விமானத்தில் பறந்த 120 முதியவர்கள்! – ஒரு தனி மனிதனின் கனவு நிறைவேறிய உண்மை சம்பவம்

0 245

தன்னுடைய கிராமத்தில் வசிக்கும் முதியவர்களை விமானத்தில் ஏற்றி ரசிக்க வேண்டும்’ என்ற ஒரு தனி மனிதனின் நீண்டநாள் கனவு இன்று நிறைவேறியிருக்கிறது

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ளது தேவராயன்பாளையம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர், பின்னலாடை மொத்த வியாபாரத் தொழில் செய்துவருகிறார்.

இவர், தன்னுடைய கிராமத்தில் வசிக்கும் வசதியற்ற குடும்பங்களைச் சேர்ந்த முதியவர்களை விமானத்தில் ஏற்றி பயணம் செய்யவைத்து ரசிக்க வேண்டும் என விரும்பியிருக்கிறார்.

அதற்காக, தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் சிலரின் உதவியோடு, தன் கிராமத்தைச் சேர்ந்த 120 முதியவர்களை இன்றைய தினம் கோவை – சென்னை விமானத்தில் பறக்கவைத்து நெகிழ்ச்சியடையவைத்துள்ளார்.

இன்று காலை, 120 முதியவர்களையும் வேன்மூலம் கோவை விமானநிலையத்துக்கு அழைத்துச்சென்ற ரவிக்குமார், அங்கிருந்து 2 குழுக்களாக அவர்களை விமானத்தில் ஏற்றி, சென்னைக்கு அழைத்துச்சென்றிருக்கிறார். பின்னர், அங்கிருந்து வேன்மூலம் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு, நாளை மறுநாள் தேவராயன்பாளையத்துக்கு திரும்ப இருக்கிறார்கள்.

இதுபற்றி நம்மிடம் பேசிய ரவிக்குமார், “நான் தொழில் நிமித்தமாக முதல்முறை விமானத்தில் பயணித்தபோது, எனக்கு உண்டான ஆசை இது. வாழ்நாள் முழுக்க எங்களின் கிராமத்திலேயே இருந்து, ஆகாயத்தில் பறக்கும் விமானங்களை அண்ணாந்து மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த மனிதர்களை ஒரு நாளாவது விமானத்தில் ஏற்றி அழகுபார்க்க வேண்டும் என விரும்பினேன்.

கடந்த 5 ஆண்டுகளாக இதைப்பற்றியே யோசித்துவந்தேன். ஆனால், அந்தக் கனவு தற்போதுதான் நிறைவேறியிருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னரே விமானத்தில் பயணிக்க விரும்பும் எங்கள் ஊர் முதியவர்களின் பட்டியலைத் தயாரித்தேன். என்னுடைய நண்பர்கள் அதற்கு முழுமையாக உதவினார்கள். பின்னர், 2 மாதங்களுக்கு முன் அனைவருக்கும் கோவை – சென்னை விமானத்துக்கான டிக்கெட்டுகளை புக் செய்தேன்.

இன்று, அவர்களை எல்லாம் விமானத்தில் ஏற்றி இருக்கைகளில் அமரவைத்தபோது எனக்கு ஏற்பட்ட சந்தோஷம், அத்தனை பெரியது. இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தேன். விமானத்தில் ஏறி அமர்ந்து சென்னை சென்றடையும் வரை அனைவருமே குழந்தைகளாகிப் போனோம்.

இனி, மெரினாவில் உள்ள தலைவர்கள் சமாதி மற்றும் காஞ்சிபுரம், திருவண்ணாமலை கோயில்களுக்கு எல்லாம் சென்று தரிசனம் செய்யவிருக்கிறோம். எங்களது கிராமத்தில் இந்து – முஸ்லிம்கள் எல்லாம் தாயாய் பிள்ளையாய் சகோதர பாசத்துடன் பழகிவருகிறோம். இந்த விமானப் பயணத்திலும் சில இஸ்லாமிய, கிறிஸ்தவ தாத்தா – பாட்டிகள் வந்துள்ளனர். அவர்களது விருப்பப்படி பிரபலமான மசூதிகளுக்கும், சர்ச்களுக்கும் அழைத்துச்சென்று பார்த்துவிட்டு, பிறகு ஊருக்குக் கிளம்ப இருக்கிறோம்’’ என்றார்.

”வசதி வாய்ப்புகள் வந்தவுடன் தன் தாய் தகப்பனை விமானத்தில் ஏற்றிப் பறக் வைக்க வேண்டும் என பல இளைஞர்கள் கனவு காண்பது உண்டு. ஆனால், ரவிக்குமார் நிறைவேற்றியிருப்பது அதனினும் பெரிது” என்றார்கள்

முகநூல் பகிர்வு

You might also like

Leave A Reply

Your email address will not be published.