இந்த உலகம் சுழல்வதை நிறுத்தி கொண்டால் என்ன நடக்கும் ? சின்ன உவமை ஆனால் ஆச்சரியம்

0 379

Qura பகிர்வு
உலகம் சுழல்வதை நிறுத்தினால் என்னவாகும் என்று சிந்திக்கும் முன்னர், உலகம் சுழல்வதால் என்ன ஆகிறது என்று சிந்திப்போம்:

மையநோக்கு விசை / மையவிலக்கு விசை:

(Centripetal force / Centrifugal force:)

வட்டப்பாதையில் பயணிக்கும் ஒரு பொருளின் மீது (அவ்வட்டத்தின்) மையத்தை நோக்கிய ஒரு விசை செயல்படும். இதனை மையநோக்குவிசை என்பர். இதன் மதிப்பு அப்பொருளின் நிறைக்கும் (mm), கோண விரைவின் சதுரத்திற்கும் (w2w2), பொருளுக்கும் மையத்திற்குமான தொலைவிற்கு (வட்டத்தின் ஆரம், rr) நேர்விகிதத்தில் இருக்கும்:

Fcentripetal=mw2r

இதே, நாம் அந்தப் பொருளின் நிலையிலிருந்து பார்த்தால் மையத்திலிருந்து எதிர்நோக்கியதாக ஒரு விசை இருப்பதாய்த் தோன்றும்,இதனை மையவிலக்கு விசைஎன்பர்.

உலகம் சுழல்கிறது, அதன் மீது இருக்கும் நாமும் அதனோடு சுழல்கிறோம், எனவே நம்மீது ஒரு மையவிலக்கு விசை செயல்படுகிறது.

புவியீர்ப்பு விசை உலகின் மையத்தை நோக்கி நம்மை இழுக்கிறது, எனவே உலகின் சுழற்சியால் ஏற்படும் இந்த மைய விலக்கு விசை புவியீர்ப்பு விசைக்கு எதிராக செயல்படுகிறது.

ஆனால்,

உலகின் எந்தப் பகுதியில் நாம் இருந்தாலும் புவியீர்ப்பு விசை நம்மை உலகின் மையத்தை நோக்கியே இழுக்கும்.

மையவிலக்கு விசை அப்படியல்ல, அது நமது சுழற்சியின் மையத்திற்கு எதிர்திசையிலேயே நம்மை தள்ளுகிறது. (காண்க படம்)

இதனால் துருவத்தில் (pole) இருக்கையில் நம்மீது மையவிலக்குவிசை செயல்படாது. நிலநடுக்கோட்டில் (equator) இருக்கையில் உச்சவளவிலான மையவிலக்குவிசை செயல்படும். (மையவிலக்குவிசை ஆரத்திற்கு நேர்விகிதத்தில் இருப்பதால்!)

உலகம் கச்சிதமான கோளம் அல்ல, அது துருவங்களில் சற்றே தட்டையான கோளம், இதனால் பொதுவாகவே துருவப் பகுதியில் நிலநடுக்கோட்டைவிட ஈர்ப்புவிசை அதிகம், உலகின் சுழற்சியால் ஏற்படும் மையவிலக்குவிசையின் தாக்கமும் இணைகையில் துருவங்களில் அதிக ஈர்ப்புவிசையும் நிலநடுக்கோட்டில் குறைந்த ஈர்ப்புவிசையும் செயல்படுகிறது.

உலகின் சுழற்சி நின்றுவிட்டால் இந்த மையவிலக்கு விசை இருக்காது, எனவே புவியீர்ப்பு விசையின் தாக்கம் புவியின் வடிவத்தால் மட்டுமே இருக்கும்.

தற்போது வேகமாக சுழன்றுகொண்டிருக்கும் உலகம் சட்டென நின்றுவிட்டால் நாம் அனைவரும் நிலப்பரப்பைவிட்டுத் தூக்கி எறியப்படுவோம் (காரணம் நியூட்டனின் முதல் விதி, உலகம் நின்றுவிடும் நாம் சுழன்ற பாதையின் தொடர்ச்சியான ஒரு நேர்க்கோட்டில் பயணிப்போம்!)

அதே போல உலகைச் சூழ்ந்துள்ள வளிமண்டலமும் மாறுபடும். இதனால் தட்பவெட்ப நிலைகள் மாறும்.

கடல் நீர் துருவங்களை நோக்கிச் செல்லும் (காரணம் அங்குதான் புவியீர்ப்பு அதிகம்), ஞாயிறின் ஒளி சமமாகக் கிடைக்காமல் உலகின் பல்வேறு பகுதிகள் பாதிப்படையும்.

மேலும், உலகம் என்பது முழுக்க திண்மம் அன்று. அதன் மேற்பரப்பு மட்டுமே திண்மம், உள்ளே இருக்கும் பகுதிகள் திரவ நிலையில்தான் இருக்கும், எனவே அவை தொடர்ந்து சுழலும், இதனால் உலகின் காந்தப் புலம் மாறுதலுக்கு உட்படும், அதனாலும் நமக்குப் பாதிப்பு ஏற்படும்.

எனவே, உலகம் சுழல்வதை நிறுத்திவிடக்கூடாது என்று வேண்டிக்கொள்வோம்.

பதில்: விசயநரசிம்மன் கார்த்திகேயன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.