பெருகிவரும் சிசேரியன்..!இதற்கு முக்கிய காரணம், தனியார் மருத்துவமனைகளா , அரசு மருத்துவமனையகளா..?

0 458

நாடு முழுவதும் சுகப்பிரசவத்துக்கு பதிலாக தேவையற்ற சிசேரியன் பிரசவங்கள் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம், மத்திய அரசு அளித்த புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. மேலும், ஒரு சிசேரியன் பிரசவத்துக்கு ₹1 லட்சம் வரை செலவாவதால், 2ம் குழந்தையை பெற்றுக்கொள்ள பெற்றோர் விரும்புவதில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது. சாதாரண சுகப்பிரசவத்திற்கு எதிரான சிசேரியன் அறுவை சிகிச்சை பிரசவத்தில், தாய் மற்றும் குழந்தையை காப்பாற்றும் ஒரு நடைமுறையாக, பெண்ணின் அடி வயிற்று பகுதியில், கர்ப்பப்பை கீறப்பட்டு, பிரசவம் பார்க்கும் சிக்கலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.

இது, கருச்சிதைவு, நீண்ட உழைப்பு, அதிக ரத்தப்போக்கு, நீரிழிவு நோய் அல்லது எச்ஐவி உடன் கருவுற்றிருத்தல் போன்ற மருத்துவத்துறை அவசரங்களை உள்ளடக்கிய சிசேரியன்களாக பார்க்கப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம், தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் பிரசவம் என்ற போக்கு பெருகி வருவதுதான். தேவையின்றி சிசேரியன் செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. சாதாரண பிரசவம் கூட ஆபத்தான சூழலில் மேற்கொள்ளப்படுகிறது.

ஆண்டுதோறும் உலகில் மேற்கொள்ளப்படும் 64 லட்சம் தேவையற்ற சிசேரியன் பிரசவங்களில் 50 சதவீதம் சீனா மற்றும் பிரேசிலில் நடக்கிறது.

கடந்த 2016ம் ஆண்டுடன் முடிந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை பிரசவங்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதாக, தனியார் நிறுவன ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி, இந்தியாவில் 9 சதவீதத்தில் இருந்து 18.5 சதவீதமாகவும், உலகளவில் 21 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

தவிர்க்க வேண்டிய இந்த சிசேரியன் பிரசவ முறையால், தாய்- குழந்தை இருவரின் உயிருக்கு ஆபத்தோ அல்லது செயல்படாத நிலையயோ ஏற்படலாம் என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) தனது அறிக்கையில் எச்சரித்திருந்தது.

தேவையின்றி மேற்கொள்ளப்படும் சிசேரியன்களால், தாய் அவரது குடும்பத்திற்கும் நிதிச்சுமையை உண்டாக்குகிறது. ‘சிசேரியன் அறுவை சிகிச்சை பிரசவத்திற்காக ₹1 லட்சம் செலவாகியுள்ளது.

இரண்டாவது குழந்தை பெறுவதை இனி நாங்கள் யோசிக்க வேண்டியுள்ளது’ என்று, சிசேரியன் மூலம் குழந்தையை பெற்ற பெண்கள் கூறுகின்றனர். ஒரு நாட்டில் 10 முதல் 15 சதவீதம் வரை நடக்கும் பிரசவங்கள் சிசேரியனாக இருக்கலாம் என்று, ஆண்டு உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்தியாவில் சிசேரியன் பிரசவங்கள் விகிதம் பரவலாக வேறுபடுகிறது. இது நாகாலாந்து மற்றும் பீகாரில் 6% மற்றும் தெலங்கானாவில் 58% என்று தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

நாட்டில் அதிகபட்சமாக சிசேரியன் பிரசவங்களை கொண்டிருப்பது சண்டிகர் 98 சதவீதமாகும். இங்கு ஒரு குழந்தை சாதாரண பிரசவத்திலும், 60 குழந்தைகள் சிசேரியன் பிரசவத்திலும் பிறக்கின்றன. டெல்லியில், 67.83% என்ற அளவில் உள்ளது.

கடந்த 15 ஆண்டுகளில் தெற்காசிய நாடுகளில் சிசேரியன் பிரசவங்கள் எண்ணிக்கை, 6.1 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது, வங்கதேசம் (30.7%), இலங்கை (30.5%), இந்தியா (18.5%), நேபாளம் (9.6%) மற்றும் பாகிஸ்தான் (15.9%) என்ற அளவில் நடக்கின்றன.‘இந்திய சுகாதாரத்துறையில், கடந்த 14 ஆண்டுகளில் முறையற்ற சிசேரியன்களை மேற்கொள்ளும் தனியார் மருத்துவமனைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; சிசேரியன் பிரசவங்களால் தனியார் துறை லாபம் ஈட்டி வருகின்றன” என்றும் ஆய்வில் கூறப்படுகிறது.

இந்தியாவில், நகர்ப்புறங்களில் 45% சிசேரியன் பிரசவங்கள் தனியார் மருத்துவமனைகளாலும், கிராமப்புறங்களில் 38% என்று மேற்கொள்ளப்படுகிறது. மத்திய அரசின் சுகாதார திட்டத்தின்படி, சுகாதார நிலையங்களில் 56% சிசேரியன் மூலம் பிரசவங்கள் நடைபெறுவதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2005-06ம் ஆண்டு முதல் 2015-16க்கு இடைப்பட்ட காலத்தில் தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் பிரசவங்கள் 28 சதவீதத்தில் இருந்து 41 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதேநேரம், அரசு பொது மருத்துவமனைகளில், இந்த விகிதம் குறைந்துள்ளதாக, மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, இந்தியாவில் நடக்கும் தேவையற்ற சிசேரியன்களை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

நன்றி : தினகரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.