பிரேம் என எல்லா உபகரணங்களையும் தயாரித்து விற்பனை செய்கிறார். தேனீ வளர்ப்பில் ஜோஸ்பினின் பங்களிப்பை பாராட்டி, இதுவரை 6 தேசிய விருதுகளும், 36 மாநில விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. ‘இந்திய அளவில் சிறந்த பெண் தேனீ வளர்ப்பாளர்’ என்று விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.

ஜோஸ்பினுக்கு ஆனந்தம் எல்லாம் விலை மதிப்பானது என்ற முத்திரையில் உள்ள தேன், 5 ரூபாய், 10ரூபாய்க்கும் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் சந்தைப்படுத்தவேண்டும் என்பதே. அதற்கான சிறு பங்காய், மிஷினரி மூலம் தேன் எடுக்கும் சாதனங்களை பொருத்திய கம்பெனியை 2கோடி ரூபாய் செலவில் கட்டமைத்துக் கொண்டிருக்கிறார்.

Courtesy:- http://yourstory.com

You might also like

Leave A Reply

Your email address will not be published.