என்ன செய்வது,? எங்கள் ஆட்களும் உங்களிடம்தானே, ‘தொகுதி சீட்டு’ கேட்டு வரிசையில் நின்றுகொண்டிருக்கிறார்கள்..!

0 578

எங்கே இருக்கிறீர்கள் எனக்கு இன்னும் அதிர்ச்சியாகவே உள்ளது.

அந்த அம்மா தனமணி வெங்கிட் நாயுடு அவர்கள் பேசி ஒரு வாரம் ஆகப்போகிறது. ஒரு முற்போக்குவாதியோ- பிற்போக்குவாதியோ- சைடு வாதியோ, யாரும் வாய் திறக்கவில்லை.

நான் பெரிதும் மதிக்கும், சாதியை எதிர்க்கும், பெரியாரை- அவரது கொள்கையை போற்றும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்கள்கூட அந்த சாதி சங்க மாநாட்டில் கலந்துகொள்கிறார் என்றால், பெரியார் கொள்கை என்னவாயிற்று? எனக்கு புரியவில்லை.

பெரியார் கொள்கையை இன்னும் அடிபிழறாமல் பரப்பிக்கொண்டிருக்கின்றோம் என்று கூறும் பெரியார் திடல் ஐயா கி.வீரமணி, எந்த அண்டர் கிரவுண்டில் இருக்கிறாரோ தெரியவில்லை.

இந்த மண்ணும் மக்களும் ’முத்தமிழ் அறிஞர்’ என கொண்டாடிய கலைஞரின் வாரிசு, பெரியாரின் பேரன்கள் மு.க.ஸ்டாலின் எந்த தேசாந்திரத்தில் இருக்கிறார் என்றே தெரியவில்லை.

பேசியது தமிழர்களை உள்ளடக்கியிருக்கும் தன் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும், அதுவும் தன் கட்சியின் நிர்வாகியாக இருந்துகொண்டே அப்படி பேசியதில், ‘கட்சிக்கும்- அந்த பேச்சுக்கும் தொடர்பில்லை’ என்றுகூட வைகோவால் சொல்ல முடியவில்லை. கண்டிக்க முடியவில்லை. வருத்தம்கூட தெரிவிக்க மனமில்லை.

தவிர, ஓட்டுப்பொறுக்கும் அரசியல் எங்களுக்கு வேண்டாம் என சொல்லிக்கொள்ளும், ‘முற்போக்கு’ அமைப்புகள்கூட பெட்ஷீட்டை போர்த்திக்கொண்டு, உலகம் இருண்டு விட்டது. விடியும்போது பார்க்கலாம் என இருக்கிறார்கள்.

தோழர் கொளத்தூர் மணி பற்றியெல்லாம் நான் எழுத மாட்டேன். அப்புறம் அவர், ‘இந்த ஏகலைவன், தமிழ் சமூகத்திலிருந்தே அப்புறப்படுத்த வேண்டிய ஆள்’ என்று ஆள்போட்டு எழுதி, கூட கொஞ்சம் ஆள்வைத்து அசிங்கமாக திட்ட வைப்பார். எதற்கு வம்பு.

அதனால் பொதுவாகவே கேட்கிறேன்.

உங்களுக்கு என்ன பிரச்சனை.? ஸ்டாலின், வைகோ, விஜயகாந்த், இவர்களுக்கு தெலுங்கு பேசும் மக்களின் வாக்குகள் சிதறிவிடும் என்ற பயம் இருக்கலாம். அதே போல் அந்தந்த கட்சிகளில் இருக்கும், ‘தமிழுணர்வாளர்களுக்கு’, தமிழ் தாங்கிகளுக்கு தெலுங்கு மக்களின் ஓட்டுகள் சிதறிவிடும் என்ற அச்சம் இருக்கலாம். அதனால் எதிர்த்து கேட்க முடியாது. சாதி கட்டுப்பாட்டை மீற முடியாதல்லவா. அது பெரியாருக்கு செய்த துரோகமாகிவிடும்.

ஆனால், ஓட்டு பொறுக்கும் அரசியலே வேண்டாம் என்றிருக்கிற ஐயா வீரமணிக்கு என்ன ஆனது.? அவரை போன்ற கருப்பு முற்போக்காளர்களுக்கு என்ன ஆனது? அட கம்யூனிஸ்ட்டுகளுக்குகூட இது தவறென்று தெரியவில்லையே. அப்படி கண்டனம் தெரிவித்தால் அடுத்து அதிகாரத்திற்கு வரும், ஸ்டாலின்- வைகோவை எல்லாம் எந்த முகத்தோடு போய் பார்க்க முடியும். ஆதாயம் தேட முடியும்?

சரி, தமிழ்- தமிழர்கள் என்று பேசி ஓட்டுகேட்ட விஜயகாந்த் எங்கே போனார்? நல்ல மனிதன்தான். உடல்நிலை சரியில்லை, அமெரிக்காவில் இருக்கிறார்தான். அதனாலென்ன? ஒரு அறிக்கை விட்டிருக்கலாமல்லவா. ஏன் மௌனம், சொந்த இன மக்களை பகைத்துக்கொண்டால் ஓட்டும்- ஆதரவும் போய்விடும் அல்லவா..?

அப்படி என்றால் தமிழர்களின் வாக்கு? அவனிடம் நாளை என்னவென்று போய் ஓட்டுபிச்சை கேட்கப்போகிறீர்கள். ’ஆகவே தமிழர்களே’ என்றா? அவனுக்கு என்ன பதிலை தரப்போகிறீர்கள். சொந்த தெலுங்கு சாதியிடம் மீசையை வைத்துக்கொண்டு- தமிழ் சாதியிடம் மீசை வழித்துவிட்டா வரப்போகிறீர்கள்.? வெட்கமாக இல்லை?

சாதி மறுப்பு- பெரியார் கொள்கைவாதிகளே, பதில் தாருங்கள்?

இந்த பேச்சை பெ. மணியரசனோ, சீமானோ, இயக்குனர் களஞ்சியமோ, வ.கௌதமனோ, பி.எஸ்.பி. ஆம்ஸ்ட்ராங்கோ இன்னபிற தமிழ் உணர்வாளர்களோ- தமிழரகளோ பேசியிருந்தால், ‘இனவெறியை- சாதி வெறியை தூண்டுகிறார்கள்’ என வேட்டியில்லாமலே வீதிக்கு வந்து குதித்திருக்க மாட்டீர்கள்.?

இனவெறியை- இன மோதலை தூண்டினார்கள் என்று இந்த அரசு வழக்கு போட்டிருக்காது? அல்லது போட வைத்திருக்க மாட்டீரகள்? சொல்லுங்கள் யோக்கியர்களே..

எங்கே இருக்கிறீர்கள்.?

அந்த சாதி-இனத்தின் வாக்குகள் மீது- வாக்காளர்கள் மீது அச்சம் இருக்கும்போது, தமிழ்- இனத்தின் மீது- வாக்காளர்கள் மீது அச்சம் இல்லாமல் போவதேன்.?

ஏனென்றால் இங்கே, வன்னியனாக, பறையனாக, முக்குலத்தோனாக, பள்ளராக, முதலியாராக, கொங்கு வெள்ளாள கவுண்டனாக, இன்னபிற சாதியானாக பிரித்துவைத்து, மோதவிட்டு ரத்தம் குடித்துகொண்டிருக்கும் உங்களிடமே தமிழர்களுக்கான நியாயத்தை கேட்க முடியாதுதான்.

என்ன செய்வது,? எங்கள் ஆட்களும் உங்களிடம்தானே, ‘தொகுதி சீட்டு’ கேட்டு வரிசையில் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

ஐயா வீரமணி, தளபதி ஸ்டாலின், புரட்சிப் புயல் வைகோ, கேப்டன் விஜயகாந்த் ஆகியோருக்கெல்லாம் ஒரே ஒரு வேண்டுகோள். அல்லது சவால்.

நீங்கள் எல்லாம் ஆந்திராவிலோ, தெலுங்கானாவிலே, கர்நாடகத்திலோ, அல்லது கேரளாவிலோ..எங்கேனும் ஒரு இடத்தில் மேடையமைத்து,…

தமிழர்களை- பெ.மணியரசன், சீமான், இயக்குனர் களஞ்சியம், பி.எஸ்.பி. ஆம்ஸ்ட்ராங்கை, வ.கௌதமனை, உள்ளிட்ட யாரோனும் ஒருவர்களை அந்த மேடையில் தனமணி வெங்கிட் நாயுடு அம்மா பேசியதைப் போன்று ஒரு வார்த்தை பேசிவிட்டு வந்துவிடுங்களேன் பார்ப்போம்.

அவ்வளவு வேண்டாம், உங்களிடமே இருக்கும் ‘திராவிடப் பொங்கல்’ வைக்கும் ஐயா கி.வீரமணியையோ, ஐயா சுப. வீரபாண்டியன் அவர்களையோ, தோழர் திருமாவளவனையோ, சகோதரர் வேல்முருகனையோ இன்னபிற ஆதரவாளர்களையோ அப்படி பேச வைத்துவிட்டு அழைத்து வந்துவிடுங்களேன் பார்ப்போம்.

அதுகூட வேண்டாம், யாரேனும் ஒரு தமிழ் இளைஞர் பெங்களூருவிலோ, திருப்பதியிலோ இங்கி, ‘தமிழ் வாழ்க. இமயம் வரை கொடிகட்டி ஆண்ட தமிழினம் வாழ்க’ என்று சும்மாவாச்சும் ஒரு கோஷம் போட்டுவிட்டு வந்துவிட முடியுமா?
.
ஒரே ஒரு முறையேனும் அப்படிச் செய்துகாட்டுங்கள்..

நீங்கள் நினைப்பதைப் போலவே காலம் முழுதும் தமிழர்கள் அடிமையாகவே இருந்துவிட்டுப் போகிறோம்.

முடியுமா ‘தமினத்’ ‘தமிழர்’ தலைவர்களே???

குறிப்பு- நான் கேட்பது, இனதுவேசம் அல்ல. இன விரோதமும் அல்ல. உங்களின் மௌனம்தான் இனத்துரோகம். அந்த சமூகத்து ’மக்கள்’ எனக்கு மனிதர்களாகவும்- நல்ல நண்பர்களாவுமே இருக்கிறார்கள். அவர்களைப் போன்றவர்களை அவமானப்படுத்தும் தனமணி வெங்கிட் நாயுடு போன்றவர்களையும், மௌனம் காக்கும் தலைவர்களையுமே கேள்வி கேட்கிறேன்.

பா.ஏகலைவன். பத்திரிகையாளர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.