பார்ப்பனீய இந்துத்துவா நோக்கம் வேறுபட்ட பண்பாடுகளை மறுப்பது ஒற்றைப் பண்பாட்டை திணித்து நம்ப வைக்க நினைப்பது வேடிக்கையே..!

0 532

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி முடிவுகள் தமிழர் நாகரீகம் கிமு3000 என்கிறது ! ஆய்வுகள் தொடர வேண்டும்!

தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் என காமராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார். இந்த பொதுநல வழக்கில், ஆதிச்சநல்லூரில் எடுக்கப்பட்ட பொருட்கள் artefacts குறித்து விளக்கும்படி மதுரை ஹைகோர்ட் கிளை மத்திய தொல்லியல் துறைக்கு இது தொடர்பான ஆணையை பிறப்பித்து இருந்தது.

இன்று பதில் அளித்த மத்திய தொல்லியல் துறையானது, Carbon dating / கார்பன் பரிசோதனைக்காக புளோரிடாவிற்கு அனுப்பப்பட்டு கிடைத்த பதிலாக, ‘ ஒரு தொல்பொருள் கி.மு 905 எனவும், மற்றொரு பொருள் கி.மு 971 ம் ஆண்டு வரை பழமையானது’ என அறிக்கை தந்துள்ளது.

தமிழர் நாகரிகம் 3000 ஆண்டுகளுக்கு முன்வரை செல்கிறது என்ற மகிழ்ச்சி இருப்பினும் …
2005 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளை நீதிமன்றத்தின் வாயிலாக தான், தமிழ் கூறும் நல்லுலகம் பெற முடிந்துள்ளது என்பதையும் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

சங்ககாலத்திற்கு முந்தைய நாகரீகம் !

ஆதிச்சநல்லூர் வட்டாரத்தில் 1876 முதல் பலகட்ட ஆய்வு நடைபெறுகிறது. 1904 மற்றும் 1914 ஆய்வுகள் வரலாற்று உலகத்தை ஆதிச்சநல்லூர் நோக்கி திரும்பி பார்க்க வைத்தன.

116 ஏக்கர் நிலப்பரப்பில் தாழிக்காடு கண்டு பிடிக்கப்பட்டது; பெருங் கற்கால சின்னங்களான, நூற்றுக்கணக்கான தாழிகள் கண்டறியப்பட்டது. இவை 3 அடி உயரமுள்ள கருப்பு சிவப்பு மண் பாண்டங்கள் BRW ஆகும்.

இறந்த மனிதர்களுடன் புதைக்கப்பட்டிருந்த பொருட்களாக கிடைத்த 90 வகையான இரும்பு பொருட்கள், கருவிகள், வெண்கல பொருட்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் அங்கு வாழ்ந்த மக்களின் நாகரீகம், பண்பாடு பற்றிய ஆச்சரியத்தை உருவாக்கின.

1400° C வரை சூடேற்றும் தொழில்நுட்பம் கொண்டு, உருவாக்கப்பட்ட நன்கு வளையக்கூடிய வெண்கலப் பொருட்கள் பற்றி ஆய்வாளர் சாரதா சீனிவாசன் வியந்து எழுதியிருக்கிறார்.

இரும்பு பயன்பாடு தமிழரை உலகம் முழுவதும் பறைசாற்றுகிறது !

3000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்களிடம் நிலவியிருந்த இரும்பின் பயன்பாடு தமிழர் நாகரீகத்தை உலக வரலாற்றின் முக்கிய இடத்தில் நிறுத்துகிறது.

வரலாற்று ஆய்வாளர்கள் அனைவரும் பொதுவாக ஏற்றுக் கொள்ளும் இரும்பு பயன்பாடு கி.மு. 1400 ஹிட்டைட் (துருக்கி) களிடம் காணப்பட்டது ; நாகரிகத்தில் ஓங்கியிருந்த கிரேக்கத்திலும் கி.மு.1000 ல் தான் இரும்பு கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.

எகிப்தில் கி.மு. 700 லும், அய்ரோப்பாவின் பகுதிகளில் கி.மு. 500 லும் தான் இரும்பு கண்டு பிடிக்கப்பட்டு இருந்தது. சிரியாவில், டமஸ்கஸில் தயாரிக்கப்பட்ட உருக்கு இரும்பு பொருட்களுக்கான இரும்பு மணிகள், தென்னிந்தியாவில் இருந்து தான் சென்றன, என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தமிழர் தொன்மையை விரும்பாத ஆர்எஸ்எஸ் பேர்வழிகள் தான், மாலன் நாராயணன் போன்ற மேதாவிகள் தான், ஆரியரிடமிருந்து தான்/ அதாவது இந்தோ அய்ரோப்பிய சமூகத்திடமிருந்து தான், தமிழர் அறிவை பெற்றதாகவும், தமிழ் நாட்டு இரும்பு தரம் தாழ்ந்ததாகவே இருந்ததாகவும் இப்போதும் தொடர்ந்து உளறுகின்றனர்.

ஏற்கனவே, ஆதிச்சநல்லூர் அருகிலுள்ள கொற்கையில் கிடைத்த பொருட்கள் மீது கார்பன் பரிசோதனை வழியாக மேற்கொள்ளப் பட்ட ஆய்வு முடிவுகள் கி.மு. 800 என தெளிவாக தெரிவித்திருந்தது.

ஆழமான ஆய்வு தொடர வேண்டும் !

ஆட்சியதிகாரத்தில் உள்ள, பார்ப்பனீய – இந்துத்துவா சக்திகள் கடந்த 14 ஆண்டு காலமாக, இந்த ஆதிச்சநல்லூர் ஆய்வு முடிவுகளை நிறுத்தி வைத்தது ஏன்?

கீழடி ஆய்வுகளை ஊற்றி மூட முயற்சி செய்வது ஏன்?

மேலும் எழும் கேள்விகள் ? ————————————————

1) ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த மண்டையோடுகள் காலம் கி.மு. 1750 வரை கொண்டு செல்லப்பட்டது. சில பொருட்கள் வாயிலாக, தற்போதைய காலம் கி.மு. சுமார் 1000 வரை தான் சொல்லப்படுகிறது ! இங்கு ஆய்வு ஆழமாக செல்ல வேண்டியிருக்கிறது.

2) 2005 ம் ஆண்டில் ஆய்வுகளை மேற்கொண்ட தொல்லியல் துறை தலைவர் சத்தியமூர்த்தி அவர்கள் “ஆதிச்சநல்லூர் பகுதி நாகரீகம் கி.மு. 1400 வரை செல்லும் ” எனத் தெரிவித்து இருந்தார். அவரது ஆய்வு உதவியை தமிழக அரசு பெறவேண்டும்.

வரலாற்று ஆய்வாளர்கள் தமிழ் ஆர்வலர்கள் கவனத்திற்கு !

1) உணர்ச்சி வசப்பட்டு, சிந்துவெளி நாகரீகத்துடன், இதை தொடர்புபடுத்த விரும்புவதை தவிர்க்க வேண்டும். ஆதிச்சநல்லூர் நாகரீகம் முதுமக்கள் தாழிகள் நிறைந்த சமூகமாகும். சிந்துவெளி நாகரிகத்தில் அவை இல்லை என்பதிலிருந்து துவங்கி வேறுபாடுகளை அணுக வேண்டும்.

2) சங்க கால இலக்கியங்களில் ஆதிச்சநல்லூர் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை ; திட்டவட்டமாக ஒரு செழிப்பான தமிழர் பண்பாடு – வரலாறு தென் தமிழகத்தில் இருந்திருக்கிறது. அய்ரோப்பியர்களுக்கு எல்லாம் முன்னோடியாக, நமது தமிழ் சமூகம் இரும்பு மற்றும் தொழில்நுட்பத்தில், வணிகத்தில், பண்பாட்டில் உயர்ந்து இருந்திருக்கிறது.

பார்ப்பனீய இந்துத்துவா நோக்கம் வேறுபட்ட பண்பாடுகளை மறுப்பது ஒற்றைப் பண்பாட்டை திணிப்பது ஆகும்.
ஆதிச்சநல்லூர் கீழடி ஆய்வுகள் தொடர ஒரு இயக்கம் உருவாக வேண்டும்!

தமிழர் தொன்மை கண்டறியப்பட வேண்டும் !

Chandra Mohan

You might also like

Leave A Reply

Your email address will not be published.