காணிக்காரர் என்போர் தமிழக, கேரள மாநிலங்களின் தென்கோடியில் வாழும் பழங்குடி மக்கள். இவர்கள் தமிழகத்தில்

0 798

காணிக்காரர் – பழங்குடி மக்கள்.
எழுத்து : கௌதம சித்தார்த்தன்

காணிக்காரர் என்போர் தமிழக, கேரள மாநிலங்களின் தென்கோடியில் வாழும் பழங்குடி மக்கள். இவர்கள் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் காணப் படுகின்றனர்.

இம்மக்கள் காணி, கணியன், காணிக்கர், வேலன்மார், மலையரசன் முதலிய பல்வேறு பெயர்களால் அழைக்கப் படுகின்றனர். காணிக்காரன் என்பதன் பொருள் நிலத்துக்குச் சொந்தக்காரன் என்பதாகும்.

இவர்கள் பேசும் மொழி காணிக்காரர் மொழி எனப்படுகிறது. இம்மொழி மலையாளத்தையும் தமிழையும் ஒத்திருக்கும்.அது தொல் தமிழ் என்பதே பொருத்தமானது.

கணிக்கர், கணிக்கன், கணிகாரன், கண்ணிக்காரன், மலம்பாசி, ஆகிய “கன்னித்தமிழ்” போன்ற பெயர்களாலும் இம்மொழி குறிப்பிடப்படுவதுண்டு.

இவ்வின மக்கள் குட்டையான உருவமும் சுருண்ட மயிரும் கருந்த நிறமும் கொண்டவர்கள். பச்சை குத்திக் கொள்ளுதலும் கடுக்கன் அணிந்து கொள்ளுதலும் இவர்தம் பழக்கங்களில் குறிப்பிடத் தகுந்தன. இவர்கள் தாங்கள் வாழுமிடத்தை காணிக்குடி என அழைப்பர்.

காணிக்காரர் என்னும் பழங்குடிமக்களின் இறப்புச்சடங்கு முறையில் வேர்கொள்ளும் சூழலியல் –

நடுகல் நட்டு வழிபடும் முறை காணிக்காரர்களிடம் உயிரோட்டமாக மாறுகிறது.

காணிக்காரர் இறந்து விட்டால், அவர்களுக்கு நடுகல் நடும் முறை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நடுகல்லுக்குப் பதிலாக ஒருமரச்செடியை நட்டு ஆராதித்து பேணிப் பாதுகாத்து வருவார்கள். வனத்தை, மரங்களை தனது முன்னோராக எண்ணி வழிபட்டு வரும் பழங்குடி மக்களை காட்டை அழிப்பதாகச் சொல்லி, மரங்களை வெட்டுவதாகச் சொல்லி வெளியேற்றம் செய்வதென்பது எவ்வளவு பெரிய வேடிக்கை.

மனிதன் காலங்காலமாக குகைகளிலும், விலங்குகளோடும் இடையறா நட்பு கொண்டிருந்தான் என்பதற்கு சங்ககாலத்திலிருந்து நவீன காலங்கள் வரை பல்வேறு ஆதாரங்கள் உண்டு.

மலையும் மலைசார்ந்த நிலமுமான குறிஞ்சியிலும், வனமும் வனம் சார்ந்த நிலமுமான முல்லையிலும், பாலையிலும் பழங்குடி மக்களின் வாழ்வியல் பண்பாடு குறித்து எடுத்துரைக்கின்றன.

திருவள்ளுவர் வேட்டுவர்களைப் பற்றியும், ஆயர் பற்றித் தொல்காப்பியத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிஞ்சி நிலக்கிழவன், முல்லை நிலக் கோவலர், கானக்குறவர், எயினர், எபினி, எயிற்றியர், கோவினத்து ஆயர், புல்லினத்து ஆயர், ஆயர், ஆவியர், ஆய்மகன், ஆய்மகள், புலையர், இடையர், இடைமகன், இடை மகள், கானக்குறவர், சிறுகுடிகுறவன், கோவலர், கோவலர்குடி, கோசர், கோயன், கோயமான், வேட்டுவர், வேடர், காணிக்காரர், மழவர் என பல்வேறு பெயர்களில் சங்க இலக்கியங்கள் பழங்குடி மக்கள் பற்றியும் கூறுகின்றன.

தொல்காப்பியம், திருக்குறள், நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பொருணராற்றுப்படை, திருமுருகாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, முல்லைப்பாட்டு போன்ற பல செவ்வியல் இலக்கியங்களிலும் இவர்களது வாழ்வும் பண்பாடும் பேசப்படுகிறது.

சமீபத்தில்

மனிதர்கள் இருந்தால் வனவிலங்குகள் அழிந்து போய்விடும் என்று பழங்குடிகளைத் தனது மண்ணைவிட்டு எழுப்பும் முகமாக தமிழக அரசு ஒரு அரசாணையை அமல் படுத்தியிருக்கிறது. அவன் பன்னெடுங் காலமாக வாழ்ந்து வந்த வாழ்வியல் போக்கில் எந்த விலங்குகளும் அழிந்து போகவில்லை. எந்தப் பறவைகளும் அழிபடவில்லை. மாறாக, விலங்குகளுடனும், பறவைகளுடனும், மரங்களுடனும் நெருங்கிய வாழ்வியல் உறவுகளை வைத்திருக்கிறான்.

வனப்பகுதிகளை ‘வனவிலங்குகள் காப்பகம்’ என்ற புதிய கருத்துப் போர்வையில் இதுபோன்ற வனக் குடிமக்களை அவர்களது மண்ணிலிருந்து வெளியேற்றம் செய்யச் சொல்கிறது.

இவர்களுக்கு நடக்கும் இந்த அநியாயத்தை மௌனமாக நாம் கடந்து போவதுதான் வேடிக்கை..!

பகிர்ந்து பலருக்கும் தெரியபடுத்தி குரல் கொடு தமிழா

You might also like

Leave A Reply

Your email address will not be published.