பிறந்தநாளிற்கு சாக்லேட்டுக்கு பதில் அரசு பள்ளி மாணவர் என்ன கொடுத்தார் தெரியுமா..?

0 297

தன் மகனின் பிறந்தநாளுக்கு அவன் படிக்கும் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு மிட்டாய்க்குப் பதிலாக 60 பலா மரக்கன்றுகள் கொடுக்க வைத்து அசத்தியிருக்கிறார் இயற்கை விவசாயி ஒருவர். இது, அந்தப் பள்ளியிலும் பகுதியிலும் பெரும் ஆச்சர்யத்தையும் வரவேற்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகில் உள்ளது சேந்தன்குடி என்ற கிராமம். இங்கு வசிப்பவர் கண்ணன் என்ற விவசாயி. இவர், பல வருடங்களாகவே தனது நிலத்தில் பாரம்பர்ய முறையில் இயற்கை விவசாயம் மற்றும் மலர் சாகுபடி செய்து வருகிறார். தவிர, ஆலங்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயற்கை சார்ந்த பல முன்னெடுப்புகளைத் தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறார். தவிர, ‘மரம் வளர்ப்போர் அமைப்பு’ ஒன்றையும் நடத்தி வருகிறார். இவர், ‘சொல் வேறு… செயல் வேறு’ என்று இல்லாமல் செய்த காரியம் ஒன்று பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இவருக்குத் தமிழழகன் என்ற மகனும் பொற்ச்செல்வி என்ற மகளும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் சேந்தங்குடி தொடக்கப் பள்ளியில் படித்து வருகிறார்கள். இதில், தமிழழகனுக்கு நேற்று (1.2.2018) பிறந்தநாள். அதைத் தன் மகன் படிக்கும் பள்ளியில் அவனைக்கொண்டே ஐந்து மரக்கன்றுகள் ஊன்றியும் அந்தப் பள்ளியில் படிக்கும் 60 மாணவ, மாணவிகளுக்கு சாக்லேட்டுக்குப் பதிலாக, பலா மரக்கன்றுகள் கொடுத்தும் அசத்தி இருக்கிறார் கண்ணன்.

அவரிடம் பேசினோம். “மரம் வளர்ப்பு விஷயங்கள், இயற்கை விவசாயம் குறித்த விழிப்பு உணர்வு போன்றவற்றை சிறு குழந்தைகளிடமிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் என்று இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அடிக்கடி சொல்வார். அவர் வழியில்தான் நானும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன். இந்த மாற்றத்தை என் வீடு, என் வயல்களிலிருந்து ஆரம்பித்து, தொடர்ந்து செயல்படுத்தி வருகிறேன். என் மகன், மகள் பிறந்த நாளுக்கு கேக் வெட்டுவதோ சாக்லேட் வழங்குவதோ கிடையாது. பிள்ளைகளுக்காக அன்றைக்கு வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம் இருக்கும். ஆனால், வெளிநாட்டு முறைப்படி கொண்டாட்டம் இருக்காது. நமது தமிழ் முறைப்படிதான் இருக்கும். மகன் பிறந்தநாளுக்கு அவன் அணிவதற்கு புதிதாக வேட்டி சட்டைதான் எடுப்பேன். பொற்ச்செல்விக்கு பாவாடை சட்டைதான். வீட்டுக்கு வருகிறவர்களுக்கு வடை, பாயாசம், அப்பளத்துடன் சைவ விருந்து உண்டு. அதேபோல், என் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் உள்ள அத்தனை மாணவர்களுக்கும் மரக்கன்றுகள் கொடுக்க பழக்கி வருகிறேன். இந்தச் செயலை கடந்த மூன்று வருடங்களாகச் செய்து வருகிறேன். பள்ளிப் பிள்ளைகளும் ஆர்வமுடன் வாங்கிச் சென்று, தங்கள் வீடுகளில் வளர்த்து வருகின்றார்கள். ஒவ்வொரு வருடமும் பழ மர்க்கன்றுகள்தான் கொடுக்கிறேன். அப்போதுதான் பிள்ளைகள் ஆர்வத்துடன் அவற்றை வளர்ப்பார்கள். இந்த வருடம் எல்லோருக்கும் பலா மரக்கன்றுகள் கொடுக்க வைத்தேன்” என்றார் கண்ணன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.