பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்ற வரிகளின் மூலமாக பையோ-டைவர்சிட்டியை முதன் முதலாக உலகிற்கு பிரகடனபடுத்திய வள்ளுவனின் வழித் தோன்றல்களா நாம்..?

0 556

சின்னத்தம்பி- ஒரு விடுதலை வீரன்

யானைக்கு மதம் பிடித்தக் காலம் மலையேறிவிட்டது. இன்றைய சூழலில், மனிதர்களுக்குதான் மதம் பிடித்துவிட்டது எனலாம். அதனை நிரூபித்துவிட்டது ‘சின்னத்தம்பி’ யானையின்மீது கடந்த வாரம் தொடுக்கப்பட்ட மனிதர்களின் போர். அந்த போரில் வென்றவனின் கதை இது.

ஒருவரை ஒருவர் அடித்து திண்பதையே வாழ்வியல் முறையாக வகுத்துக்கொண்ட உலகமயமாதல் உலகில் பிறந்ததால்தானோ என்னவோ, மனிதர்கள் எந்த உயிரினம் துன்பட்டாலும், அழிந்தாலும் எளிதாக கடந்துச் செல்லப் பழகிவிட்டனர். கேட்டால் ‘அதுதானே வாழ்க்கை.. நாடு வளரும் போது.. அப்படி இப்படிதான இருக்கும்’ என்பதுதான் அவர்களின் பதில்.

உரிமைகளைக் கேட்பதற்கு கூட உரிமையற்று கிடந்த, கருப்பின மக்களின் மீதுகூட கருணைகாட்ட தொடங்கிய உலக நாடுகள், வனக்காடுகளின் அழிவையும், வன விலங்குகளின் அழிவையும் மட்டும் பொருளியல் வளர்ச்சியின் பக்கவிளைவாக கருதிக் கடந்துச் செல்கிறது என்பதே நிதர்சனம். வாயற்ற அடிமைகளுக்கு உலகம் முழுவதும் வெடித்த உரிமைக் குரல்களைப் போல பன்மடங்கு சத்தமாக வனவிலங்கு மீட்சிக்காக குரல்கள் எழும்ப வேண்டிய நேரமிது.

மனிதன் பிற உயிரினங்களைச் சார்ந்து வாழத் தேவையில்லாது போயிருந்தால், அவன் படைக்கப்படும்போதே இந்த பூமியில் தனி ஒருவனாய் படைக்கப்பட்டு இருப்பானே! யார் தவறு செய்தாலும், பேராற்றலும், பேரறிவும் கொண்ட பிரபஞ்சமும் இயற்கையும் ஒருபோதும் தவறு செய்யாது. பூமியில் மனிதன் 80 பில்லியன் கோடி உயிரினங்களோடு சேர்ந்தே படைக்கப்பட்டதன் நோக்கம் என்னவாக இருக்கும்?
இவ்வுலகம் மனிதனுக்கானது மட்டுமல்ல, அனைத்து உயிர்களுக்குமானதே.. என்பதே அதன் அர்த்தம்.

சின்னத்தம்பி தன் தாய் நிலத்தை தேடி பயணிப்பது என்பது அடிப்படை உயிரினத் தேடல். அதுவொரு ஆன்மத் தேடல். அதனைகூட புரிந்து கொள்ள முடியாத சூழலில் பகுத்தறிவை வைத்துக் கொண்டு மரமண்டை மனிதர்கள் அடுத்து என்னச் செய்ய போகின்றனர்?

மயக்க மருந்து குடுத்தும், பல மையில் தொலை இடம்பெயர்ந்து அடர்காட்டு வழியே விடப்பட்டும் மீண்டும் தன்னின உறவுகளைச் சந்திக்க உணவு கூட அருந்தாமல் ஓடிவரும் சின்னத்தம்பியை விலங்கு என்றும்..

இறந்து போன தன் குட்டிக் குரங்கை மடியில் ஏந்தி பயணிக்கும் தாய்குரங்கை விலங்கு என்றும்.. சொல்லும் மனிதன்..

மதச்சண்டையிலும் இனச் சண்டையிலும் சாதிச் சண்டையிலும் படுகொலைகளில் ஈடுபட்டு சாவதென்பது, மனிதன் பெற்ற ஆறு அறிவின் அடையாளமா?

‘எத்தனைப் பெரிய மனிதனுக்கு எத்தனைச் சிறிய மனமிருக்கு..
எத்தனைச் சிறியப் பறவைக்கு
எத்தனைப் பெரிய அறிவிருக்கு’

கவிஞர் வாலி அவர்களின் இந்த வரிகள் எழுதப்பட்டு இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், உயிர்போடு இருப்பதையே இன்று நம் கண்முன்னே காண்கின்றோம். சின்னத்தம்பியின் வாழ்விட உரிமையைப் பறித்த தமிழக வனத்துறை அதிகாரிகளின் செயல்களுக்கும், சின்னத்தம்பி கும்கி யானையாக மாற்றப்படும் என்று சொன்ன திண்டுக்கல் சீனிவாசனுக்கும் இப்பாடல் வரிகள் சாலப் பொருந்தும்.

யாரைக் கேட்டு, எதன் அடிப்படையில் சின்னத்தம்பி கும்கியாக மாற்றப்படும் என்று அறிவித்தீர்கள் அமைச்சரே..
அடிமையாக விலைக்கு வாங்கப்பட்ட கருப்பினத்தவர்களில் உடல் வலிமை உள்ளவர்களை மல்யுத்த சண்டையில் ஈடுபடுத்தி, அவர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு செத்ததை ரசித்தவன் எவ்வளவு கொடூரமான மிருகமோ அதற்கு இணையான மிருகமா இன்று இந்த அரசு மாறி நிற்கின்றது. சின்னத்தம்பி என்ன நீங்கள் விலை கொடுத்து வாங்கிய அடிமையா?

‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்ற வரிகளின் மூலமாக பையோ-டைவர்சிட்டியை முதன் முதலாக உலகிற்கு பிரகடனபடுத்திய வள்ளுவனின் வழித் தோன்றல்களா நாம்? திண்டுக்கல் சீனிவாசனைவிட ஆகச்சிறந்த அறிவாளி சின்னத்தம்பி யானை என்பதை யார் அறிவர்?

உணவிற்காகத்தான் தடாகம் பகுதியில் சின்னத்தம்பி வயல்களை நாசப்படுத்தினான் என்பது அவன் மீதான குற்றச்சாட்டு எனில், டாப்சிலிங் வனத்தில் விடப்பட்டதில் தொடங்கி, உடுமலைப்பேட்டை வரை 100 கிலோமீட்டர் வரை, அவன் எந்த உணவையும் எடுத்துக் கொள்ளாமல் மூன்று நாள்களாக தொடர்ந்து ஓடிவந்தக் காரணம் என்ன?

இந்த நெடும் பயணத்தின் ஊடக, அவன் இந்த மானுடச் சமூகத்திற்கு என்ன சொல்ல விரும்புகிறான் என்று சற்று யோசியுங்கள் மாமனிதர்களே..

உணவிற்காக அவன் வயல்களை நாசப்படுத்தவில்லை. அப்படி உணவிற்காக அவன் அலைபவன் என்றால் ஏன் இந்த 100 கி.மீட்டரிலும் அவன் உணவு உட்கொள்ளவில்லை? அகிம்சாவழியாக நாடு அடைந்த இந்தியர்களே உங்கள் ஒவ்வொருவர் மீதும் அதே அகிம்சா வழியாக காறி உமிழ்கின்றான் சின்னத்தம்பி…

அவன் இதுநாள் வரை கோவை தடாகத்தில் கேட்டது உணவு பிச்சை அல்ல. அவன் போராடியதும், போராடிக் கொண்டும் இருப்பதும் அவனது தாய் நிலத்தின் மீட்சிக்காகத் தான்..

ஆம்.. சின்னத்தம்பி ஒரு விடுதலை வீரன்..
தன் தாய் நாடு அடையப் போராடும் களவீரன்..
இப்பூவுலகம் பார்க்கும் முதல் விலங்கின விடுதலை வீரன்..

#விடுதலை_செய்
#சின்னத்தம்பியை_விடுதலை_செய்

-பேராசிரியர் ஆ.அருளினியன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.